Last Updated : 25 Apr, 2025 08:35 AM

 

Published : 25 Apr 2025 08:35 AM
Last Updated : 25 Apr 2025 08:35 AM

காஷ்மீரில் இருந்து தமிழர்களை மீட்கும் பணியில் தீவிரம் காட்டும் தமிழக அரசு

காஷ்மீரில் இருந்து டெல்லி வந்த 6 தமிழர்களை தமிழ்நாடு இல்லத்தின் உள்ளுறை ஆணையர் ஆஷிஷ் குமார், தமிழக அரசின் டெல்லி பிரதிநிதி ஏ.கே.விஜயன் ஆகியோர் விமான நிலையத்தில் வரவேற்றனர்.

காஷ்மீரின் பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் அப்பகுதியில் இருந்த 200-க்கும் மேற்பட்ட தமிழர்களில் இருவர் தவிர மற்ற அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இவர்களை மீட்கும் பணியில் தமிழ்நாடு அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக காஷ்மீரியான புதுக்கோட்டை துணை ஆட்சியரை அங்கு அனுப்பி வைத்துள்ளது.

காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ல் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 28 பேர் உயிரிழந்தனர். இந்த சுற்றுலாப் பகுதியில் 200-க்கும் மேற்பட்ட தமிழர்களும் கூடியிருந்தனர். இவர்களில் சென்னையின் டாக்டர் பரமேஸ்வன் சந்துரு ஆகிய இருவர் மட்டும் பாதிக்கப்பட்டனர்.

இவர்களில் முதியவர் சந்துரு சம்பவத்தை பார்த்த அதிர்ச்சியில் மயங்கி விழுந்தார். இவர் அனந்தநாக் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தோளில் துப்பாக்கிச்சூடு காயம் அடைந்த பரமேஸ்வரன் டெல்லிக்கு விமான ஆம்புலன்ஸில் அழைத்து வரப்பட்டு, எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

காஷ்மீரில் இருந்து தமிழர்கள் அனைவரையும் பத்திரமாக தமிழகம் அழைத்துவர தமிழ்நாடு அரசு தீவிரம் காட்டுகிறது. இதற்காக, டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் கட்டுப்பாடு அறை திறக்கப்பட்டு உதவி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மீட்புப் பணிக்காக காஷ்மீரியான புதுக்கோட்டை துணை ஆட்சியர் அப்தாப் ரசூல், சிறப்பு அதிகாரியாக காஷ்மீருக்கு இரு தினங்களுக்கு முன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். அவருடன் இணைந்து டெல்லி தமிழ்நாடு இல்லத்தின் உள்ளுரை ஆணையர் ஆஷிஷ் குமார் மீட்புப் பணி மேற்கொண்டு வருகிறார்.

காஷ்மீரிலிருந்து தமிழர்கள் டெல்லிக்கு விமானத்தில் அழைத்து வரப்பட்டு, தமிழ்நாடு இல்லத்தில் தங்க வைக்கப்படுகின்றனர். பிறகு இவர்கள் சென்னைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

இவர்களில் 6 தமிழர்கள் துப்பாக்கிச் சூடு சம்பவத்தை மிக அருகிலிருந்து பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். செஞ்சியை சேர்ந்த சையது உஸ்மான், சயது ரஹமான், சையது காஜா மொய்னுத்தீன், ஷபியூர் ரஹ்மான், சாதிக் பாஷா, ராஜா ரங்கநாதன் ஆகிய 6 நண்பர்களும் நேற்று விமானத்தில் டெல்லி வந்து சேர்ந்தனர். இவர்களை தமிழ்நாடு இல்ல உள்ளுரை ஆணையர் ஆஷிஷ் குமார், தமிழக அரசின் சிறப்பு பிரதிநிதி ஏ.கே.விஜயன் ஆகியோர் வரவேற்று விவரம் கேட்டறிந்து ஆறுதல் கூறினர்.

இதுகுறித்து 'இந்து தமிழ் திசை' நாளிதழிடம் ஏ.கே.விஜயன் நேற்று கூறும்போது, "பஹல்காமிலிருந்து தமிழர்கள் அனைவரையும் பத்திரமாக அழைத்து வர தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.

இதுவரை கட்டுப்பாட்டு அறையை தொடர்புகொண்ட 122 பேர் டெல்லிக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். இவர்கள் இன்று மாலை சென்னைக்கு புறப்படுகின்றனர். நாளை மேலும் 28 பேர் காஷ்மீரிலிருந்து வர உள்ளனர். அனைவர் பற்றியும் நமது முதல்வர் போனில் பேசி தெரிந்து கொண்டபடி உள்ளார்” என்றார்.

இதற்கிடையில் காஷ்மீருக்கு சுற்றுலா சென்ற 40 பேர் கொண்ட ஒரு தமிழர் குழு, பயணத்தை பாதியில் முடித்துக் கொண்டு ஜம்முவிலிருந்து திரும்பியது. டெல்லி வரை பேருந்தில் வந்த இவர்கள் தமிழ்நாடு இல்லத்தில் தங்க வைக்கப்பட்டு, நேற்று முன்தினம் ரயில் மூலம் தமிழ்நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x