Published : 26 Apr 2025 11:33 PM
Last Updated : 26 Apr 2025 11:33 PM
பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய மற்றொரு பயங்கரவாதியின் வீட்டை பாதுகாப்புப் படையினர் வெடிவைத்து தகர்த்தனர்.
காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் தாக்குதலில் 28 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலில் பாகிஸ்தானின் லஷ்கர் பயங்கரவாத இயக்கத்தின் 4 தீவிரவாதிகள் சம்பந்தப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. இவர்களின் புகைப்படங்களையும் இந்திய ராணுவம் வெளியிட்டிருந்தது.
மேலும் அனந்தநாக் பகுதியில் உள்ள ஆதில், ஆசிப் என்ற இரண்டு பயங்கரவாதிகள் வீட்டில் கடந்த வியாழக்கிழமை இரவு பாதுகாப்புப் படையினர் சோதனை நடத்தினர். அப்போது, ஒரு வீட்டில் ஏராளமான வெடிபொருட்கள் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த வெடிப்பொருட்களை பாதுகாப்புப் படை வீரர்கள் வெடிக்க செய்தனர். இதில் ஒரு வீடு தரைமட்டமானது. மற்றொரு வீடு புல்டோசர் மூலம் இடிக்கப்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நிலையில், வடக்கு காஷ்மீரில் உள்ள குப்வாரா மாவட்டத்தின் கலாரூஸ் பகுதியில் ஃபரூக் அகமது தத்வா என்ற மற்றொரு பயங்கரவாதியின் வீடு அதிகாரிகளால் வெடிவைத்து தகர்க்கப்பட்டுள்ளது. கடந்த 48 மணி நேரத்தில் ஆறு பயங்கரவாதிகள் மற்றும் அவர்களது கூட்டாளிகளின் வீடுகள் இடிக்கப்பட்டுள்ளன என்றும் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடும் மற்றவர்களுக்கு எதிராகவும் இதேபோன்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சனிக்கிழமை ஒரே நாளில் மட்டும் காஷ்மீரில் 60-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. இந்த சோதனைகளில் ஆயுதங்கள், ஆவணங்கள், டிஜிட்டல் சாதனங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இயற்கை எழில் கொஞ்சும் பஹல்காம், இந்தியாவின் ’மினி சுவிட்சர்லாந்து’ என்று அழைக்கப்படுகிறது. கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி இங்கு திடீரென 3 பயங்கரவாதிகள் நுழைந்தனர். அப்போது, அங்கிருந்த சுமார் ஆயிரம் சுற்றுலா பயணிகளை வளைத்து துப்பாக்கி சூடு நடத்தினர். இதில், 2 வெளிநாட்டவர் உட்பட 26 உயிர்கள் பரிதாபமாகப் பலியாகினர். இந்த தாக்குதல் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT