Published : 25 Apr 2025 08:24 AM
Last Updated : 25 Apr 2025 08:24 AM

பஹல்காம் தாக்குதலுக்கு பாகிஸ்தான் சூழ்ச்சியே காரணம்: காங்கிரஸ் செயற்குழு குற்றச்சாட்டு

காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் பஹல்காம் தாக்குதலில் இறந்தவர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

புதுடெல்லி: பஹல்காமில் நடத்தப்பட்ட கோழைத்தனமான தாக்குதலுக்கு பின்னால் பாகிஸ்தான் மூளையாக செயல்பட்டுள்ளதாக காங்கிரஸ் செயற்குழு குற்றம் சாட்டியுள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் கட்சி செயற்குழு நிறைவேற்றிய தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளதாவது: பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் "நமது குடியரசின் மதிப்புகள்" மீதான நேரடித் தாக்குதல். இந்த கோழைத்தனமான செயலுக்கு பின்னால் பாகிஸ்தானின் சூழ்ச்சி உள்ளது.

நாடு முழுவதும் இந்துக்களுக்கு எதிரான உணர்வுகளை தூண்டுவதற்காகவே இந்த தாக்குதல் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்டுள்ளது. இதற்கு யாரும் பலியாகி விடக்கூடாது. துன்பங்களை எதிர்கொண்டு நமது கூட்டு பலத்தை மீண்டும் உறுதிப்படுத்தி அமைதிகாக்க காங்கிரஸ் கட்சி செயற்குழு வேண்டுகோள் விடுக்கிறது.

மேலும், எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை உறுதியுடனும், ஒற்றுமையுடனும் எதிர்த்து போராடுவதற்கான நீண்ட கால உறுதிப்பாட்டை இந்திய தேசிய காங்கிரஸ் மீண்டும் வலியுறுத்துகிறது.

ஒற்றுமை மிகவும் தேவைப்படும் நேரத்தில் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பாஜக பிளவுவாதத்தை கையில் எடுப்பது அதிர்ச்சியளிக்கிறது.

காங்கிரஸ் கட்சி பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக செயல்படுவதால், இந்த தீவிரவாத தாக்குதல் பாதுகாப்பு மற்றும் உளவுத் துறை தோல்வியால் ஏற்பட்டதா என்பது குறித்து கேள்வியெழுப்புகிறது. இதுகுறித்து, அரசிடமிருந்து உரிய பதிலை காங்கிரஸ் கட்சி எதிர்பார்க்கிறது.

தாக்குலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும், தீவிரவாத நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் நாளை (ஏப்ரல் 25) நாடு முழுவதும் மெழுகுவர்த்தி ஊர்வலத்தை காங்கிரஸ் கட்சி நடத்தும். பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்பதே முதன்மையான நோக்கம்.

அமர்நாத் யாத்திரை விரைவில் தொடங்க உள்ள நிலையில் அவர்களின் பாதுகாப்புக்கு தேசிய முன்னுரிமை அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். சுற்றுலாவை நம்பியுள்ள ஜம்மு காஷ்மீர் மக்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட வேண்டும். இவ்வாறு தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x