Published : 27 Apr 2025 05:48 PM
Last Updated : 27 Apr 2025 05:48 PM
புதுடெல்லி: இந்தியாவில் தங்கியிருக்கும் பாகிஸ்தானியர்கள் நாட்டைவிட்டு வெளியேறுவதற்கான காலக்கெடு இன்றுடன் நிறைவடையும் நிலையில் அட்டாரி வழியாக பாகிஸ்தானியர்கள் சொந்த நாடு திரும்பி வருகின்றனர்.
கடந்த செவ்வாய்க்கிழமை (ஏப்.22) பஹல்காமில் நடந்த கொடூரத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட நிலையில் இந்தியா, பாகிஸ்தானியர்களுக்கான விசாக்களை ரத்து செய்வது உள்ளிட்ட முக்கிய முடிவுகளை எடுத்தது. அதன்படி சார்க் விசாக்கள் ஏப்.26ம் தேதி நிறைவடைந்தது. மற்ற விசாக்கள் இன்று (ஏப்.27) நிறைவடைகிறது. மருத்துவ விசாக்கள் மட்டும் ஏப்.29 ம் தேதி வரை செல்லுபடியாகும். இந்த முடிவுகளால் இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் வெளியேறுவதற்கான காலக்கெடு இன்றுடன் நிறைவடையும் நிலையில் பாகிஸ்தானியர்கள் அமிர்தரஸில் உள்ள வாகா - அட்டாரி சோதனைச் சாவடி வழியாக வெளியேறி வருகின்றனர். அவர்களின் இந்திய உறவினர்களும் அட்டாரி எல்லைக்கு வந்து தங்களின் கண்ணீருடன் வெளியேறுபவர்களை வழியனுப்பி வருகின்றனர்.
இந்தியாவுக்கு வந்திருந்த பல்வேறு பாகிஸ்தானியர்கள் உறவினர்களின் திருமண நிகழ்வுகளில் கலந்து கொள்ள வந்ததாக தெரிவித்தனர். சரிதா என்பவரின் குடும்பம், ஏப்ரல் 29-ம் தேதியில் நடக்க இருக்கும் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக இந்தியா வந்துள்ளார். ஆனால் திருமணத்தில் கலந்து கொள்ள முடியாமல் நாடு திரும்புகிறார்.
இதுகுறித்து சரிதா கூறுகையில், "நாங்கள் ஒன்பது ஆண்டுகளுக்கு பின்பு இந்தியா வந்துள்ளோம். அவர்கள் (அட்டாரியிலுள்ள அதிகாரிகள்) எங்களின் தாயாரை எங்களுடன் அனுப்ப மறுக்கிறார்கள். என் பெற்றோர் 1991ல் திருமணம் செய்து கொண்டனர். அவர்கள் இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களை அனுமதிக்க மறுக்கின்றனர்." என்றார். சரிதா, அவரின் தந்தை, சகோதரர் பாகிஸ்தானியர்கள், அவரது தாயார் இந்தியர்.
ஜெய்சால்மரைச் சேர்ந்த ஒருவர் தனது தாய் மாமா, அவரது மனைவி, குழந்தைகள் 36 ஆண்டுகளுக்கு பின்பு இந்தியா வந்தனர். இப்போது அவசரமாக திரும்புகின்றனர் என்றார். அவர் கூறுகையில், "எனது மாமா குடும்பத்தினர் 45 நாட்கள் விசாவில் பாகிஸ்தானின் அமர்கோட்டில் இருந்து ஏப்.15ம் தேதி கிளம்பி இந்தியா வந்தனர். நிலைமை இப்படி மாறும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. அவர்கள் எல்லா உறவினர்களையும் பார்க்காமல் நாடு திரும்புகின்றனர்" என்றார்.
பெஷாவரைச் சேர்ந்த ஜனாம் ராஜ் (70) கூறுகையில், "எனது உறவினர்களைச் சந்திப்பதற்காக 45 நாட்கள் விசாவில் இந்தியா வந்தேன். மூன்று வாரங்களுக்கு முன்பு முதல்முறையாக இந்தியா வந்தேன். ஆனால் நிலை இப்போது எப்படி மாறியிருக்கிறது பாருங்கள்" என்று வேதனை தெரிவித்தார்.
தனது அத்தையை வழியனுப்ப அட்டாரி வந்த டெல்லியைச் சேர்ந்த முகமது ஆரிஃப், "பஹல்காம் தாக்குதல் மிகவும் கண்டிக்கத்தக்கது. பயங்கரவாதிகள் மனிதத்தைக் கொன்றனர் அவர்களை மக்கள் முன்னிலையில் தூக்கிலிடப்பட வேண்டும்" என்றார்.
பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா பிராந்தியத்தின் புனேரைச் சேர்ந்த குர்பக்ஸ் சிங் ஏப்.15ம் தேதி இந்தியா வந்துள்ளார். அவர் கூறுகையில், "எனது உறவினர்கள் உட்பட எனது பெரிய குடும்பத்தின் பாதிபேர் இந்தியாவில் வசிக்கின்றனர். பஹல்காமில் நடந்தது முற்றிலும் கண்டிக்கத்தக்கது. அவர்கள் (பயங்கரவாதிகள்) மனிதத்தைக் கொன்றனர், ஆனால் அதன் சுமையை யார் தாங்கவேண்டியது இருக்கிறது என்று பாருங்கள். பல பாகிஸ்தானியர்கள் மருத்துவ சிகிச்சைக்காக இங்கே வந்திருக்கிறார்கள், இப்போது அவர்கள் அனைவரும் திரும்பிச் செல்ல வேண்டியுள்ளது" என்றார்.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ஏற்கனவே பதற்றம் நிலவி வந்த நிலையில், ஏப்.22 பஹல்காம் தாக்குதலுக்கு பின்பு மிகவும் தீவிரமடைந்தது. இந்தத் தாக்குதலுக்கு எதிர்வினையாக சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்திவைப்பு, விசா ரத்து, வர்த்தகம் நிறுத்தம் என பல நடவடிக்கைகளை இந்தியா எடுத்தது. அதில் ஒன்று ஏப். 27ம் தேதிக்குள் இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதும் ஒன்றாகும்.
காலக்கெடுவுக்குள் வெளியேறாத பாகிஸ்தானியர்கள் மீது புதிய குடியுரிமை மற்றும் வெளிநாட்டினர் சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று இந்தியா தெரிவித்திருந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT