Published : 03 May 2025 04:47 PM
Last Updated : 03 May 2025 04:47 PM
கொல்கத்தா: “2014-ம் ஆண்டு மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி அமைந்த பின்னர் அமலாக்கத் துறையால் தொடுக்கப்படும் 98% வழக்குகள் எதிர்க்கட்சிகளைக் குறிவைப்பதாகவே உள்ளன. எஞ்சியுள்ள 2 சதவீதம் வழக்குகள், பாதிக்கப்பட்ட பிறகட்சிகளைச் சேர்ந்தவர்கள் அதிலிருந்து விலகி பாஜகவில் சேர்ந்ததால் சலவை இயந்திரத்தில் வெளுக்கப்பட்டவை ஆகிவிடுகின்றன” என்று திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. சாக்கெட் கோகலே தெரிவித்துள்ளார்.
முன்னதாக, கடந்த வியாழக்கிழமையன்று அமலாக்கத் துறை 69-ம் ஆண்டை நிறைவு செய்ததை ஒட்டி நடந்த நிகழ்வில் பேசிய அதன் இயக்குநர் ராகுல் நவீன், “2014-ம் ஆண்டு நரேந்திர மோடி பிரதமரான பின்னரே அமலாக்கத் துறை தொடரும் வழக்குகளின் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது. அதற்கு முன்னர் சட்டவிரோத பணப் பரிமாற்றத்துக்கு எதிரான சட்டங்கள் செயலற்றதாகவே இருந்தன” என்று பேசியிருந்தார். இதற்குப் பதிலளிக்கும் விதமாக திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை எம்.பி. சாக்கெட் கோகலே தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த பதிவில் சரமாரியாகக் கேள்விகளை எழுப்பியுள்ளார்.
அந்தப் பதிவில், “2014-ம் ஆண்டு மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி அமைந்த பின்னர் அமலாக்கத் துறையால் தொடுக்கப்படும் 98% வழக்குகள் எதிர்க்கட்சிகளைக் குறிவைப்பதாகவே உள்ளன. எஞ்சியுள்ள 2 சதவீதம் வழக்குகள், பாதிக்கப்பட்ட பிறகட்சிகளைச் சேர்ந்தவர்கள் அதிலிருந்து விலகி பாஜகவில் சேர்ந்ததால் சலவை இயந்திரத்தில் வெளுக்கப்பட்டவை ஆகிவிடுகின்றன.
கடந்த 11 ஆண்டுகளில் 5,297 வழக்குகள் அமலாக்கத் துறையால் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் நீதிமன்ற விசாரணைக்கு சென்றவை வெறும் 47 வழக்குகள் மட்டுமே. குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டவை 0.7 சதவீதம் மட்டுமே. அப்படியென்றால், பதிவாக்கும் 1000 வழக்குகளில், 7 வழக்குகளில் மட்டுமே குற்றம் நிரூபிக்கப்படுகிறது. அதனால், அமலாக்கத் துறை பதிவு செய்யும் 1000 வழக்குகளில் 993 வழக்குகள் ஒருவரை சிறையில் வைப்பதற்காக மட்டுமே பதியப்படுகிறது.
ஏனெனில் சட்டவிரோத பணப் பரிமாற்றத் தடைச் சட்டத்தின் ( Prevention of Money Laundering Act ) கீழ் கைதாகும் நபர்கள் ஜாமீன் பெறுவதென்பது அவ்வளவு எளிதானது அல்ல. விசாரணை நடைமுறைக் காலத்தில் குற்றஞ்சாட்டப்பட்டவர் சிறையில் வைக்கப்படுவதையே மத்திய அரசு ஒருவித தண்டனையாகக் கருதுகிறது. இந்த வழக்குகளை அப்பாவிகளை மிரட்ட, அவர்களை உடைந்துபோகச் செய்து தமது உத்தரவுகளுக்குப் பணியவைக்கச் செய்ய பாஜக பயன்படுத்திக் கொள்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.
மூன்று பேர் மட்டுமே விடுவிப்பு - ஆனால், அமலாக்கத் துறை இயக்குநரோ, “அமலாக்கத் துறை (இடி) விசாரணை நடத்தி வரும் 1700 பண மோசடி வழக்குகள் தற்போது விசாரணை கட்டத்தில் உள்ளன. இடி தொடர்ந்த 47 வழக்குகளில் தண்டனை பெற்றுத்தரும் விகிதம் 93.6 சதவீதமாக உள்ளது. மூன்று பேர் மட்டுமே குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். பிஎம்எல்ஏ-வின் கீழ் பதியப்பட்ட 1,739 வழக்குகள் விசாரணை நிலையில் உள்ளன” எனத் தெரிவித்திருந்தார்.
மேலும், “பணமோசடி வழக்கு தொடருவதில் ஏற்படும் தாமதத்துக்கு நாட்டின் நீதி அமைப்பில் உள்ள நடைமுறை சிக்கல்களே பொதுவான காரணமாக இருக்கலாம். அமலாக்கத் துறையை பொருத்தவரையில் தனது விசாரணையில் மேம்பட்ட தொழில்நுட்பத்தையும், தடயவியலையும் பயன்படுத்தும்” என்றும் கூறியிருந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT