Published : 29 Apr 2025 12:10 AM
Last Updated : 29 Apr 2025 12:10 AM

செந்தில் பாலாஜி ஜாமீனுக்கு எதிரான வழக்கு முடித்துவைப்பு: முழு விவரம்!

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீனுக்கு எதிரான வழக்கை உச்ச நீதிமன்றம் நேற்று முடித்துவைத்தது.

தமிழக அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டதாக செந்தில் பாலாஜி மீது குற்றம் சாட்டப்பட்டது. இதுதொடர்பாக கடந்த 2023-ம் ஆண்டு ஜூனில் அமலாக்கத் துறை அவரை கைது செய்தது. சிறையில் இருந்தபோது அவர் இலாகா இல்லாத அமைச்சராக நீடித்தார். இதனால் அவருக்கு ஜாமீன் வழங்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. கடந்த ஆண்டு பிப்ரவரியில் அவர் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து கடந்த செப்டம்பர் 26-ம் தேதி செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. சிறையில் இருந்து வெளியே வந்தவுடன் அவர் மீண்டும் அமைச்சராக பதவியேற்றார்.

அவருக்கு வழங்கிய ஜாமீனை ரத்து செய்யக்கோரி வித்யா குமார் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். “அமைச்சராக இல்லை என்று கூறி ஜாமீன் பெற்ற செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராகி உள்ளார். அவருக்கு எதிராக சாட்சி அளிக்க யாரும் முன்வர மாட்டார்கள். எனவே அவருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய வேண்டும்" என்று வித்யாகுமார் கோரினார்.

இந்த வழக்கை நீதிபதிகள் அபய் எஸ்.ஓஹா, அகஸ்டின் ஜார்ஜ் மாசி கடந்த 23-ம் தேதி விசாரித்தனர். அப்போது நீதிபதிகள் கூறும்போது, “செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வேண்டுமா அல்லது அமைச்சர் பதவி வேண்டுமா என்பதை அவரே முடிவு செய்து கொள்ளட்டும். ஏப்ரல் 28-ம் தேதிக்குள் அவர் பதில் அளிக்க வேண்டும்" என்று உத்தரவிட்டனர். உச்ச நீதிமன்றம் கெடு விதித்த நிலையில் செந்தில் பாலாஜி நேற்று முன்தினம் பதவியை ராஜினாமா செய்தார்.

இந்த சூழலில் அவரது ஜாமீனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் அபய் எஸ்.ஓஹா, அகஸ்டின் ஜார்ஜ் மாசி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தது குறித்து அவரது தரப்பு வழக்கறிஞர்கள் கபில் சிபல், முகுல் ரோத்தகி ஆகியோர் நீதிபதிகளிடம் தெரிவித்தனர். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீனுக்கு எதிரான வழக்கை முடித்துவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x