Published : 28 Apr 2025 03:57 PM
Last Updated : 28 Apr 2025 03:57 PM
திருவனந்தபுரம்: கேரள முதல்வர் பினராயி விஜயனின் அதிகாரபூர்வ இல்லமான கிளிஃப் ஹவுஸுக்கும், முதல்வர் அலுவலகத்துக்கும் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்துத் துறை கமிஷனர் அலுவலகம், தலைமைச் செயலகம் உள்ளிட்ட இடங்களுக்கும் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், கொச்சி சர்வதேச விமான நிலையத்துக்கும் வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது.
கேரள முதல்வர் இல்லம் மற்றும் அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ள நிலையில், மாநில போலீஸார் சம்பந்தப்பட்ட இடங்களில் தீவிர சோதனை நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளனர். மோப்ப நாய்களுடன் சிறப்பு குழுக்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். எனினும், இதுவரை எந்த வெடிகுண்டுகளும் கண்டுபிடிக்கப்படவில்லை. அதேபோல், கொச்சி விமான நிலையத்துக்கு காலை 7.53 மணிக்கு மின்னஞ்சல் வழியாக வெடிகுண்டு மிரட்டல் வந்தது. அதில் "விமான நிலையத்துக்குள் வெடிகுண்டு மறைத்து வைக்கப்பட்டுள்ளது. அனைவரும் மதியத்துக்குள் விமான நிலையத்தை காலி செய்துவிடுங்கள்" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
முன்னதாக, ஞாயிற்றுக்கிழமை திருவனந்தபுரம் விமான நிலையத்துக்கு மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அங்கு நடந்த தீவிர சோதனைக்கு பின்பு மிரட்டல் புரளி என்று தெரியவந்தது.
கடந்த மூன்று வாரங்களாக கேரளாவின் பல்வேறு பகுதிகளில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வரும் பின்னணியில் இந்த வெடிகுண்டு மிரட்டல்களும் வந்துள்ளன. இந்த மிரட்டல்களில் பெரும்பாலானவை புரளி என்று தெரியவந்தன. எனினும், இவை பாதுகாப்பு அமைப்புகளிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளன. விழிஞ்சம் துறைமுகத்தை திறந்து வைப்பதற்காக மே 2-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி திருவனந்தபுரம் வர உள்ளார். இந்த நிலையில், காவல் துறையினரும் உளவுத் துறையினரும் இதுபோன்ற ஒவ்வொரு மிரட்டல்களையும் மிகவும் தீவிரமாக கருதுகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT