Published : 28 Apr 2025 01:34 PM
Last Updated : 28 Apr 2025 01:34 PM
புதுடெல்லி: “பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பாஜக அரசாங்கம் தான் பொறுப்பேற்க வேண்டும். பயங்கரவாதிகள் அங்கிருந்தவர்களின் மதம் பற்றி கேட்ட பிறகு அவர்களைக் கொன்றதாக பாஜக கூறுகிறது. பயங்கரவாதிகளுக்கு இதற்கெல்லாம் நேரம் இருக்கிறதா என்ன?” என மகாராஷ்டிர காங்கிரஸ் எம்எல்ஏ விஜய் வடேடிவார் விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், பாகிஸ்தானுடன் போர் வேண்டாம் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறியதை, பாகிஸ்தான், செய்தி நிறுவனம் ஒன்று தலைப்புச் செய்தியாக வெளியிட்டது. அதாவது, போருக்கு எதிரான குரல்கள் என்று குறிப்பிட்டு சித்தராமையாவின் கருத்தை பாகிஸ்தான் செய்தி நிறுவனம் வெளியிட்டது பெரும் சர்ச்சையானது.
இந்நிலையில், மற்றொரு மூத்த காங்கிரஸ் எம்எல்ஏ விஜய் வடேடிவார் இது குறித்து கூறுகையில், “பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பாஜக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும். பயங்கரவாதிகள் அங்கிருந்தவர்களிடம் அவர்களின் மதம் பற்றி கேட்ட பிறகு கொன்றதாக பாஜக கூறுகிறது. பயங்கரவாதிகளுக்கு இதற்கெல்லாம் நேரம் இருக்கிறதா என்ன?. சிலர் இது நடக்கவில்லை என்று கூறுகிறார்கள்.
பயங்கரவாதிகளுக்கு சாதி அல்லது மதம் இல்லை. தவறு இழைத்தவர்களை அடையாளம் கண்டு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் இந்திய மக்களின் ஒருமித்த குரலாக இருக்கிறது. முதலில் பாஜக இதை செய்ய வேண்டும், ஆனால் பாஜக அரசு பாகிஸ்தானுக்கு சிந்து நதி நீரை நிறுத்துவது பற்றிப் பேசுகிறது. அதைச் செய்ய 20 ஆண்டுகள் ஆகும்.” என்றார்.
‘பாகிஸ்தான் ஆதரவாளர்கள்’ - முன்னதாக, சித்தராமையாவின் கருத்து பாஜகவின் கடும் கண்டனத்துக்கு உள்ளானது.. பாஜக எம்பி சம்பித் பத்ரா இது குறித்து கூறுகையில், “காங்கிரஸ் பாகிஸ்தான் மொழியில் பேசுகிறது. சித்தராமையாவை உள்ளிட்டோரை காங்கிரஸ் கட்சி வெளியேற்ற வேண்டும்... ஆனால் அவர்கள் அதைச் செய்ய மாட்டார்கள், ஏனென்றால் இதுதான் காங்கிரஸின் உண்மையான முகம்... ராகுல் காந்தி சர்ஜிக்கல் ஸ்டிரைக்குக்கான ஆதாரத்தைக் கோரினார். இன்று, ராகுல் காந்தி, சித்தராமையாவின் கருத்துகள் பாகிஸ்தான் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படுகின்றன. பாகிஸ்தான் அவர்களை தங்கள் ஆதரவாளர்களாகக் கருதுகிறது.” என்று சாடியிருந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT