Published : 28 Apr 2025 02:42 PM
Last Updated : 28 Apr 2025 02:42 PM
ஜம்மு: ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மற்றும் குப்வாரா மாவட்டங்களில் தொடர்ந்து 4-வது நாளாக போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
கடந்த வாரம் காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பின்பு இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வருகிறது. இந்தநிலையில் தொடந்து 4-வது நாள் எல்லைக்கட்டுப்பாட்டு கோடு அருகேயான போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் துப்பாக்கிச்சூடு நடத்தி உள்ளது.
இதுகுறித்து இந்திய ராணுவ அதிகாரிகள் கூறுகையில், “ஏப் 27 - 28 இடைப்பட்ட இரவில், பூஞ்ச் மற்றும் குப்வரா மாவட்டங்களின் எல்லைக்கட்டுப்பாடு கோடு அருகே பல இடங்களில் பாகிஸ்தான் ராணுவம் சிறிய துப்பாக்கிச் சூடு சம்பவங்களை நடத்தியுள்ளது. இந்திய ராணுவம் இதற்கு உரிய நேரத்தில் தக்க பதிலடி கொடுத்துள்ளது” என்றனர். இந்த தாக்குதல்களில் உயிர்ச் சேதம் ஏதும் பதிவாகவில்லை.
பாகிஸ்தான் ராணுவம் எல்லைக்கட்டுப்பாடு கோடு அருகே உள்ள பல்வேறு இடங்களில் ஏப்.24 வியாழக்கிழமை இரவு துப்பாக்கிச் சூடு நடத்தியது. அதேபோல், 25-26 மற்றும் 27-28 ஆகிய இரவுகளிலும் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதல்களுக்கு ஒவ்வொரு முறையும் சரியான பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.
பஹல்காம் தாக்குதலுக்கு எல்லை தாண்டிய பயங்கரவாதம் காரணமாக இருக்கலாம் என்று இந்தியா கருதும் நிலையில், ஏப்.23-ம் தேதி பல்வேறு எதிர்நடவடிக்கைகளில் ஈடுபட்டது. அதில் 1960-ம் ஆண்டு சிந்து நதிநீர் ஒப்பந்தம் நிறுத்திவைப்பு, அட்டாரி எல்லை வழி மூடல், பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் வெளியேற்றம் போன்றவையும் அடங்கும்.
அதேபோல், அட்டாரி எல்லை வழியாக இந்தியாவுக்குள் வந்த பாகிஸ்தானியர்கள் மே 1-ம் தேதிக்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவின் நடவடிக்கைகளுக்கு பாகிஸ்தானும் எதிர்நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. ஏப்.24-ம் தேதி அந்நாடு இந்திய விமானங்களுக்கு தனது வான் எல்லையை மூடுவதாகவும், மூன்றாம் உலக நாடுகள் வழியாக நடக்கும் வர்த்தகம் உட்பட இந்தியாவுடனான வர்த்தகத்தை நிறுத்துவதாகவும் அறிவித்தது.
மேலும் சிந்து நதி நீர் ஒப்பந்த நிறுத்தத்தை நிராகரித்துள்ள பாகிஸ்தான், ஒப்பந்தத்தின் படி தனது நாட்டுக்கு சொந்தமான பங்கினை நிறுத்திவைக்கும் எந்த ஒரு செயலும் போர் நடவடிக்கையாக பார்க்கப்படும்.” என்று தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT