Published : 24 Apr 2025 07:55 PM
Last Updated : 24 Apr 2025 07:55 PM

பஹல்காம் தாக்குதல் குறித்து குடியரசு தலைவர் முர்முவிடம் அமித் ஷா, ஜெய்சங்கர் விளக்கம்

புதுடெல்லி: பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் குறித்தும், அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்தும் குடியரசு தலைவர் திரவுபதி முர்முவிடம் அமித் ஷா, ஜெய்சங்கர் ஆகியோர் விளக்கமாக எடுத்துரைத்தனர்.

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் அருகேயுள்ள பைசரன் பள்ளத்தாக்கில், தடை செய்யப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா எனும் பயங்கரவாத அமைப்பின் நிழல் அமைப்பான ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF) கடந்த 22-ம் தேதி சுற்றுலா பயணிகளைக் குறிவைத்து நடத்திய பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தச் சம்பவத்தைக் கண்டித்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்றன. அமைதி ஊர்வலங்கள், உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகள் என ஆங்காங்கே நடைபெற்றன. பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உடல்கள் அவரவர் சொந்த ஊர்களில் இன்று இறுதிச் சடங்குகள் நடத்தப்பட்டன. இவற்றில், ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் துக்கத்தை வெளிப்படுத்தினர்.

பஹல்காமில் தாக்குதல் நடத்திய லஷ்கர்-இ-தொய்பா அமைப்பு பாகிஸ்தானில் இருந்து இயங்குகிறது. தாக்குதல் நடத்தியவர்களில் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்களும் இருந்ததாக ஜம்மு காஷ்மீர் காவல் துறை தெரிவித்துள்ளது. அவர்களின் பெயர்கள் மற்றும் உருவ வரைபடங்களை காவல் துறை வெளியிட்டுள்ளது.

அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் இந்திய சுற்றுப் பயணத்தில் இருக்கும்போது, பிரதமர் நரேந்திர மோடி சவூதி அரேபியாவுக்கு அரசு முறை பயணமாக சென்ற தருணத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அதோடு, காஷ்மீருக்கு உரிமை கோரும் விதமாகவும், இந்தியாவுக்கு எதிராகவும் பாகிஸ்தான் ராணுவ தளபதி பேசிய சில நாட்களில் இந்த தாக்குதல் நடந்துள்ளது.

பஹல்காம் தாக்குதலின் பின்னணியில் உள்ள பாகிஸ்தானுக்கு பாடம் புகட்டும் வகையில், பிரதமர் மோடி தலைமையில் நேற்று (ஏப்.23) நடைபெற்ற பாதுகாப்புக்கான அமைச்சரவை கூட்டத்தில், 5 முக்கிய முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதில், எல்லை தாண்டிய தீவிரவாதத்துக்கு ஆதரவு அளிப்பதை பாகிஸ்தான் நிறுத்தும் வரை, இந்தியா- பாகிஸ்தான் இடையே கடந்த 1960-ஆண்டு செய்து கொண்ட சிந்து நதிநீர் பங்கீடு ஒப்பந்தம் நிறுத்திவைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பாகிஸ்தானியர்களுக்கான விசா சேவைகள் உடனடியாக நிறுத்தி வைக்கப்படுவதாக வெளியுறவு அமைச்சகம் இன்று தெரிவித்தது.

வெளிநாட்டு தூதர்களுக்கு விளக்கம்: இதன் தொடர்ச்சியாக, பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் மற்றும் எல்லை தாண்டிய பயங்கரவாதத்துடனான பாகிஸ்தானின் அதன் தொடர்பு குறித்து அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், சீனா, ரஷ்யா, ஜெர்மனி மற்றும் பல நாடுகளின் தூதர்களுக்கு இந்தியா விளக்கமளித்தது.

அப்பாவி பொதுமக்கள் மீதான கொடூரமான பயங்கரவாதத் தாக்குதலின் பல்வேறு அம்சங்கள் மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியாவின் "பூஜ்ஜிய சகிப்புத்தன்மை" என்ற உறுதியான கொள்கை குறித்து வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி தூதர்களுக்கு விளக்கமளித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. ஓமன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கத்தார், நார்வே, இத்தாலி, இந்தோனேசியா, மலேசியா ஆகிய நாடுகளின் தூதர்களும் இதில் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், குடியரசு தலைவர் மாளிகைக்குச் சென்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர், பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் குறித்தும், மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்தும் அவருக்கு விளக்கியதாகக் கூறப்படுகிறது. மத்திய அரசின் இத்தகைய தொடர் நடவடிக்கைகள் பாகிஸ்தான் மீது போர் தொடுக்க மத்திய அரசு திட்டமிட்டு செயல்படுகிறதா என்ற வலுவான கேள்வியை எழுப்பி உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x