Published : 25 Apr 2025 05:59 PM
Last Updated : 25 Apr 2025 05:59 PM

‘வக்பு திருத்த சட்டத்துக்கு தடை கூடாது’ - உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு அடுக்கிய காரணங்கள் 

புதுடெல்லி: வக்பு திருத்த சட்டத்துக்கு இடைக்கால தடை விதிக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றத்திடம் கேட்டுக்கொண்டுள்ள மத்திய அரசு, அதற்கான காரணங்களை தமது பதில் மனுவில் விவரித்துள்ளது.

மத்திய அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த 1,332 பக்கங்கள் கொண்ட பதில் மனுவில், ‘வக்பு திருத்த சட்டத்தில் மத சுதந்திரம் பறிக்கப்படும் என்று வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. இந்தச் சட்டம் யாருடைய மத சுதந்திரத்தையும் பறிக்காது. வக்பு நிர்வாகத்தில் திறம்பட்ட மேலாண்மை, வெளிப்படைத் தன்மையை அதிகரிக்கவே சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டு உள்ளன.

நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் பரிசீலனைக்கு பிறகு சட்டத்தில் பல்வேறு திருத்தங்கள் செய்யப்பட்டன. இரு அவைகளிலும் நீண்ட நேரம் விவாதம் நடத்தப்பட்டது. பெரும்பான்மை எம்பிக்களின் ஆதரவுடன் சட்டம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

பொதுவாக, மக்களின் அடிப்படை உரிமைகள் மீறல், சட்டப்பூர்வதன்மை குறித்து மட்டுமே உச்ச நீதிமன்றம் ஆய்வு செய்யலாம். வக்பு என்பது முஸ்லிம் மத அமைப்பு கிடையாது. அது ஒரு சட்டப்பூர்வமான அமைப்பு ஆகும். நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பாக இருந்த வக்பு நிலங்களைவிட தற்போது வக்பு நிலங்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து உள்ளது.

அதாவது, நாடு சுதந்திரம் அடைந்த பிறகு 20 லட்சம் ஹெக்டேர் நிலங்கள் வக்பு நிலங்களாக அறிவிக்கப்பட்டு உள்ளன. இந்த சூழலில் அரசு மற்றும் தனியார் நிலங்கள் முறைகேடாக அபகரிக்கப்படுவதை தடுக்கவே வக்பு சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டு உள்ளன.

மத்திய வக்பு கவுன்சிலில் மொத்தம் 22 உறுப்பினர்கள் உள்ளனர். இதில் முஸ்லிம் அல்லாத 4 பேர் மட்டுமே சேர்க்கப்படுவர். இதேபோல வக்பு வாரியங்களில் 11 உறுப்பினர்கள் உள்ளனர். இதில் முஸ்லிம் அல்லாத 3 பேர் மட்டுமே சேர்க்கப்படுவர். இதனால் வக்பு கவுன்சில், வாரியங்களில் முஸ்லிம்களின் பெரும்பான்மை குறைந்துவிடும் என்று கூறுவது தவறான கருத்தாகும். முஸ்லிம் அல்லாதவர்களின் சொத்துகளையும் வக்பு வாரியங்கள் உரிமை கொண்டாடுகின்றன. இதற்கு தீர்வு காணவே வக்பு கவுன்சில், வாரியங்களில் முஸ்லிம் அல்லாதோர் நியமிக்கப்பட உள்ளனர்.

இந்து மத அமைப்புகள், வக்பு வாரியங்களுக்கு இடையே பல்வேறு வேறுபாடுகள் உள்ளன. இந்து மத அமைப்புகள், இந்து அறக்கட்டளைகள் அந்தந்த மாநில அரசுகளின் சட்ட வரம்புக்கு கீழ் வருகின்றன. இரண்டையும் ஒப்பிட முடியாது.

வக்பு வாரியங்களால் நிலங்களை இழந்த மக்களின் புகார்கள், விவரங்கள் பதில் மனுவோடு இணைக்கப்பட்டு உள்ளன. வக்பு திருத்த சட்டம் தொடர்பாக பல்வேறு அமைப்புகள் வழங்கிய யோசனைகள், நாடாளுமன்ற கூட்டுக் குழு வழங்கிய பரிந்துரைகள் உட்பட அனைத்து அம்சங்களும் பதில் மனுவோடு இணைக்கப்பட்டு இருக்கிறது. அனைத்து ஆவணங்களையும் உச்ச நீதிமன்றம் முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும்.

வக்பு திருத்த சட்டத்துக்கு இடைக்கால தடை விதிக்கக் கூடாது. இந்தச் சட்டத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டிருக்கும் அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும்’ என்று மத்திய அரசின் பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மத்திய அரசு தாக்கல் செய்திருக்கும் பதில் மனு குறித்து அடுத்த 5 நாட்களில் மனுதாரர்கள் தங்களது பதில் மனுக்களை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய அவகாசம் வழங்கப்பட்டிருக்கிறது. ஏஐஎம்ஐஎம் கட்சி உட்பட குறிப்பிட்ட 5 மனுக்கள் மட்டுமே விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்படும் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. இதன்படி குறிப்பிட்ட 5 மனுதாரர்கள் தரப்பில் அடுத்த 5 நாட்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்யப்படும்.

உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே அறிவித்தபடி வரும் மே 5-ம் தேதி வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும். அன்றைய தினம் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட வக்பு திருத்த சட்டம், குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு பிறகு கடந்த 8-ம் தேதி அமலுக்கு வந்தது. இந்த சட்டத்தை எதிர்த்து காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி, ஆம் ஆத்மி, ஏஐஎம்ஐஎம் உள்ளிட்ட கட்சிகள் மற்றும் முஸ்லிம் அமைப்புகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, நீதிபதிகள் சஞ்சய் குமார், கே.வி.விஸ்வநாதன் அமர்வு விசாரித்து வருகிறது. கடந்த 16, 17-ம் தேதிகளில் உச்ச நீதிமன்றத்தில் விரிவான விசாரணை நடைபெற்றது. கடந்த 17-ம் தேதி தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா கூறும்போது, மத்திய அரசு ஒரு வாரத்தில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x