Published : 28 Apr 2025 12:38 PM
Last Updated : 28 Apr 2025 12:38 PM
புதுடெல்லி: 26 ரஃபேல் கடற்படை போர் விமானங்களைப் பெறுவதற்கான ரூ.63,000 கோடி ஒப்பந்தம் இந்தியா-பிரான்ஸ் இடையே இன்று கையெழுத்தாக இருக்கிறது.
இந்திய கடற்படையில் உள்ள ஐஎன்எஸ் விக்ரமாதித்யா, ஐஎன்எஸ் விக்ராந்த் ஆகிய விமானம் தாங்கி போர்க் கப்பல்களில் பயன்படுத்துவற்காக 45 மிக்-29கே ரக போர் விமானங்கள் உள்ளன. இவை அனைத்தும் ரஷ்யாவிடமிருந்து 2 பில்லியன் டாலர் மதிப்பில் வாங்கப்பட்டவை.
கடற்படை பயன்பாட்டுக்கான போர் விமானங்களை உள்நாட்டில் தயாரிக்க இன்னும் 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகும். இதனால், பிரான்ஸிடமிருந்து 26, ரஃபேல்-எம் ரக போர் விமானங்களை வாங்க கடற்படை முடிவு செய்தது. இதற்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் கடந்த ஆண்டு செப்டம்பரில் ஒப்புதல் வழங்கியது.
இந்த விமானங்களை பிரான்ஸிடமிருந்து ரூ.64,000 கோடிக்கு வாங்க பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கடந்த 9-ம் தேதி ஒப்புதல் அளித்தது. இந்நிலையில், இந்த ஒப்பந்தம் இரு தரப்புக்கும் இடையே இன்று கையெழுத்தாக இருக்கிறது. இந்த ஒப்பந்தத்தில் 22 ஒற்றை இருக்கை ரஃபேல்-எம் ஜெட் விமானங்கள் மற்றும் நான்கு இரட்டை இருக்கை பயிற்சி விமானங்கள் அடங்கும். இந்த ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு 37 முதல் 65 மாதங்களுக்குள் 26 ரஃபேல் போர் விமானங்கள் இந்தியாவுக்கு வழங்கப்படும். 2030-31-ம் ஆண்டுக்குள் அனைத்து விமானங்களும் வழங்கப்படும்.
ரஃபேல்-எம் ஜெட் விமானங்கள், பழைய மிக்-29கே-க்கு பதிலாக, ஐஎன்எஸ் விக்ராந்த் மற்றும் ஐஎன்எஸ் விக்ரமாதித்யாவிலிருந்து இயக்கப்படும். இந்திய விமானப்படை (IAF) ஏற்கெனவே 36 ரஃபேல் போர் விமானங்களை இயக்குகிறது. இந்தப் புதிய ஒப்பந்தம் இந்தியாவில் உள்ள மொத்த ரஃபேல் ஜெட் விமானங்களின் எண்ணிக்கையை 62 ஆக உயர்த்தும், இது நாட்டின் 4.5 தலைமுறை போர் விமானங்களின் கடற்படையை கணிசமாக அதிகரிக்கும். இதுதவிர பிரான்ஸிடமிருந்து ரூ.33,500 கோடியில் 3 ஸ்கார்பீன் ரக நீர்மூழ்கி போர்க்கப்பல்கள் வாங்கும் ஒப்பந்தமும் இறுதி செய்யப்பட்டு வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT