Last Updated : 02 May, 2025 08:25 AM

 

Published : 02 May 2025 08:25 AM
Last Updated : 02 May 2025 08:25 AM

டெல்லியில் கனமழையால் விமான சேவை பாதிப்பு: திருப்பி விடப்பட்ட 40+ விமானங்கள்

புதுடெல்லி: டெல்லியில் வெள்ளிக்கிழமை (மே 2) அதிகாலை இடி மின்னலுடன் கூடிய கனமழை பதிவான காரணத்தால் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. 100-க்கும் மேற்பட்ட விமானங்களின் புறப்பாடு, வருகை தாமதமடைந்துள்ளது மற்றும் 40-க்கும் மேற்பட்ட விமானங்கள் திருப்பி விடப்பட்டுள்ளன. மழையுடன் பலத்த காற்றும் வீசியது.

இந்த மழை டெல்லியில் நிலவிய கோடை வெப்பத்தின் தாக்கத்தை நீக்கியுள்ளது. இருப்பினும் மழையால் மக்களின் அன்றாட வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மோசமான வானிலை காரணமாக விமான சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, வெள்ளிக்கிழமை அதிகாலை மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் கொடுத்திருத்தது குறிப்பிடத்தக்கது. அதே போல பாலம் மற்றும் பிரகதி மைதான் ஆகிய பகுதிகளில் மணிக்கு 74+ கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியுள்ளது. இதே போல தலைநகரின் பல்வேறு இடங்களில் பலத்த வேகத்தில் காற்று வீசியுள்ளது.

இந்த திடீர் மழை காரணமாக நகரில் பல்வேறு இடங்களில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. அந்த வகையில் லாஜ்பத் நகர், ஆர்கே புரம், துவாராகா உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கி உள்ளது. இதனால் சாலை போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

மோசமான வானிலை காரணமாக விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது என டெல்லி விமான நிலையம் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளது. ஏர் இந்தியா மற்றும் இண்டிகோ உள்ளிட்ட விமான சேவை நிறுவனங்களும் இது குறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளன. டெல்லி மட்டுமல்லாது சில வட மாநிலங்களிலும் மழை பதிவாகி உள்ளது.

மழை குறையும் வரை மக்கள் வீட்டுக்குள்ளேயே இருக்கவும், ஜன்னல்களை மூடவும், பயணம் செய்வதைத் தவிர்க்கவும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலத்தின் வடக்கு பகுதி, ஹரியானா, இமாச்சல், ராஜஸ்தான் மாநிலத்தின் தென்மேற்கு பகுதி, ஒடிசா, சத்தீஸ்கர், ஆந்திராவின் வட கடலோர பகுதி மற்றும் மேற்கு வங்காளத்தின் சில பகுதிகளிலும் இன்று மழை பொழிய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x