Published : 26 Apr 2025 07:12 AM
Last Updated : 26 Apr 2025 07:12 AM
இடாநகர்: காஷ்மீரின் பஹல்காமில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலின் போது சுற்றுலா பயணிகள் தப்பிப்பதற்கு உதவி செய்து துப்பாக்கி குண்டுகளுக்கு பலியான விமானப்படை வீரர் தாகே ஹைல்யாங்குக்கு மாநில அரசு சார்பில் நினைவிடம் அமைக்கப்படும் என அருணாச்சலப் பிரதேச முதல்வர் பெமா காண்டு அறிவித்துள்ளார்.
அருணாச்சலப் பிரதேசத்தின் சுபான்சிரி மாவட்டம் தஜாங் கிராமத்தை சேர்ந்தவர் தாகே ஹைல்யாங். விமானப்படையில் கார்போரல் அந்தஸ்தில் பணியாற்றும் இவர், விடுமுறையில் தனது மனைவியுடன் காஷ்மீருக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
பஹல்காமில் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களில் தாகே ஹைல்யாங்கும் ஒருவர். தீவிரவாதிகள் தாக்குதலை தொடங்கியதும் இவர் அங்கிருந்து தப்பிச் செல்லாமல், மற்ற சுற்றுலா பயணிகள் தப்பிப்பதற்கு உதவியுள்ளார். இறுதியில் தீவிரவாதிகளின் துப்பாக்கி குண்டுக்கு பலியானார். இவரது உடல் அருணாச்சலப் பிரதேசத்தில் நேற்று அடக்கம் செய்யப்பட்டது.
அருணாச்சலப் பிரதேச முதல்வர் பெமா காண்டு, தாகே ஹைல்யாங் வீட்டுக்கு சென்று அவரது மனைவி மற்றும் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறினார். அதன்பின் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:
அருணாச்சலப் பிரதேசத்தை சேர்ந்த விமானப்படை வீரர் தாகே தஹல்யாங், தீவிரவாத தாக்குதல் நடந்தபோது தப்பிச் செல்ல வாய்ப்பிருந்தும், தைரியத்துடன் சுற்றுலா பயணிகளை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு உயிரிழந்துள்ளார். அவரின் தன்னலமற்ற வீரத்தை போற்றும் வகையில், தாகே ஹைல்யாங்குக்கு அவரது சொந்த ஊரில் மாநில அரசு சார்பில் நினைவிடம் கட்டப்படும். அவரது குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் நிதியுதவி அளித்து, குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு அரசு வேலையும் அளிக்கப்படும்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT