Published : 09 May 2025 05:39 AM
Last Updated : 09 May 2025 05:39 AM
புதுடெல்லி: ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், குஜராத் மாநிலங்களில் 15 நகரங்களை குறிவைத்து பாகிஸ்தான் நேற்று நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலை வான் பாதுகாப்பு ஏவுகணைகள் மூலம் இந்தியா வெற்றிகரமாக முறியடித்தது. இந்தியா கொடுத்த பதிலடியில், பாகிஸ்தானில் லாகூர் உட்பட பல இடங்களில் அமைக்கப்பட்டிருந்த வான் பாதுகாப்பு ரேடார்கள் அழிக்கப்பட்டன.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடந்த மாதம் 22-ம் தேதி நடத்திய கொடூர தாக்குதலில் சுற்றுலா பயணிகள் உட்பட 26 பேர் உயிரிழந்தனர். இதற்கு இந்தியா நேற்று முன்தினம் பதிலடி கொடுத்தது. ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கைகள் மூலம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் 9 இடங்களில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது இந்தியா திட்டமிட்ட துல்லிய தாக்குதலை நடத்தியது. இந்த 25 நிமிட தாக்குதலில், தீவிரவாத முகாம்களை குறிவைத்து 24 குண்டுகள் வீசப்பட்டன. இதில், லஷ்கர்-இ-தொய்பா முகாம்கள், ஜெய்ஷ்-இ-முகமது தலைமையகம் உட்பட பல கட்டிடங்கள் சேதமடைந்தன. இந்த தாக்குதலில் 100 தீவிரவாதிகள் உயிரிழந்தனர்.
‘தீவிரவாத முகாம்களை மட்டுமே இந்திய படை தாக்கியது. ராணுவ முகாம்கள் மீது தாக்குதல் நடத்தப்படவில்லை. பாகிஸ்தான் பதில் தாக்குதலில் இறங்கினால், மீண்டும் பதிலடி கொடுக்க இந்தியா தயாராக உள்ளது’ என்று நேற்று முன்தினமே பாகிஸ்தான் தரப்புக்கு எச்சரிக்கப்பட்டது.
இந்த சூழலில், இந்தியா மீது பதில் தாக்குதல் நடத்துமாறு பாகிஸ்தான் ராணுவத்துக்கு அந்நாட்டு பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் உத்தரவிட்டார். இதையடுத்து, எல்லை பகுதியில் உள்ள ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஜம்மு, ஸ்ரீநகர், அவந்திபுரா, பஞ்சாப் மாநிலம் பதான்கோட், அமிர்தசரஸ், கபூர்தலா, ஜலந்தர், லூதியானா, ஆதம்பூர், பதிண்டா, சண்டிகர், ராஜஸ்தான் மாநிலம் நல், பலோடி, உத்தர்லை, குஜராத் மாநிலம் புஜ் ஆகிய 15 நகரங்களில் உள்ள இந்திய ராணுவ முகாம்களை குறிவைத்து ஏவுகணைகள், ட்ரோன்களை பாகிஸ்தான் ராணுவம் நேற்று முன்தினம் இரவு வீசத் தொடங்கியது.
பாகிஸ்தான் தரப்பில் இருந்து நிச்சயம் தாக்குதல் நடைபெறும் என்று இந்திய ராணுவம் ஏற்கெனவே ஊகித்திருந்த நிலையில், அதற்கான முன்னேற்பாடுகள், கண்காணிப்பு நடவடிக்கைகள் பல மடங்கு அதிகரிக்கப்பட்டிருந்தன. அதன்படி, ஐசியுஜி (ஒருங்கிணைந்த ஆளில்லா வான் பாதுகாப்பு கருவி), யுஏஎஸ் (ஆளில்லா வான்பாதுகாப்பு கருவி) மற்றும் ரஷ்யாவிடம் இருந்து வாங்கிய எஸ்-400 வான் பாதுகாப்பு ஏவுகணைகள் ஆகியவற்றின் உதவியுடன், பாகிஸ்தானின் ட்ரோன்கள், ஏவுகணைகள் அனைத்தையும் இந்திய விமானப்படை, நடுவானிலேயே சுட்டு வீழ்த்தியது.
ரஷ்யாவிடம் இருந்து வாங்கிய எஸ்-400 ஏவுகணைக்கு இந்தியா ‘சுதர்சன சக்கரம்’ என பெயரிட்டுள்ளது. எதிரி நாட்டு ஏவுகணை 600 கி.மீ. தூரத்தில் வரும்போதே, இந்த வான் பாதுகாப்பு ஏவுகணை கண்காணிக்க தொடங்கிவிடும். 400 கி.மீ. தூரத்துக்குள் நெருங்கி வரும்போது, நடுவானில் அதை இடைமறித்து அழித்துவிடும்.
இந்திய வான் பாதுகாப்பு ஏவுகணை தாக்கி அழித்ததில், தரையில் விழுந்து நொறுங்கிய பாகிஸ்தானின் ட்ரோன்கள், ஏவுகணை பாகங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. இவை சீன தயாரிப்புகளா என்று ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.
இதற்கிடையே, பாகிஸ்தானின் தாக்குதல் நடவடிக்கைக்கு இந்திய படைகள் நேற்று தக்க பதிலடி கொடுத்தன. லாகூர் உட்பட பாகிஸ்தானின் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டிருந்த வான் பாதுகாப்பு ரேடார்களை குறிவைத்து இந்தியப் படைகள் நேற்று ‘ஹார்ப்பி’ என்ற தற்கொலை படை ட்ரோன்களை வீசின.
இவற்றின் உதவியுடன் நடத்தப்பட்ட தாக்குதலில், லாகூர் உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்த பாகிஸ்தானின் வான்பாதுகாப்பு ரேடார்கள் தகர்க்கப்பட்டன. இந்தியாவின் ட்ரோன் தாக்குதலில் பாக். வீரர்கள் 4 பேர் காயம் அடைந்ததாக பாகிஸ்தான் ராணுவ செய்தி தொடர்பாளர் லெப்டினன்ட் ஜெனரல் அகமது ஷெரீப் சவுத்திரி கூறினார்.
கல்வி நிலையங்கள் மூடல்: பாகிஸ்தானில் அனைத்து கல்வி நிலையங்களுக்கும் 11-ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. போரால் பாதிக்கப்படுபவர்களுக்கு சிகிச்சை அளிக்க 50 சதவீத படுக்கைகளை ஒதுக்கி வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையே, லாகூர், கராச்சி, இஸ்லாமாபாத், சியால்கோட்டில் உள்ள ராணுவ தளங்களை குறிவைத்து இந்திய படைகள் விடிய விடிய தாக்குதல் நடத்தின.
‘ஆபரேஷன் சிந்தூர்’ முடியவில்லை: 3 பாக். போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியது இந்தியா - ஜம்மு விமான நிலையம், பஞ்சாபின் பதான்கோட் விமான நிலையம், ராஜஸ்தானின் நல், பலோடி, உத்தர்லை ஆகிய 3 இடங்களில் உள்ள விமான படைதளங்களை குறிவைத்து பாகிஸ்தான் ட்ரோன்கள் நேற்று இரவு திடீர் தாக்குதல் நடத்த முயற்சி செய்தன. இந்திய விமானப் படை அனைத்து ட்ரோன்களையும் நடுவானில் சுட்டு வீழ்த்தியது.
ஜம்மு எல்லை பகுதியில் நேற்று இரவு அத்துமீறி பறந்த பாகிஸ்தான் விமானப் படையின் எப்-16 ரக போர் விமானத்தை இந்திய விமானப்படை சுட்டு வீழ்த்தியது. இதேபோல பாகிஸ்தான் விமானப் படையின் எப்ஜே-17 ரகத்தை சேர்ந்த 2 போர் விமானங்களையும் இந்திய விமானப்படை சுட்டு வீழ்த்தியது. முன்னெச்சரிக்கையாக ஜம்மு மற்றும் பஞ்சாப், ராஜஸ்தான் எல்லை பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்பட்டதால் அப்பகுதிகள் நேற்று இரவு இருளில் மூழ்கின.
பிரதமர் அவசர ஆலோசனை: பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன், பிரதமர் மோடி நேற்று மீண்டும் ஆலோசனை நடத் தினார். பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையை தொடர்வது குறித்து இதில் தீவிர ஆலோசனை நடத்தப்பட்டது.
எல்லையில் பதற்றத்தை குறைப்பதா, வேண்டாமா என முடிவு எடுப்பது பாகிஸ்தான் கையில்தான் உள்ளது’ என்று வெளியுறவுத் துறை செயலர் விக்ரம் மிஸ்ரி நேற்று கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT