Published : 25 Apr 2025 09:30 AM
Last Updated : 25 Apr 2025 09:30 AM
காஷ்மீரின் பஹல்காம் தீவிரவாத தாக்குதல் சம்பவம் காரணமாக இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவும் நிலையில், டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் ஒருவர் நேற்று கேக் பாக்ஸுடன் சென்றார். இந்த வீடியோ வைரலாக பரவியது.
பஹல்காம் தீவிரவாத தாக்குதல் காரணமாக பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பதிலுக்கு பாகிஸ்தானும் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக கட்டிடத்துக்கு வழங்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பு நேற்று அகற்றப்பட்டது. இரு நாடுகள் இடையே பதற்றமான சூழல் நிலவும், நிலையில் டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்துக்குள் ஊழியர் ஒருவர் கேக் பாக்ஸுடன் சென்றார். அவரிடம் எதற்காக கேக் கொண்டு செல்லப்படுகிறது என நிருபர்கள் கேட்டனர். அதற்கு அந்த ஊழியர் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார். இந்த வீடியோ நேற்று வைரலாக பரவியது.
டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் முன் போராட்டம்: ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த தீவிரவாத தாக்குதலை கண்டித்து டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் அருகே போராட்டம் நடத்தப் போவதாக பல்வேறு அமைப்புகள் அறிவித்திருந்தன. இதையடுத்து அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
இந்நிலையில், பாகிஸ்தான் தூதரகம் அருகே 500-க்கும் மேற்பட்டோர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தடுப்புகளை மீற முயற்சித்தவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர். இந்த போராட்டத்தில், பாஜகவினரும் தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கை மன்றம் உள்ளிட்ட சமூக அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் பங்கேற்றனர்.
அப்போது, இந்தியாவில் தீவிரவாத செயலை ஆதரிக்கும் பாகிஸ்தானை கண்டித்து கோஷம் எழுப்பினர். மேலும் அந்த நாட்டின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT