Published : 26 Apr 2025 07:34 PM
Last Updated : 26 Apr 2025 07:34 PM
புதுடெல்லி: சமூக வலைதள பிரபலமான தான்யா மிட்டல், ‘பயங்கரவாதத்துக்கு மதம் இல்லை’ என குறிப்பிட்டிருந்தார். அவரது இந்தக் கருத்துக்கு இணையத்தில் இரு வேறு விதமாக பயனர்கள் எதிர்வினைகளை பதிவு செய்து வருகின்றனர்.
கடந்த 22-ம் தேதி அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் சுற்றுலாப் பயணிகள் 26 பேர் உயிரிழந்தனர். பயங்கரவாதிகளின் இந்த தாக்குதல் தேசம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில்தான் தான்யா மிட்டல் தனது கருத்தை கூறினார். “இந்த விவகாரம் குறித்து எனது கருத்தை சொல்ல நினைக்கிறேன். இது எனக்கு முக்கியமானதும் கூட. ஊடகங்களில் பயங்கரவாதம் மற்றும் பயங்கரவாதிகள் குறித்த பேச்சு இருந்து வருகிறது. பயங்கரவாதத்துக்கு மதம் இல்லை என நான் நினைக்கிறேன்.
காஷ்மீர் சென்ற எனது நண்பர்கள் சில ஸ்ரீநகர் வர உள்ளூர் காஷ்மீர் மக்கள்தான் உதவினார்கள். இந்த நேரத்தில் நாம் சென்சிட்டிவாக யோசிக்க வேண்டும். பயங்கரவாதத்துக்கு மதம் இல்லை. இந்தியாவுக்கு ஒரே ஒரு மதம்தான் இருக்கிறது. அது இந்தியன் என்பதுதான். இந்தியர்கள் நாம் எல்லோரும் ஒன்றாக, ஒற்றுமையாக இருக்க வேண்டும்” என தான்யா தனது பதிவில் கூறியுள்ளார்.
அவரது இந்தக் கருத்து சமூக வலைதள பயனர்கள் சிலரை கொதிப்படைய செய்துள்ளது. மேலும், அவரை சமூக வலைதளத்தில் பின்தொடர்வதை தவிர்க்க வேண்டும் என்றும், மத்தியப் பிரதேச சுற்றுலா துறைக்கு அவர் கன்டென்ட் கொடுத்து வருவதாகவும் தெரிவித்தனர். இந்த நிலையில், தான்யாவுக்கும் தங்களுக்கும் தொடர்பு இல்லை என மத்திய பிரதேச சுற்றுலா துறை விளக்கம் கொடுத்துள்ளது.
காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் குறித்து சமூக வலைதளத்தில் சர்ச்சை கருத்து பதிவிட்ட இரண்டு இளைஞர்களை மீது மத்தியப் பிரதேச மாநில போலீஸார் கடந்த 24-ம் தேதி அன்று கைது செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT