Published : 09 May 2025 08:32 AM
Last Updated : 09 May 2025 08:32 AM
முதல் பார்வையில், ‘ஆபரேஷன் சிந்தூர்' என்பது பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 9 இடங்களில் ஒருங்கிணைந்த தாக்குதலாகத் தெரிகிறது. ஆனால் இந்த நடவடிக்கை, இந்திய சமூகம் மற்றும் அரசியல் பற்றி ஆழமானப் புரிதலுடன் பிரதமர் நரேந்திர மோடியால் எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் 22-ல் பஹல்காமில் பாகிஸ்தான் தொடர்புடைய தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். மணமான இந்துப் பெண்களின் நெற்றித் திலகம் துடைக்கப்பட்ட துயரம் நிகழ்ந்தது. இதற்கு 15 நாட்களில் மே 7-ல் இந்தியா பதிலடி கொடுத்துள்ளது. இதற்கானப் பெயரை இந்திய ராணுவம் முதன்முறையாக கவனமாக சிந்தித்தது. காரணம் இந்த நடவடிக்கையை இந்திய மக்களுடன் உணர்வுபூர்வமாக இணைக்கவும் விரும்பியது. இதற்கு பிரதமர் மோடியே யோசித்து 'ஆபரேஷன் சிந்தூர்’ எனப் பெயரிட்டிருந்தார். இந்த தாக்குதல் பாகிஸ்தானுக்கு கற்பனை செய்து பார்த்திராத சேதத்தை ஏற்படுத்தி விட்டது.
இந்திய ராணுவ நடவடிக்கை தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தும் பொறுப்பு, ராணுவத்தின் இரண்டு பெண் அதிகாரிகளான கர்னல் சோபியா குரேஷி, விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகியோருக்கு அளிக்கப்பட்டது. இந்திய ராணுவ நடவடிக்கையில் பாகிஸ்தானின் ஜிஹாதி உள்கட்டமைப்பு குறி வைக்கப்பட்டது. மாறாக, பொதுமக்கள் மற்றும் ராணுவ இலக்குகள் குறி வைக்கப்படவில்லை. இதை இரு நாடுகளுக்கு
இடையிலான போர் என்றில்லாமல், தீவிரவாதத்திற்கு எதிரான போராக பிரதமர் மோடி திட்டமிட்டார்.
இதுபோன்ற நடவடிக்கையில் மேற்கத்திய நாடுகள் கடந்த காலங்களில் ஈடுபட்டுள்ளன. இவை அனைத்துக்கும் மேலாக பிரதமர் மோடி தனது தாக்குதலால், பாகிஸ்தானுக்கும் அதன் தீவிரவாதிகளுக்கும் பலவித நெருக்கடிகளை ஏற்படுத்தி விட்டார்.
சதுரங்க ஆட்டத்தின் சிறந்த வீரர்கள் ஒரே ஒரு காய் நகர்த்தலில் பல இடங்களில் சிக்கலை உருவாக்குவது உண்டு. இந்தவகையில், பிரதமர் மோடியும் ஆபரேஷன் சிந்தூரில் வைக்கப்பட்ட ஒரே இலக்கு, ஒன்பது தாக்குதலுக்கு காரணமாகி விட்டது. இந்த தாக்குதலால் இந்தியர்கள், குறிப்பாக பெண்கள், மாநில அரசுகள் மற்றும் எதிர்க்கட்சிகளும் திருப்தி அடைந்துள்ளதை பார்க்க முடிகிறது.
கடந்த 2014-ல் தொடங்கிய மோடி அலையின் வீச்சு, 2019-ல் குறைந்ததாகக் கருதப்பட்டது. 2024 மக்களவைத் தேர்தலில் இது ஓய்ந்ததாகவும் பேச்சுக்கள் எழுந்தன. இச்சூழலில் ஆபரேஷன் சிந்தூர், மீண்டும் மோடி அலைக்கு உயிர் கொடுத்துள்ளது. அவரது துணிச்சலான தலைமையை வெளிப்படுத்த தொடங்கி உள்ளது. பாஜகவும் தனது ‘எக்ஸ்' பதிவில் ராணுவ தாக்குதல் மற்றும் பிரதமர் மோடி வாக்குறுதியின் காட்சிப் பதிவுகளை இணைத்து வெளியிட்டுள்ளது. இந்தப் பதிவுகளில் பல ஒரு வரி வாசகங்கள் பிரதமர் மோடியின் புகழை மீண்டும் பரப்பத் தொடங்கியுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT