Published : 30 Apr 2025 05:02 PM
Last Updated : 30 Apr 2025 05:02 PM
புதுடெல்லி: நாடு முழுவதும் மக்கள்தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி இருப்பதாக அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில், மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன், நிதின் கட்கரி, சிவராஜ் சிங் சவுகான், எஸ். ஜெய்சங்கர், தர்மேந்திர பிரதான், பியூஷ் கோயல், அஸ்வினி வைஷ்ணவ், மனோகர் லால் கட்டார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அஸ்வினி வைஷ்ணவ், “வரவிருக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பில் சாதிவாரி கணக்கெடுப்பு சேர்க்கப்பட வேண்டும் என்று அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு இன்று முடிவு செய்துள்ளது.
காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, அது எப்போதும் சாதிவாரி கணக்கெடுப்பை எதிர்த்தே வந்துள்ளது. 2010-ஆம் ஆண்டில் மறைந்த மன்மோகன் சிங் சாதிவாரி கணக்கெடுப்பு விஷயத்தை அமைச்சரவையில் பரிசீலிக்க வேண்டும் என்று கூறினார். இந்த விவகாரத்தை பரிசீலிக்க அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டது. பெரும்பாலான அரசியல் கட்சிகள் சாதிவாரி கணக்கெடுப்பை வலியுறுத்தியதை அடுத்தே, காங்கிரஸ் அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முடிவு செய்தது.
காங்கிரஸும் இண்டியா கூட்டணி கட்சிகளும் சாதிவாரி கணக்கெடுப்பை ஓர் அரசியல் கருவியாக மட்டுமே பயன்படுத்தியுள்ளனர் என்பது நன்கு புரிந்து கொள்ளப்படுகிறது. சில மாநிலங்கள் சாதிகளைக் கணக்கிட கணக்கெடுப்புகளை நடத்தியுள்ளன. சில மாநிலங்கள் இதைச் சிறப்பாகச் செய்திருந்தாலும், வேறு சில மாநிலங்கள் அரசியல் கோணத்தில் இருந்து மட்டுமே இத்தகைய கணக்கெடுப்புகளை நடத்தின. இத்தகைய கணக்கெடுப்புகள் சமூகத்தில் சந்தேகங்களை ஏற்படுத்தின. அரசியலால் நமது சமூக அமைப்பு பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்ய, மக்கள் தொகை கணக்கெடுப்பில் சாதிவாரி கணக்கெடுப்பு சேர்க்கப்பட வேண்டும்” என தெரிவித்தார்.
மேலும் அவர், “ஷில்லாங்கிலிருந்து சில்சார் வரை ரூ.22,864 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் அதிவேக வழித்தட நெடுஞ்சாலைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அதோடு, 2025-26 சர்க்கரை பருவத்திற்கான கரும்புக்கு நியாயமான மற்றும் லாபகரமான விலை குவிண்டாலுக்கு ரூ.355 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கும் கீழாக விலை நிர்ணயிக்க முடியாது.” என தெரிவித்தார்.
சாதிவாரி கணக்கெடுப்பு: மத்திய அரசு சொல்வது என்ன? - சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு குறித்து மத்திய அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு, எதிர்வரும் மக்கள்தொகை கணக்கெடுப்பில் சாதிவாரி கணக்கெடுப்பையும் சேர்க்க முடிவு செய்துள்ளது. நாடு மற்றும் சமூகத்தின் முழுமையான நலன்கள் மற்றும் மதிப்புகளுக்கு தற்போதைய அரசு உறுதிபூண்டுள்ளது என்பதை இது நிரூபிக்கிறது.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 246-ஆவது பிரிவின்படி, மக்கள்தொகை கணக்கெடுப்பு என்பது ஏழாவது அட்டவணையில் மத்தியப் பட்டியலில் 69-வது இடத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. சில மாநிலங்கள் சாதிகளைக் கணக்கிட கணக்கெடுப்புகளை நடத்தியிருந்தாலும், இந்த ஆய்வுகள் வெளிப்படைத்தன்மை மற்றும் நோக்கத்தில் வேறுபடுகின்றன. சில கணக்கெடுப்புகள் முற்றிலும் அரசியல் கோணத்தில் நடத்தப்படுகின்றன. இது சமூகத்தில் சந்தேகங்களை உருவாக்குகிறது.
இத்தகைய சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டும், நமது சமூகக் கட்டுமானம் அரசியல் நிர்ப்பந்தத்தின் கீழ் வராமல் இருப்பதை உறுதி செய்யவும், சாதிவாரி கணக்கெடுப்பை ஒரு தனி கணக்கெடுப்பாக நடத்துவதற்குப் பதிலாக பிரதானக் கணக்கெடுப்பில் சேர்க்க வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இது பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் வலுவடைவதை உறுதி செய்யும். மேலும் நாட்டின் முன்னேற்றம் தடையின்றி தொடரும். சமூகத்தில் பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டபோது, அது சமூகத்தின் எந்தப் பிரிவினரிடமும் பதற்றத்தை உருவாக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சுதந்திரம் அடைந்ததிலிருந்து நடத்தப்பட்ட அனைத்து மக்கள்தொகை கணக்கெடுப்பு நடவடிக்கைகளிலும் சாதிவாரி கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படவில்லை. 2010-ம் ஆண்டில், அப்போதைய பிரதமர் மறைந்த டாக்டர் மன்மோகன் சிங் மக்களவையில் சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரம் அமைச்சரவையில் பரிசீலிக்கப்படும் என்று உறுதியளித்தார். இந்த விஷயத்தில் விவாதிக்க அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டது. மேலும் பெரும்பாலான அரசியல் கட்சிகள் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த பரிந்துரைத்தன. எனினும், முந்தைய அரசு சாதிவாரி கணக்கெடுப்புக்கு பதிலாக சமூக - பொருளாதார மற்றும் சாதிவாரி கணக்கெடுப்பு என்று அழைக்கப்படும் கணக்கெடுப்பைத் தேர்ந்தெடுத்தது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT