Published : 28 Apr 2025 02:19 PM
Last Updated : 28 Apr 2025 02:19 PM
புதுடெல்லி: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளை ‘போராளிகள்’ என பிபிசி தனது கட்டுரையில் குறிப்பிட்டதற்கு கண்டனம் தெரிவித்து மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.
“காஷ்மீர் மீதான கொடிய தாக்குதலுக்குப் பிறகு இந்தியர்களுக்கான விசாக்களை பாகிஸ்தான் நிறுத்தி வைத்துள்ளது” என்ற தலைப்பிலான கட்டுரையில், பயங்கரவாதத் தாக்குதலை “போராளித் தாக்குதல்” என்று பிபிசி குறிப்பிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் வெளி விளம்பரம் மற்றும் பொது ராஜதந்திரப் பிரிவு, பிபிசியின் இந்தியத் தலைவர் ஜாக்கி மார்டினுக்கு கடிதம் எழுதியுள்ளது.
அந்தக் கடிதத்தில், “பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடர்பான பிபிசியின் கட்டுரையில், “இந்திய நிர்வாகத்துக்கு உட்பட்ட காஷ்மீரில் 26 சுற்றுலாப் பயணிகளைக் கொன்ற ‘போராளி தாக்குதலை’ தொடர்ந்து பதற்றம் அதிகரித்ததால், பாகிஸ்தான் இந்தியாவுக்கு எதிராக பதிலடி நடவடிக்கைகளை எடுத்துள்ளது.” என குறிப்பிட்டிருப்பதை சுட்டிக்காட்டியுள்ளது. இதற்கு கடுமையான எச்சரிக்கையை தெரிவித்துள்ள மத்திய அரசு, பிபிசியின் செய்தி அறிக்கைகளை வெளியுறவு அமைச்சகம் தொடர்ந்து கண்காணிக்கும் என்று தெரிவித்துள்ளது.
சில நாட்களுக்கு முன்பு, பஹல்காம் பயங்கரவாதிகளை “போராளிகள்” என்று தங்கள் செய்தி அறிக்கையில் ‘தி நியூயார்க் டைம்ஸ்’ தெரிவித்திருந்தது. இதனை, அமெரிக்க செனட் குழு கடுமையாக விமர்சித்தது. தாக்குதல் நடத்தியவர்களை ‘போராளிகள்’ மற்றும் ‘ஆயுதம் ஏந்தியவர்கள்’ என்று அழைப்பதன் மூலம் பயங்கரவாத தாக்குதலின் தீவிரத்தை நீர்த்துப்போகச் செய்ய முயல்வதாக நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையை அமெரிக்க நாடாளுமன்ற வெளியுறவுக் குழு விமர்சித்தது. மேலும், இது ஒரு பயங்கரவாத தாக்குதல் என்பது தெளிவாக உள்ளது. அது இந்தியாவாக இருந்தாலும் சரி, இஸ்ரேலாக இருந்தாலும் சரி, பயங்கரவாதத்தைப் பொறுத்தவரை நியூயார்க் டைம்ஸ் உண்மையில் இருந்து வேறுபடுகிறது என்று அந்தக் குழு தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருந்தது.
முன்னதாக, உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில் 63 மில்லியன் சந்தாதாரர்களைக் கொண்ட 16 பாகிஸ்தான் யூடியூப் சேனல்களை இந்தியா தடை செய்தது. முன்னாள் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தரின் யூடியூப் சேனல், 3.5 மில்லியன் சந்தாதாரர்களைக் கொண்டது. அதுவும் தடை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT