Published : 28 Apr 2025 09:05 AM
Last Updated : 28 Apr 2025 09:05 AM
புதுடெல்லி: இந்தியா மீது அணு ஆயுத தாக்குதல் நடத்தப்படும் என பாகிஸ்தான் அமைச்சர் ஹனிப் அப்பாஸி கூறியிருந்ததற்கு பதிலடி கொடுத்துள்ள மக்களவை உறுப்பினர் அசாதுதீன் ஒவைசி, பஹல்காம் தாக்குதல் நடத்திய தீவிரவாத அமைப்புக்கு தனது கண்டனத்தையும் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறும்போது, “பஹல்காமில் 26 சுற்றுலா பயணிகள், தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்கள் கொல்லப்படுவதற்கு முன்பாக அவர்களின் மதம் என்ன என கேட்கப்பட்டதாக தெரிகிறது. இந்த கொடுஞ்செயலை செய்த நீங்கள் கவாரிஜ்களை விட மோசமானவர்கள். ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் மற்றொரு பிரிவாகவே அறியப்படுவீர்கள். அப்பாவி மக்களின் மத ரீதியான நம்பிக்கை என்ன என கேட்டு அவர்களை கொல்வது இஸ்லாமியத்தில் இல்லவே இல்லை.
இந்தியா உடன் ஒப்பிடும்போது பாகிஸ்தான் அரை நூற்றாண்டுக் காலம் பின்தங்கி உள்ளது. உங்களது தேசிய பட்ஜெட்டை காட்டிலும் எங்கள் நாட்டின் ராணுவ பட்ஜெட் அதிகம். அணு ஆயுதம் கொண்டு தாக்குவோம் என்றெல்லாம் பாகிஸ்தானைச் சேர்ந்த ஆட்சியாளர்கள் இந்தியாவுக்கு மிரட்டல் விடுக்கக் கூடாது. மற்றொரு நாட்டைச் சேர்ந்த அப்பாவி மக்களை கொன்றால், அதை பார்த்துக் கொண்டு யாரும் அமைதியாக இருக்க மாட்டார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
காஷ்மீர் எப்படி இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக உள்ளதோ அதுபோல காஷ்மீர் மக்களும் இருக்கிறார்கள் என்பதை நமது பிரதமர் மோடிக்கு நான் கூற விரும்புகிறேன்” என ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவரான ஒவைசி கூறியுள்ளார்.
முன்னதாக, பஹல்காம் தீவிரவாத தாக்குதலை அடுத்து தீவிரவாதத்துக்கு புகலிடம் அளிக்கும் பாகிஸ்தானை வழிக்கு கொண்டுவர, சிந்து நதிநீர்ப் பங்கீடு ஒப்பந்தத்தை நிறுத்துவது உள்ளிட்ட 5 முக்கிய முடிவுகளை இந்திய அரசு எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT