Published : 25 Apr 2025 06:41 AM
Last Updated : 25 Apr 2025 06:41 AM

எல்லையில் போர் பதற்றம்: பாகிஸ்தான் வான் வெளியில் இந்திய விமானங்கள் பறக்க தடை

இஸ்லாமாபாத்: காஷ்மீரில் நடந்த தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு பல்வேறு தடைகளை இந்தியா விதித்துள்ள நிலையில், பதில் நடவடிக்கையாக இந்தியாவுடன் போக்குவரத்து, வர்த்தகம் நிறுத்தம் உள்ளிட்ட அறிவிப்புகளை பாகிஸ்தான் அரசு வெளியிட்டுள்ளது. பாகிஸ்தான் வான்வெளியில் இந்திய விமானங்கள் பறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், எல்லையில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.

ஜம்மு - காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கு பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் கடந்த 22-ம் தேதி துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த கொடூர தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். எல்லை தாண்டிய தீவிரவாதத்துக்கு ஆதரவு அளித்து வரும் பாகிஸ்தானை எச்சரிக்கும் விதமாக, சிந்துநதிநீர் ஒப்பந்தம் தற்காலிக நிறுத்தம் உட்பட பல்வேறு தடைகளை இந்தியா விதித்துள்ளது.

இந்த சூழலில், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தலைமையில் தேசிய பாதுகாப்பு குழு கூட்டம் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நேற்று நடைபெற்றது. இதில், முக்கிய அமைச்சர்கள், முப்படைகளின் தளபதிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

சிம்லா ஒப்பந்தம் நிறுத்தம்: அதன்படி, பாகிஸ்தான் வான் வெளியில் இந்திய விமானங்கள் பறப்பதற்கு தடைவிதிக்க முடிவு செய்யப்பட்டது. வாகா எல்லையில் போக்குவரத்து தடை செய்யப்படுவதுடன், இந்தியா உடனான அனைத்து வர்த்தகஉறவுகளையும் நிறுத்திவைக்கவும் முடிவெடுக்கப்பட்டது. சிம்லா ஒப்பந்தம் உள்ளிட்ட அனைத்து இருதரப்பு ஒப்பந்தங்களையும் கைவிடுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

சீக்கிய யாத்ரீகர்கள் தவிர்த்து, இந்தியர்களுக்கு சார்க் விசாவிலக்கு திட்டத்தின்கீழ் வழங்கப்படும் விசாவை நிறுத்த பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட மற்ற முடிவுகள் குறித்து தேசிய பாதுகாப்பு குழு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதற்கான இந்தியாவின் முடிவை பாகிஸ்தான் நிராகரிக்கிறது. இது, 24 கோடி பாகிஸ்தான் மக்களின் உயிர்நாடி பிரச்சினை. மக்களின் பொருளாதாரம், வாழ்வாதாரம் இதை சார்ந்தே உள்ளது. எனவே, சிந்து நதிநீர்ஒப்பந்தத்தின்கீழ் பாகிஸ்தானுக்கு தேவையான தண்ணீரை திசை திருப்பவோ, நிறுத்தவோ செய்யும் எந்த ஒரு முயற்சியும் போர்ச் செயலாகவே கருதப்படும். இதை சர்வதேச அமைப்பிடம் கொண்டு செல்வோம்.

இத்தகைய செயல்கள் பிராந்தியத்தின் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை குலைக்கக்கூடும். எனவே, பஹல்காம் போன்ற சம்பவங்களை காரணம் காட்டி வீண்பழி சுமத்துவதை இந்தியா தவிர்க்க வேண்டும். இந்த விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக நேரடியான எந்த ஆதாரங்களும் இதுவரை வெளியிடப்படவில்லை. எனவே, பாகிஸ்தானின் இறையாண்மை மற்றும் மக்களின் பாதுகாப்புக்கு ஏற்படும் எந்த அச்சுறுத்தலுக்கும் அனைத்து களங்களிலும் உறுதியான பரஸ்பர எதிர்நடவடிக்கை எடுக்க பாகிஸ்தான் தயாராக உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. பாகிஸ்தானுக்குள் பயங்கரவாதத்தை இந்தியா வளர்ப்பதாக அதில் விமர்சிக்கப்பட்டுள்ளது.

இந்திய தூதருக்கு சம்மன்: பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகத்தில் பணியாற்றும் ராணுவ ஆலோசகர்கள் 30-ம் தேதிக்குள் வெளியேற கெடுவிதிக்கப்பட்டுள்ளது. இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய பொறுப்பு தூதர் கீதிகா ஸ்ரீவஸ்தவாவுக்கு சம்மன் அனுப்பப்படும் என பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் இஷாக் தார் தெரிவித்துள்ளார்.

போருக்கு தயார்: பாகிஸ்தானுக்கு எதிராக குறைந்த தீவிரத்தன்மை கொண்ட போரை இந்தியா நடத்துகிறது. அவர்கள் அளவுகோலை உயர்த்தினால், நாங்களும் பதில்கொடுக்க தயாராக இருக்கிறோம். எங்கள் நிலத்தை பாதுகாக்க, எந்த சர்வதேச அழுத்தங்களுக்கும் அடிபணிய மாட்டோம் என்று பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் நேற்று கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x