Published : 29 Apr 2025 12:28 AM
Last Updated : 29 Apr 2025 12:28 AM
இந்திய கடற்படைக்காக ரூ.63 ஆயிரம் கோடியில் 26 ரபேல்-எம் போர் விமானங்களை வாங்குவது தொடர்பாக இந்தியா, பிரான்ஸ் இடையே நேற்று ஒப்பந்தம் கையெழுத்தானது.
உலக அளவில் மிகவும் திறமையான போர் விமானங்களில் ஒன்றாக ரபேல்-எம் கருதப்படுகிறது. இது இப்போது பிரான்ஸ் கடற்படையில் மட்டுமே இயங்கி வருகிறது. இதையடுத்து, இந்திய கடற்படைக்காக இந்த ரக விமானங்களை வாங்குவது தொடர்பாக பிரான்ஸின் தஸ்ஸோ நிறுவனத்துடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வந்தது.
பேச்சுவார்த்தை முடிவடைந்த நிலையில், ரூ.63 ஆயிரம் கோடியில் 26 ரபேல்-எம் ரக போர் விமானங்களை வாங்குவது தொடர்பான ஒப்பந்தம் இந்தியா, பிரான்ஸ் இடையே நேற்று கையெழுத்தானது. மத்திய பாதுகாப்புத் துறை செயலாளர் ராஜேஷ் குமார் சிங்கும் தஸ்ஸோ நிறுவன உயர் அதிகாரியும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். அப்போது கடற்படை துணை தளபதி கே.சுவாமிநாதன் உடன் இருந்தார்.
இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இந்த ஒப்பந்தத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கடந்த 9-ம் தேதி நடைபெற்ற பாதுகாப்பு தொடர்பான மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.
இந்த ஒப்பந்தத்தின்படி, 22 ரபேல்-எம் விமானங்கள் ஒற்றை இருக்கையுடன் கூடியதாகவும், 4 விமானங்கள் இரண்டு இருக்கைகளுடன் கூடிய பயிற்சி விமானமாகவும் இருக்கும். இவற்றில் சில ஆயுதங்கள், சிமுலேட்டர்கள் இருக்கும். மேலும் விமானங்களின் பராமரிப்பு, தளவாட ஆதரவு மற்றும் பணியாளர் பயிற்சி ஆகியவற்றையும் தஸ்ஸோ நிறுவனம் வழங்கும்.
இதன் விநியோகம் அடுத்த சில ஆண்டுகளில் தொடங்கும் என்றும் 2031-க்குள் அனைத்து விமானங்களும் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும் என்று அந்த ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளது.
ஐஎன்எஸ் விக்ராந்த் மற்றும் ஐஎன்எஸ் விக்ரமாதித்யா ஆகிய போர்க்கப்பல்களில் இருந்து இப்போது செயல்படும் மிக்-29-கே ரக போர் விமானங்களுக்கு பதிலாக இந்த ரபேல்-எம் போர் விமானங்கள் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்படும்.
இந்தியாவின் சுயசார்பு இலக்கை ஆதரிக்கும் வகையில், இந்த விமானங்களில் இந்தியாவின் அஸ்த்ரா உள்ளிட்ட ஏவுகணைகள் பொருத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஒப்பந்தம், இந்தியா-பிரான்ஸ் இடையிலான ராஜ்ஜிய உறவுகளை வலுப்படுத்துவதுடன் வருங்காலத்தில் இணைந்து உற்பத்தி செய்வது மற்றும் தொழில்நுட்பங்களை பரிமாறிக்கொள்வது ஆகியவற்றுக்கான சாத்தியக்கூறுகளையும் கொண்டுள்ளது.
இந்திய விமானப்படையில் தஸ்ஸோ நிறுவனத்தின் 36 ரபேல் ரக போர் விமானங்களை ஏற்கெனவே செயல்பாட்டில் உள்ளன. இந்த புதிய ஒப்பந்தத்தின் மூலம் இந்தியாவில் இயக்கப்படும் ரபேல் ரக போர் விமானங்களின் எண்ணிக்கை 62 ஆக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT