Published : 24 Apr 2025 06:12 PM
Last Updated : 24 Apr 2025 06:12 PM
ஸ்ரீநகர்: பஹல்காம் தாக்குதலுக்குப் பின்பு, நாட்டின் பிற பகுதிகளில் உள்ள காஷ்மீர் மாணவர்கள் துன்புறுத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், சம்பந்தப்பட்ட மாநில முதல்வர்களுடன் ஜம்மு காஷ்மீர் அரசு தொடர்பில் இருப்பதாக அம்மாநில முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "காஷ்மீர் மக்கள் துன்புறுத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ள மாநில முதல்வர்களுடன் ஜம்மு காஷ்மீர் அரசு தொடர்பில் உள்ளது. நானும் அந்தந்த மாநில முதல்வர்களுடன் பேசி வருகிறேன். இந்த விவகாரத்தில் கூடுதல் கவனம் செலுத்தும்படி வேண்டுகோள் விடுத்துள்ளேன்" என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, தேசிய மாநாட்டு கட்சி செய்தித் தொடர்பாளர் இம்ரான் கான் தார் தனது எக்ஸ் பதிவில், "நாடு முழுவதிலும் உள்ள காஷ்மீர் மாணவர்கள் தங்களின் பாதுகாப்பு குறித்து அச்சத்தில் இருக்கும் ஏராளமான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளன. முதல்வர் உமர் அப்துல்லா இந்த விஷயத்தில் உடனடியாக தலையிட்டு, பிற மாநிலங்களில் உள்ள சக முதல்வர்களுடன் பேச வேண்டும்" என்று தெரிவித்திருந்தார்.
இதனிடையே உத்தராகண்ட், உத்தரப் பிரதேசம் மற்றும் இமாச்சலப் பிரதேச மாநிலங்களில் உள்ள காஷ்மீர் மாணவர்கள் தாங்கள் வாடகைக்கு இருக்கும் வீடுகள் மற்றும் பல்கலைக்கழக விடுதிகளை காலி செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டதாக ஜம்மு காஷ்மீர் மாணவர்கள் பேரவை புதன்கிழமை தெரிவித்திருந்தது. இந்தநிலையில், டெல்லியில் உள்ள ஜம்மு காஷ்மீர் குடியிருப்பாளர்கள் ஆணையம், நாடு முழுவதிலும் படித்து வரும் ஜம்மு காஷ்மீர் மாநில மாணவர்களுக்காக உதவி எண்களை அறிவித்துள்ளது.
முன்னதாக, தெற்கு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் செவ்வாய்க்கிழமை நடத்திய கொடூரத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இவர்களில் பலரும் சுற்றுலாப் பயணிகள். கடந்த 2019-ம் ஆண்டு புல்வாமாவில் நடந்த தாக்குதலில் 40 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதற்கு பின்பு நடந்த கொடூரத் தாக்குதல் இதுவாகும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT