Published : 08 May 2025 06:11 AM
Last Updated : 08 May 2025 06:11 AM
இந்திய ராணுவ தாக்குதலில் மசூத் அசார் குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் மற்றும் அவருடைய 4 உதவியாளர்கள் உயிரிழந்தனர்.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக ‘சிந்தூர் ஆபரேஷன்’ என்ற பெயரில் இந்திய ராணுவம் நேற்று அதிகாலையில் வான்வழி தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் பஹவல்பூரில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பின் தலைமையகமான ஜாமியா மஸ்ஜித் சுபான் அல்லா கட்டிடமும் தாக்குதலுக்கு உள்ளானது.
இதுகுறித்து ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசார் (56) நேற்று கூறியதாவது: இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் என்னுடைய மூத்த சகோதரி, அவருடைய கணவர், என் சகோதரர், 5 குழந்தைகள் உட்பட என் குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் மற்றும் என்னுடைய 4 உதவியாளர்கள் உயிரிழந்தனர். இநத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் அல்லாவின் விருந்தினர் ஆகி விட்டனர்.
இதில் எனக்கு வருத்தமோ, விரக்தியோ இல்லை. மாறாக, இந்த 14 பேர் பயணித்த மகிழ்ச்சியான வாகனத்தில் நானும் இணைந்திருக்க வேண்டும் என மீண்டும் மீண்டும் என் இதயத்தில் தோன்றுகிறது. அவர்கள் புறப்படும் நேரம் வந்துவிட்டது. ஆனால் இறைவன் அவர்களை கொல்லவில்லை. அவர்களின் இறுதி அஞ்சலியில் அனைவரும் பங்கேற்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
கடந்த 1994-ம் ஆண்டு போலி அடையாள அட்டையுடன் காஷ்மீர் வந்த மசூத் அசார் கைது செய்யப்பட்டார். 1999-ம் ஆண்டு காத்மாண்டுவிலிருந்து டெல்லிக்கு புறப்பட்ட இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தை தீவிரவாதிகள் காந்தகாருக்கு கடத்திச் சென்றனர். அப்போது பயணிகளை மீட்பதற்காக நடந்த பேச்சுவார்த்தையில் மசூத் அசார் விடுவிக்கப்பட்டார்.
2001-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தாக்குதல், 2008-ல் நடந்த மும்பை தாக்குதல், 2016-ல் நடந்த பதான்கோட் தாக்குதல், 2019-ல் நடந்த புல்வாமா தாக்குதல் ஆகியவற்றில் மசூத் அசாருக்கு தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதையடுத்து, அசாரை சர்வதேச குற்றவாளி என ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT