Last Updated : 27 Apr, 2025 04:03 PM

 

Published : 27 Apr 2025 04:03 PM
Last Updated : 27 Apr 2025 04:03 PM

'10 ஆண்டுகளில் 300க்கும் மேற்பட்ட விண்வெளி ஸ்டார்ட் அப்புகள்!' - மனதின் குரலில் பிரதமர் மோடி பெருமிதம்

பிரதமர் மோடி | கோப்புப் படம்

புதுடெல்லி: இந்தியா தனது விண்வெளித் துறையை தனியார் துறைக்கும் திறந்து விட்டதை அடுத்து, கடந்த 10 ஆண்டுகளில் 300கும் மேற்பட்ட விண்வெளி ஸ்டார்ட் அப்புகள் செயலாற்றி வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

மனதின் குரல் வானொலி நிகழ்ச்சி மூலம் இது தொடர்பாக பேசிய அவர், "இரண்டு நாட்கள் முன்பாக மகத்தான அறிவியலாளரான டாக்டர். கே. கஸ்தூரிரங்கன் அவர்களை நாம் இழந்துவிட்டோம். கஸ்தூரிரங்கன் அவர்களை சந்தித்த போதெல்லாம், நாங்கள் பாரத நாட்டு இளைஞர்களின் திறன்கள், நவீன கல்வி, விண்வெளி விஞ்ஞானம் போன்ற விஷயங்கள் குறித்து நிறைய பேசுவோம். விஞ்ஞானம், கல்வி மற்றும் பாரதத்தின் விண்வெளித் திட்டத்தின் புதிய உயரங்களை அளிப்பதில் அவருடைய பங்களிப்பு எப்போதுமே நினைவில் கொள்ளப்படும்.

அவருடைய தலைமையின் கீழ்தான் இஸ்ரோ அமைப்புக்கு புதிய அடையாளம் கிடைத்தது. அவருடைய வழிகாட்டுதலில் விண்வெளித் திட்டம் அடைந்த முன்னேற்றத்துக்கு உலக அளவிலான அங்கீகாரம் கிடைத்தது. இன்று பாரதம் எந்த செயற்கைக்கோள்களைப் பயன்படுத்தி வருகிறதோ, அவற்றில் பல, டாக்டர். கஸ்தூரிரங்கனின் கண்காணிப்பில் ஏவப்பட்டன. அவருடைய ஆளுமை தொடர்பான மேலும் ஒரு சிறப்பான விஷயம் என்னவென்றால், இது இளைய தலைமுறையினருக்கு ஒரு படிப்பினையாக இருக்கும். அவர் எப்போதுமே புதுமைகள் படைத்தலுக்கு மகத்துவம் அளித்து வந்திருக்கிறார். புதியன கற்றல், தெரிதல், புதியன படைத்தல் பற்றிய அவருடைய தொலைநோக்கு மிகவும் உள்ளெழுச்சியூட்டவல்லது.

டாக்டர். கே. கஸ்தூரிரங்கன் அவர்கள் தேசத்தின் புதிய தேசியக் கல்விக்கொள்கையைத் தயாரித்து அளிப்பதிலும் கூட மிகப்பெரிய பங்களிப்பை அளித்திருக்கிறார். டாக்டர். கஸ்தூரிரங்கன், 21ஆம் நூற்றாண்டின் நவீனத் தேவைகளுக்கு ஏற்ப, முன்னோக்குப் பார்வை கொண்ட கல்விச் சிந்தனையை முன்வைத்தார். தன்னலமற்ற தேச சேவை மற்றும் தேச நிர்மாணம் ஆகியவற்றில் அவருடைய பங்களிப்பு என்றும் நினைவில் கொள்ளப்படும். டாக்டர். கே. கஸ்தூரிரங்கன் அவர்களுக்கு பணிவுணர்வோடு நான் என் சிரத்தாஞ்சலிகளை அளிக்கிறேன்.

இந்த மாதம் ஏப்ரலோடு ஆர்யபட்டா செயற்கைக்கோள் ஏவப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவெய்துகின்றது. இன்று நாம் பின்னோக்கிப் பார்க்கையில், 50 ஆண்டுகளின் இந்தப் பயணத்தை அசைபோடும் போது, நாம் எத்தனை தொலைவு பயணித்திருக்கிறோம் என்பதை உணர முடிகிறது. விண்வெளியில் பாரதத்தின் கனவுகள், ஊக்கம் என்ற சிறகுகளைக் கொண்டே மேலெழும்பின. தேசத்திற்காக எதையாவது சாதிக்கவேண்டும் என்ற தாகம் கொண்ட சில இளம் விஞ்ஞானிகள் – அவர்களிடம் இன்றிருப்பது போன்ற நவீன சாதனங்களேதும் இருக்கவில்லை, உலகின் தொழில்நுட்பத்தைப் பெறக்கூடிய அணுகல் இல்லை. எதுவுமே இல்லாத போதும் கூட, அவர்களிடம் திறமைகள், ஈடுபாடு, உழைப்பு மற்றும் தேசத்திற்காக சாதித்துக் காட்டவேண்டும் என்ற பேரார்வம் மட்டுமே இருந்தன.

மாட்டு வண்டிகளிலும், சைக்கிள்களிலும் முக்கியமான கருவிகளைத் தாமே எடுத்துவந்த நமது விஞ்ஞானிகளின் படங்களை நீங்கள் கவனித்திருக்கலாம். அதே ஈடுபாடு மற்றும் தேச சேவையுணர்வின் விளைவாகவே இன்று இத்தனை பெரிய மாறுதல் ஏற்பட்டிருக்கிறது. இன்று பாரதம் ஒரு உலக அளவிலான விண்வெளி சக்தி. நாம் ஒரே நேரத்தில் 104 செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவிய சாதனையைப் படைத்திருக்கிறோம்.

நாம் நிலவின் தென் துருவத்திற்கு செயற்கைக்கோளை அனுப்பிய முதல் நாடாக இருக்கிறோம். செவ்வாயைச் சுற்றிவரும் பயணத்தை பாரதம் ஏவியிருக்கிறது, மேலும் நாம் ஆதித்யா-எல் 1 பயணம் வாயிலாக சூரியனுக்கு வெகு அருகில் சென்றிருக்கிறோம். இன்று உலகனைத்திற்கும் மிகவும் மலிவான விலையில், ஆனால் வெற்றிகரமான விண்வெளித் திட்டத்திற்கான தலைமையை பாரதம் ஏற்றிருக்கிறது. உலகின் பல நாடுகள் தங்களுடைய செயற்கைக்கோள்களை ஏவவும், விண்வெளிப் பயணங்களை மேற்கொள்ளவும் இஸ்ரோ அமைப்பின் உதவியை நாடுகின்றன.

இஸ்ரோ அமைப்பு ஒரு செயற்கைக்கோளை விண்ணில் ஏவுவதைக் காணும்போது, நமக்குப் பெருமிதம் பொங்குகிறது. 2014ஆம் ஆண்டு, பி எஸ் எல் வி – சி – 23 விண்ணில் செலுத்தப்பட்டதை நான் காண நேர்ந்தபோது எனக்குள்ளும் இதே உணர்வுதான் நிரம்பியது. 2019ஆம் ஆண்டில் சந்திரயான் – 2 தரையிறங்கிய வேளையிலும் கூட, நான் பெங்களூரூவின் இஸ்ரோ மையத்தில் இருந்தேன். அந்த வேளையிலே, சந்திரயான் பயணத்தில் நாம் எதிர்பார்த்த வெற்றி கிடைக்காத போது, அது விஞ்ஞானிகளுக்கு மிகவும் கடினமான வேளையாக இருந்தது. ஆனால் அந்த நேரத்தில் விஞ்ஞானிகளின் மனோதிடம் மற்றும் சாதிக்க வேண்டும் என்ற துடிப்பை நான் என் கண்களால் கண்டேன். சில ஆண்டுகள் கழித்து, இதே விஞ்ஞானிகள் சந்திரயான் – 3ஐ எப்படி வெற்றிகரமாகச் செலுத்திக் காட்டினார்கள் என்பதை உலகமே கண்ணுற்றது.

இப்போது பாரதம் தனது விண்வெளித் துறையை தனியார் துறைக்கும் திறந்து விட்டிருக்கிறது. இன்று பல இளைஞர்கள், விண்வெளி ஸ்டார்ட் அப்புகளில் புதிய கொடிகளை நாட்டி வருகிறார்கள். பத்தாண்டுகள் முன்னர் இந்தத் துறையில் ஒரே ஒரு நிறுவனமே இருந்தது, ஆனால் இன்று தேசத்திலே 325ற்கும் மேற்பட்ட விண்வெளி ஸ்டார்ட் அப்புகள் செயலாற்றி வருகின்றன. வரவிருக்கும் காலங்களில் விண்வெளித் துறையில் பல புதிய சாத்தியக்கூறுகள் உருவாக இருக்கின்றன. பாரதம் புதிய உயரங்களை எட்டவிருக்கிறது. தேசம் ககன்யான், ஸ்பேஸ்டெக் மற்றும் சந்திரயான் – 4 போன்ற பல முக்கியமான பயணங்களுக்கான தயாரிப்புகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. நாம் வீனஸ் ஆர்பிடர் மிஷன் மற்றும் மார்ஸ் லேண்டர் மிஷன் தொடர்பான பணிகளிலும் ஈடுபட்டு வருகிறோம். நமது விண்வெளி விஞ்ஞானிகள் தங்களுடைய புதிய கண்டுபிடிப்புகளால் நாட்டுமக்களைப் புதிய பெருமையில் ஆழ்த்த இருக்கிறார்கள்" என குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x