Last Updated : 26 Apr, 2025 10:50 AM

 

Published : 26 Apr 2025 10:50 AM
Last Updated : 26 Apr 2025 10:50 AM

பஹல்காம் தாக்குதல் எதிரொலி - 12 லட்சம் முன்பதிவுகளை ரத்து செய்த சுற்றுலா பயணிகள்

ஸ்ரீநகரின் லால் சவுக்கில் புகைப்படம் எடுத்துக்கொண்ட ஒரு குடும்பம்

புதுடெல்லி: காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் காரணமாக, அம்மாநிலத்துக்கு செல்ல முன்பதிவு செய்திருந்த 12 லட்சத்திற்கும் அதிகமானோர் தங்கள் முன்பதிவுகளை ரத்து செய்துள்ளனர்.

இந்தியாவின் சொர்கபூமியாகக் கருதப்படுவது காஷ்மீர். இதன் ஒரு பகுதியாக அனந்தநாக் மாவட்டத்தில் பஹல்காம் உள்ளது. பஹல்காம் குன்றில் மொத்தம் நான்கு சுற்றுலாத் தலங்கள் அமைந்துள்ளன.

இயற்கை எழில் கொஞ்சும் இந்த பஹல்காம், இந்தியாவின் ’மினி சுவிட்சர்லாந்து’ என்றழைக்கப்படுகிறது. கடந்த ஏப்ரல் 22 இல் இங்கு திடீர் என 3 பயங்கரவாதிகள் நுழைந்தனர். அப்போது, அங்கிருந்த சுமார் ஆயிரம் சுற்றுலா பயணிகளை வளைத்து துப்பாக்கி சூடு நடத்தினர். இதில், 2 வெளிநாட்டவர் உட்பட 26 உயிர்கள் பரிதாபமாகப் பலியாகினர்.

இந்த தாக்குதல் காஷ்மீருக்கு வரும் சுற்றுலா பயணிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இதன் காரணமாக, உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து காஷ்மீருக்கு சுற்றுலா வர திட்டமிட்டிருந்த சுற்றுலா பயணிகள் தங்கள் பயணத்தை ரத்து செய்துள்ளனர்.

இவர்கள் முன்கூட்டியே செய்திருந்த 12 லட்சத்துக்கும் அதிகமான தங்கும் விடுதிகள் மற்றும் ஓட்டல்களின் பதிவுகளை ரத்து செய்துள்ளனர்.

கடந்த 2019 இல் ஜம்மு-காஷ்மீரை யூனியன் பிரதேசமாக மத்திய அரசு அறிவித்தது. அதுவரை பாகிஸ்தான் தீவிரவாதிகளின் தாக்குதல்களால் சூழ்ந்திருந்தது அம்மாநிலம்.

இதையடுத்து பல ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்ட சட்டப்பேரவை தேர்தலும் ஜம்மு-காஷ்மீரில் நடத்தப்பட்டது. தாக்குதலுக்கு சில நாள் முன்பாக ஸ்ரீநகர் சென்றிருந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, காஷ்மீர் தீவிரவாதம் முடிவுக்கு வந்ததாக அறிவித்திருந்தார்.

இந்நிலையில், பஹல்காமில் நடைபெற்ற தாக்குதல் நாடு முழுவதிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூடு, அந்த யூனியன் பிரதேசத்தை கரோனா பரவல் காலச் சூழலுக்கு தள்ளி விட்டது.

காஷ்மீரில் வழக்கமாக பொதுமக்கள் மீது குறிவைப்பதை தீவிரவாதிகள் தவிர்ப்பதுண்டு. ஆனால், முதன்முறையாகச் சுற்றுலாவாசிகளை மட்டும் குறி வைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

பஹல்காமில் பயங்கரவாதிகள் சுற்றுலாப் பயணிகளைக் கொன்ற விதம் காஷ்மீரின் சுற்றுலாத் துறையில் மிக மோசமான விளைவை ஏற்படுத்தியுள்ளது.

காஷ்மீருக்கு ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து அதன் அழகைக் கண்டு ரசிக்கின்றனர். பனி மூடிய மலைகள், நீல ஏரிகள், பசுமை மற்றும் அமைதியான சூழல், காஷ்மீரை சொர்க்க பூமியை போல் உணர வைக்கிறது. இன்று இந்த சொர்க்கத்தில் ஆச்சமுறும் சூழல் பரவியுள்ளது.

2024 ஆம் ஆண்டின் ஒரு புள்ளிவிவரத்தின்படி, காஷ்மீரைப் பார்வையிட 2 கோடியே 36 லட்சம் பேர் வந்து சென்றுள்ளனர். நாள் ஒன்றுக்கு சுமார் 9,500 சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர்.

இதனால், அம்மாநிலத்தின் தங்கும் விடுதிகள் மற்றும் ஓட்டல்கள் நிரம்பியிருந்தன. டாக்சிகள் முன்பதிவு செய்யப்பட்டு, காஷ்மீரின் விற்பனை சந்தைகள் பரபரப்பாக இருந்தன.

இங்குள்ள சுற்றுலாத் துறை மாநிலத்தின் பொருளாதாரத்தில் 8 சதவிகிதம் ஆகும். இங்குள்ள மக்களில் பெரும்பாலானவர்களுக்கு சுற்றுலா மட்டுமே வேலைவாய்ப்பை வழங்குகிறது.

இங்குள்ள உணவு மற்றும் தங்கும் விடுதிகள், டாக்சிகள், கடைகள், கைவினைப்பொருட்கள் மற்றும் உலர் பழங்கள் உள்ளிட்ட விற்பனை நிலையங்கள் லாபம் பெறுகின்றன. குல்மார்க் பகுதி மட்டுமே 2024 இல் ரூ.103 கோடி சம்பாதித்தது.

ஆனால், இந்த ஒரு தாக்குதலுக்குப் பிறகு, நிலைமை திடீரென மாறியது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, இதுவரை 12 லட்சத்திற்கும் அதிகமான முன்பதிவுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

காஷ்மீருக்கான பயணங்களை ரத்து செய்யவோ அல்லது ஒத்திவைக்கவோ பயண முகவர்களுக்கு தொடர்ந்து அழைப்புகள் வருகின்றன. வாடகை வாகனங்களின் நிறுவனங்களுக்கும் இதேநிலை.

பஹல்காமின் பயங்கரவாதச் செயலால், அடுத்த 4-5 மாதங்களுக்கு யாரும் காஷ்மீருக்குச் செல்ல விரும்ப மாட்டார்கள் என்ற கருத்து அம்மாநிலத்தவரிடம் காணப்படுகிறது. கரோனா பரவல் காலத்தால் காஷ்மீரின் பொருளாதாரம் மிகவும் பின்தங்கி இருந்தது. காரோனா பரவல் முடிந்த பின் சற்று மீண்ட வணிகம் உள்ளிட்டவை மீண்டும் அதேநிலைக்கு தள்ளப்பட்டதாகவும் கருத்துக்கள் எழுந்துள்ளன.

தற்போது, பஹல்காமைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு கடுமையாக்கப்பட்டுள்ளது. இத்தகைய சூழ்நிலையில், சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பற்றதாக உணர்கிறார்கள். பஹல்காமில் நடைபெற்றது வெறும் தாக்குதல் மட்டுமல்ல, காஷ்மீரின் சிறந்த சுற்றுலாவை குறிவைத்து நடத்தப்பட்ட சம்பவமும் கூட. எனினும், மத்திய, மாநில அரசுகள் அம்மாநில நிலைமையை, இயல்பு நிலைக்குக் கொண்டுவர முயற்சிக்கின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x