Published : 28 Apr 2025 03:18 PM
Last Updated : 28 Apr 2025 03:18 PM
ஸ்ரீநகர்: “பயங்கரவாதத்துக்கு எதிரான மக்களின் போராட்டத்தை எனது அரசு வலுப்படுத்தும். ஏனெனில் பொதுமக்களின் ஒத்துழைப்பால் மட்டுமே அதை தோற்கடிக்க முடியும். துப்பாக்கியால் பயங்கரவாதியை கட்டுப்படுத்த முடியாது, ஆனால் மக்கள் நம்முடன் இருந்தால் பயங்கரவாத்தை முடிவுக்குக் கொண்டுவர முடியும். அதற்கான நேரம் வந்துவிட்டதாக நான் நினைக்கிறேன்” என்று ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையில் அம்மாநில முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை கண்டித்து ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் மீதான விவாதத்தில் பேசிய அம்மாநில முதல்வர் உமர் அப்துல்லா, “பயங்கரவாதத்துக்கு எதிரான மக்களின் போராட்டத்தை எனது அரசு வலுப்படுத்தும். ஏனெனில் பொதுமக்களின் ஒத்துழைப்பால் மட்டுமே அதை தோற்கடிக்க முடியும்.
மக்கள் நம்முடன் இருக்கும்போது தீவிரவாதமோ அல்லது பயங்கரவாதமோ நிச்சயம் முடிவுக்கு வரும். பயங்கரவாதத்துக்கு எதிரான மக்களின் கோபத்தைக் கருத்தில் கொண்டு, நாம் சரியான நடவடிக்கைகளை எடுத்தால், அதுவே அதன் முடிவின் தொடக்கமாகும். மக்களை அந்நியப்படுத்தும் எந்த நடவடிக்கையையும் நாம் எடுக்கக் கூடாது. துப்பாக்கியால் பயங்கரவாதியை கட்டுப்படுத்த முடியாது; ஆனால், மக்கள் நம்முடன் இருந்தால் பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டுவர முடியும். அதற்கான நேரம் வந்துவிட்டதாக நான் நினைக்கிறேன்.
ஜம்மு காஷ்மீர் முழுவதும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தன்னிச்சையான போராட்டங்கள் நடந்தன. வெள்ளிக்கிழமை தொழுகைக்கு முன் ஸ்ரீநகரின் ஜாமியா மசூதியில் முதல் முறையாக இரண்டு நிமிட மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. அதன் அர்த்தத்தை நாம் புரிந்து கொள்ள முடியும். இந்த மாற்றத்தை வலுப்படுத்த முயற்சிப்போம்” என்று தெரிவித்தார்.
தீர்மானம்: பஹல்காம் தாக்குதல் தொடர்பாக ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தில் துணை முதல்வர் சுரிந்தர் சவுதரி, ஏப்.22-ம் தேதி நடந்த பஹல்காம் தாக்குதல் பற்றி ஒரு தீர்மானத்தை தாக்கல் செய்தார். அந்தத் தீர்மானத்தில், “பஹல்காமில் அப்பாவி பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட மனிதாபிமானமற்ற தாக்குதல் குறித்து இந்த அவை தனது அதிர்ச்சியையும், கவலையையும் வெளிப்படுத்துகிறது. இந்தக் கோழைத்தனமான கொடுமையான தாக்குதலை இந்த அவை கடுமையாக கண்டிக்கிறது.
இந்த பயங்கரவாத தாக்குதல் காஷ்மீரின் தனித்துவமான கலாச்சார அடையாளம், அமைதி, நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமை மீது நடத்தப்பட்ட நேரடித் தாக்குதலாகும். இந்தத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு இந்த அவை ஆறுதலாக நிற்கிறது. தங்களின் அன்புக்குரியவர்களை இழந்து வாடுகிறவர்களுக்கு அவை தனது இரங்கலையும், வருத்தத்தையும் பகிர்ந்து கொள்கிறது.
பங்கரவாதிகள் தாக்குதலின் போது அவர்களுடன் துணிச்சலுடன் போராடி சுற்றுலா பயணிகளைக் காக்க தனது இன்னுயிரை இழந்த சைது அடில் ஹுஸைன் ஷாவின் தியாகத்தை இந்த அவை போற்றுகிறது. அவரின் துணிச்சல் மற்றும் தன்னலமில்லாத தன்மை காஷ்மீரின் உண்மையான உணர்வினை வெளிப்படுத்துகிறது. மேலும் எதிர்கால சந்ததியினருக்கு ஒரு உத்வேகமாக செயல்படும்.
ஏப்.23-ம் தேதி நடந்த பாதுக்காப்பு அமைச்சரவைக் குழு கூட்டத்துக்கு பின்பு, மத்திய அரசு அறிவித்துள்ள தூதரக ரீதியிலான நடவடிக்கைகளை இந்த அவை அங்கீகரிக்கிறது.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT