Published : 02 May 2025 06:32 PM
Last Updated : 02 May 2025 06:32 PM
புதுடெல்லி: “நல்ல திட்டங்கள், கொள்கைகளை முதலில் எதிர்த்து, அதுகுறித்து அவதூறு பரப்பி, பின்னர் மக்கள் அளிக்கும் நெருக்கடி உள்ளிட்ட காரணங்களால் அதனையே ஏற்றுக்கொள்ளும் பாஜகவின் முந்தைய பாணியிலேயே சாதிவாரி கணக்கெடுப்பு முடிவும் அமைந்திருக்கிறது” என்று காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது.
இது குறித்து காங்கிரஸ் கட்சியின் ஊடகப் பிரிவு பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் நீண்ட பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன் விவரம்: “பல ஆண்டுகளாக சாதிவாரி கணக்கெடுப்பை ஒடுக்க முயன்ற மோடி அரசு, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சி, எண்ணற்ற சமூக செயல்பாட்டாளர்கள் மற்றும் அமைப்புகளின் தொடர் போராட்டம் காரணமாக இப்போது அடிபணிந்துள்ளது. சமூக நீதிக்கான போராட்டத்தில் இது ஒரு முக்கியமான மைல்கல். நேற்று வரை அப்பெயரை சொல்வதைக் கூட தவிர்த்து, அதனைத் தாமதப்படுத்துவதிலும், கேலி செய்வதிலும் எந்தவொரு விஷயத்தையும் தவறவிட்டுவிடாத மோடி அரசு, மக்களின் பெரிய அளவிலான நெருக்கடி மற்றும் எதிர்க்கட்சிகளின் போராட்டத்துக்கு அடிபணிந்துள்ளது.
ஒருவகையில் பாஜக அரசின் வழங்கங்களில் இதுவும் ஒன்று. எந்த ஒரு நல்ல திட்டம் - கொள்கையை முதலில் எதிர்ப்பது, அதனை அவதூறு செய்வது, பொதுமக்களின் அழுத்தம் மற்றும் யதார்த்தம் காரணமாக பின்பு அதனையே ஏற்றுக்கொள்வது. மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் பற்றி நாடாளுமன்றத்தில் ‘இது தோல்வியின் நினைவுச் சின்னம்’ என்று பிரதமர் மோடி கூறியதை நினைத்துக்கொள்ளுங்கள். உலகம், ஊரக வேலைவாய்ப்பு மற்றும் வறுமை ஒழிப்புக்கான மாதிரி எனக் கூறிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் கேலி செய்யப்பட்டது, மக்கள் குழி தோண்டுகிறார்கள் என்று கூறப்பட்டது.
ஆனால், கரோனா போன்ற பேரழிவு காலத்தில் ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் நாட்டின் ஏழை மக்களின் முதுகெலும்பாக மாறியது. பின்பு என்ன நடந்தது? திட்டத்துக்கான நிதியை அதிகரித்த அரசு, அதற்கான பலனை அறுவடை செய்ய முயன்றது. ஆதார் விஷயத்திலும் இதுவே நடந்து, எதிர்க்கட்சியாக இருந்தபோது இது தனியுரிமை மீதான தாக்குதல் என்று சாடிய பாஜக, ஆட்சிக்கு வந்ததும் அனைத்து நலத் திட்டங்களுக்கும் ஆதாரை அடிப்படையாக மாற்றியது. ஜிஎஸ்டி விஷயமும் இதற்கு விதிவிலக்கல்ல. நேரடி பலன் பறிமாற்றம் (Direct Benefit Transfer) திட்டம் காங்கிரஸால் உருவாக்கப்பட்டது. அதனை கடுமையாக எதிர்த்த பாஜக, ஆட்சிக்கு வந்ததும் நேரடி பலன் பறிமாற்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி, அதனை டிஜிட்டல் இந்தியா என்று மார்தட்டிக் கொண்டது. இவை சில உதாரணங்களே இந்தப் பட்டியல் நீளமானது.
உண்மையில், மோடி அரசிடம் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான தொலைநோக்கு பார்வையோ, திட்டங்களோ இல்லை. உண்மையான பிரச்சினைகளில் பொதுமக்களின் கவனத்தை திசைத் திருப்புவது, பிரிவினைவாத கொள்கை போன்றவற்றிலேயே நிபுணத்துவம் பெற்றுள்ளது. அவர்களிடம் இருக்கும் கொள்கைகள், பொய் பிரச்சாரங்கள், வெறுப்பு அரசியலே அவர்களின் கொள்கைகளாக உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
கார்கே கூறியது என்ன? - முன்னதாக, வரவிருக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பையும் சேர்த்து நடத்தும் மிக முக்கிய முடிவை மத்திய அரசு எடுத்தது. இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறும்போது, “மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதி வாரி கணக்கெடுப்பும் எடுக்க வேண்டும் என்று 2 வருடங்களுக்கு முன் மத்திய அரசுக்கு நான் கடிதம் எழுதியிருந்தேன். அப்போது அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. ஆனால், இப்போது ஒப்புதல் அளித்துள்ளனர். இது நல்ல விஷயம், இதற்கு நாங்கள் முழுமையாக ஒத்துழைப்போம்.
இன்றைய நிலவரப்படி, இந்த கணக்கெடுப்புக்கு மத்திய அரசு போதிய நிதி ஒதுக்கவில்லை. பணம் இல்லாமல் கணக்கெடுப்பை எவ்வாறு நடத்த முடியும்? மேலும், கணக்கெடுப்புக்கு காலக்கெடு நிர்ணயிக்க வேண்டும். அவ்வாறு நிர்ணயிக்காவிட்டால் இது நீண்ட காலம் எடுக்கும். முடிந்தவரை கணக்கெடுப்பை சீக்கிரம் நடத்தி, வாக்குறுதியையும் மக்கள் விரும்பியதையும் நிறைவேற்ற வேண்டும் என்பதே எனது கோரிக்கை.
வரவிருக்கும் பிஹார் தேர்தலை மனதில் கொண்டு இம்முடிவு எடுக்கப்பட்டதாக நான் நினைக்கவில்லை. இதில் அரசியல் பேச விரும்பவில்லை. நாங்கள் நல்ல விஷயங்களை வரவேற்கிறோம், கெட்ட விஷயங்களை எதிர்க்கிறோம். ஏனெனில் இந்த நாடும் மக்களும் முக்கியம். இது ஓர் ஏமாற்று வேலையாக இருக்கக் கூடாது. மேலும், பொருளாதார மற்றும் கல்வி கணக்கெடுப்பும் அனைவரையும் திருப்திப்படுத்தும் வகையில் எடுக்கப்பட வேண்டும்” என்று கார்கே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT