Published : 27 Apr 2025 04:35 PM
Last Updated : 27 Apr 2025 04:35 PM

நாட்டின் நலன்களை காக்க தயார் நிலையில் இருக்கிறோம்: இந்திய கடற்படை அறிவிப்பு

புதுடெல்லி: இந்திய கடற்படை போர்க்கப்பல்கள் சமீபத்தில் வெற்றிகரமாக பல கப்பல் எதிர்ப்பு ஏவுகணைச் சோதனைகளை நடத்தியதாக கடற்படையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கடற்படை செய்தித்தொடர்பாளர் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "இந்திய கடற்படை கப்பல்கள் நீண்ட தூர தாக்குதல், தாக்குதல்களுக்கான தளங்கள், அமைப்புகள் மற்றும் துருப்புகளுக்கான தயார் நிலையை மறுபரிசீலனை செய்து நிரூபிக்கும் வகையில், பல்வேறு சோதனைகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டன.

எந்த இடத்திலும், எந்த நேரத்திலும், எந்த வகையிலும் நாட்டின் கடல்சார் நலன்களை பாதுகாப்பதில் இந்திய கடற்படை நம்பகத்தன்மையுடன், அக்கறையுடன் தயார் நிலையில் உள்ளது" என்று தெரிவிள்ளார்.

கடந்த செவ்வாய்க்கிழமை ஏப்.22-ம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப்பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட நிலையில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்தப் பின்னணியில் இந்த போர்க்கப்பல் எதிர்ப்புச் சோதனை நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, இந்திய கடற்படையின் போர்க்கப்பலான ஐஎன்எஸ் சூரத், தரையிலிருந்து வான் இலக்கை தாக்கும் நடுத்தர ரக ஏவுகணைச் சோதனையை வெற்றிகரமாக நடத்தியது. இது அரபிக்கடலின் வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பாகும். அரபிக் கடலில், பாகிஸ்தான் நடத்த திட்டமிட்டிருந்த தரையிலிருந்து தரைக்கு தாக்கும் சோதனைக்கு முன்பாக இந்தியா தனது சோதனைத் தாக்குதலை நடத்தியுள்ளது.

இந்திய கப்பற்படையின் சமீபத்திய உள்நாட்டில் உருவாக்கப்பட்ட ஏவுகணை எதிர்ப்பு கப்பலான ஐஎன்எஸ் சூரத்-ன், நகரும் கடல்கள் இலக்குகளை துல்லியமாக தாக்கும் சோதனை வெற்றி, நமது பாதுகாப்பு திறனை வலுப்படுத்துவதின் மற்றொரு மைல் கல்லைக் குறிக்கிறது என்று கடற்படை எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

இந்தச் சாதனை உள்நாட்டு போர்க்கப்பல் வடிவமைப்பு, வளர்ச்சி மற்றும் செயல்பாடுகளில் இந்திய கடற்படையின் வளர்ந்து வரும் திறமையை நிரூபிக்கிறது. மேலும், பாதுகாப்பு உற்பத்தியில் தன்னிறைவு பெறுவதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை தெரிவிக்கிறது என்று அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

P15B வழிகாட்டப்பட்ட ஏவுகணை எதிர்ப்பு திட்டத்தின் நான்காவது மற்றும் இறுதி போர்க்கப்பலான ஐஎன்எஸ் சூரத், உலகிலுள்ள பெரிய மற்றும் அதிநவீன ஏவுகணை அழிப்பானாகும். இது 75 சதவீதம் உள்நாட்டு தயாரிப்பில் உருவானது. இது அதிநவீன சென்சார் தொகுப்பு மற்றும் மேம்படுத்தப்பட்ட நெட்வொக் திறன்களை கொண்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x