Published : 26 Apr 2025 12:15 AM
Last Updated : 26 Apr 2025 12:15 AM

பாகிஸ்தானியரை அடையாளம் கண்டு உடனே திருப்பி அனுப்ப நடவடிக்கை: முதல்வர்களுக்கு அமித் ஷா அறிவுறுத்தல்

நாட்டில் தங்கியுள்ள அனைத்து பாகிஸ்தானியர்களையும் அடையாளம் காணவேண்டும் என்று அனைத்து மாநில முதல்வர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்தரவிட்டுள்ளார்.

ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலாவுக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் மீது கடந்த 22-ம் தேதி தீவிரவாத கும்பல் தாக்குதல் நடத்தியது. இதில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த காலங்களில் இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் நடந்துள்ள போதிலும், அப்பாவி மக்களைக் குறிவைத்து இதுபோல தாக்குதல் நடத்தப்பட்டது இதுவே முதல்முறை என்பதால் கட்சி பேதமின்றி அனைத்து அரசியல் தலைவர்களும் இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத அமைப்பு இந்த கொடூர செயலில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளதால், பாகிஸ்தான் மீது பல்வேறு தடை நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டு வருகிறது. இதன்படி சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தி வைப்பு, இந்தியா - பாகிஸ்தான் எல்லையாக பஞ்சாபில் அமைந்துள்ள அட்டாரி - வாஹா சோதனைச் சாவடி மூடல் என்பது போன்ற முடிவுகளை மத்திய அரசு எடுத்துள்ளது.

இதைத் தொடர்ந்து, சிம்லா ஒப்பந்தத்தை ரத்து செய்த பாகிஸ்தான், இந்த செயலை போர் தொடுத்ததாகவே கருதுவோம் என தெரிவித்துள்ளது. மேலும் இந்தியாவுக்கான வான்பரப்பு மூடப்படுவதாக தெரிவித்த பாகிஸ்தான், இந்தியாவுடனான வணிக நடவடிக்கைகளையும் நிறுத்தியுள்ளது.

இந்நிலையில் டெல்லியில் நேற்று முன்தினம் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பஹல்காம் தாக்குதல் சம்பவம் பற்றி மத்திய புலனாய்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்த கருத்துகள் எடுத்துரைக்கப்பட்டன. அதில், தாக்குதல் சம்பவம் நடந்த பைசரன் புல்வெளியைத் திறக்க அனுமதி இல்லை என்றும் போலீஸார் அனுமதியின்றி சுற்றுலாப் பயணிகள் புல்வெளிக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, அனைத்து மாநில முதல்வர்களுடன், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று தொலைபேசியில் உரையாடினார். அப்போது, தங்களது மாநிலங்களில் வசிக்கும் பாகிஸ்தானியர்களை அடையாளம் கண்டறிந்து அவர்களை உடனடியாக திருப்பி அனுப்புமாறு அறிவுறுத்தியதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களது விசாக்களை ரத்து செய்து திருப்பி அனுப்புமாறு மத்திய அமைச்சர் அமித் ஷா, முதல்வர்களிடம் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் சார்க் நாடுகள் விசா மூலம் விலக்கு திட்ட (எஸ்விஇஎஸ்) விசா மூலம் பாகிஸ்தான் நாட்டு மக்கள் இந்தியாவுக்கு வர அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அதேபோல், எஸ்விஇஎஸ் விசா பெற்று இந்தியாவில் இருக்கும் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்கள் அடுத்த 48 மணி நேரத்துக்குள் வெளியேற வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மருத்துவ சிகிச்சைக்காக விசா பெற்றுள்ள பாகிஸ்தான் நாட்டவர்க்கு வரும் 29-ம் தேதி வரை மட்டுமே நாட்டில் தங்கியிருக்க அனுமதி தரப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அனுமதிக்கப்பட்ட தினங்களுக்குள் அவர்கள் வெளயேறவேண்டும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x