Published : 02 May 2025 06:36 AM
Last Updated : 02 May 2025 06:36 AM
கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள விழிஞ்சம் சர்வதே துறைமுகத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்.
கேரளாவின் திருவனந்தபுரத்தில் விழிஞ்சம் துறைமுகத்தை அதானி நிறுவனம் பொதுத்துறை மற்றும் தனியார் பங்களிப்பின் கீழ் ரூ.8,867 கோடி செலவில் அமைத்துள்ளது. இங்கு பரிசோதனைகள் வெற்றிகரமாக முடிக்கப்பட்டு கடந்தாண்டு டிசம்பர் மாதம் வர்த்தக சான்றிதழ் பெறப்பட்டது. இதன் மூலம் உலகளாவிய கடல்சார் வரைபடத்தில் கேரளாவின் விழிஞ்சம் சர்வதேச துறைமுகம் இடம் பெற்றுள்ளது.
விழிஞ்சம் துறைமுகம் குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியதாவது: இது புதிய துறைமுகம் திறப்பு விழா மட்டும் அல்ல. இது புதிய யுகத்தின் தொடக்கம். இதன் மூலம் இந்தியாவின் வர்த்தகம் மற்றும் சரக்கு போக்குவரத்து உலகளவில் வலுவடையும். விழிஞ்சம் நாட்டின் முதல் பிரத்யேக சரக்கு பரிமாற்ற துறைமுகம். நாட்டின் முதல் தானியங்கி துறைமுகமும் இதுதான். இங்குள்ள கிரேன்கள் முழுவதும் தானியங்கி வகையை சேர்ந்தது. இதனால் சரக்குகளை விரைவில் கையாள முடியும். இது சர்வதேச கப்பல் வழித்தடத்தில் இருந்து 10 நாட்டிகல் மைல் தொலைவில் உள்ளது. இந்த துறைமுகத்தில் மிகப் பெரிய சரக்கு கப்பல்களை நிறுத்த இயற்கையிலேயே ஆழமான பகுதிகள் உள்ளன.
நாட்டின் 75 சதவீத சரக்கு கன்டெய்னர்களை இதுவரை இலங்கையில் உள்ள கொழும்பு துறைமுகம்தான் கையாண்டது. இதனால் நமக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது. இனி சரக்கு கன்டெய்னர்களின் போக்குவரத்து விழிஞ்சம் துறைமுகம் மூலம் நடைபெறும். நாட்டிலேயே மாநில அரசிடமிருந்து மிக அதிகளவிலான முதலீட்டை விழிஞ்சம் துறைமுகம் பெற்றுள்ளது. இத்திட்டத்தின் மொத்த செலவில் 3-ல் இரண்டு பங்கை கேரள அரசு அளித்துள்ளது.
விழிஞ்சம் துறைமுகத்தில் கப்பல் நிறுத்தம் நாட்டிலேயே மிக ஆழமானது. இது 3 கி.மீ தூரம் நீண்டுள்ளது. இங்கு 28 மீட்டர் உயரத்துக்கு கட்டப்பட்டுள்ள 9 மாடி கட்டிடம் மிகப் பெரிய பொறியில் சாதனை. இங்கு கடந்த 3 மாதங்களாக நடைபெற்ற பரிசோதனையில் 272-க்கு மேற்பட்ட சரக்கு கப்பல்கள் துறைமுகத்துக்கு வந்து சென்றுள்ளன. 5 லட்சத்து 50,000 கன்டெய்னர்களுக்கு மேல் இங்கு கையாளப்பட்டுள்ளது.
இங்கு சென்னை ஐஐடியால் உருவாக்கப்பட்ட ஏஐ கப்பல் போக்குவரத்து மேலாண்மை அமைப்பு செயல்பாட்டில் உள்ளது. இங்கு மாதத்துக்க 1 லட்சம் சரக்கு கன்டெய்னர்களை கையாள முடியும். மிகப் பெரிய சரக்கு கப்பல்களில் ஒன்றான் எம்எஸ்சி துருக்கி விழிஞ்சம் துறைமுகம் வந்து சென்றது முக்கியமான நிகழ்வாகும். அதிக சிறப்பம்சங்களுடன் கூடிய விழிஞ்சம் துறைமுகத்தை பிரதமர் மோடி இன்று முறைப்படி திறந்து வைக்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT