Published : 28 Apr 2025 08:32 AM
Last Updated : 28 Apr 2025 08:32 AM

பஹல்​காம் தாக்​குதலை தொடர்ந்து கிஷ்த்வாரில் ராணுவ உடைகளை விற்க, இருப்பு வைக்க தடை

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பஹல்காம் தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து கிஷ்த்வாரில் ராணுவ உடைகளை விற்பதற்கும், இருப்பு வைப்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கிஷ்த்வார் துணை ஆணையர் ராஜேஷ் குமார் ஷவான் வெளியிட்ட உத்தரவில், “ பாதுகாப்பு மற்றும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்க நாசகார சக்திகள் முயன்று வருகின்றன. இந்த ஆபத்திலிருந்து தற்காத்துக்கொள்ள பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன" என்று தெரிவித்துள்ளார்.

அதன் ஒரு பகுதியாக கிஷ்த்வாரில் ராணுவ உடைகளை தைப்பதற்கும், விற்பதற்கும், இருப்பு வைப்பதற்கும் தடைவிதித்துள்ளது. அப்படி ராணுவ மற்றும் போர் ஆடைகளை வாங்கி விற்கும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் நிறுவனங்கள் இந்த உத்தரவு வெளியான 15 நாட்களுக்குள் தங்களிடம் உள்ள அங்கீகாரம் குறித்து எழுத்துப்பூர்வமாக அருகில் உள்ள காவல் நிலையத்துக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும், ஒவ்வொரு டீலரும் ராணுவம், போலீஸ் ஆடைகள் விற்பனை தொடர்பான முறையான பதிவேட்டை பராமரிக்க வேண்டும். டீலர்கள் ராணுவ உடைகளை வாங்குபவர்களின் அடையாளத்தை சரிபார்க்க வேண்டும். போர் சீருடைகள் ஆயுதப் படைகளின் உண்மையான உறுப்பினர்களுக்கு மட்டுமே விற்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

பதிவேடுகளை ஆய்வு செய்யும் அதிகாரம், தாசில்தார், மேஜிஸ்திரேட், உதவி சப்இன்ஸ்பெக்டர் அந்தஸ்து அல்லது அதற்கு மேற்பட்ட போலீஸ் அதிகாரிகளிடம் இருக்கும். உத்தரவை மீறும் எந்தவொரு நபரும் சட்டத்தால் பரிந்துரைக்கப்பட்ட தண்டனையை எதிர்கொள்ள நேரிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பஹல்காமில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் யாருக்கும் சந்தேகம் ஏற்படாதபடி ராணுவ சீருடை அணிந்துவந்து 26 பேரை சுட்டுகொன்றனர். இதன் காரணமாகவே, தற்போது ராணுவ உடை விற்பனைக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x