Published : 24 Apr 2025 05:38 PM
Last Updated : 24 Apr 2025 05:38 PM
ஜெய்ப்பூர்: நான்கு நாள் பயணமாக கடந்த திங்கள்கிழமை இந்தியா வந்த அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் தனது பயணத்தை முடித்துக்கொண்டு இன்று அமெரிக்கா புறப்பட்டார்.
அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், அவரது இந்திய வம்சாவளி மனைவி உஷா சிலுகுரி மற்றும் 3 குழந்தைகள் கடந்த 21-ம் தேதி இந்தியா வந்தனர். புதுடெல்லி விமான நிலையத்தில் அவர்களை, மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வரவேற்றார். ராணுவ அணிவகுப்பு மரியாதையும் அளிக்கப்பட்டது. டெல்லியில் உள்ள ஐடிசி மவுரியா ஷெரட்டன் ஓட்டலில் தங்கிய ஜே.டி.வான்ஸ் குடும்பத்தினர், டெல்லி சுவாமி நாராயண் கோயிலுக்குச் சென்று வழிபாடு மேற்கொண்டனர். பின்னர் அன்று மாலை டெல்லியில் கல்யாண் மார்க்கில் உள்ள பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் பிரதமர் மோடியை, ஜே.டி. வான்ஸ் சந்தித்து பேசினார்.
இந்தச் சந்திப்பு குறித்து எக்ஸ் பக்கத்தில், இன்று மாலை பிரதமர் மோடியைப் பார்த்ததில் பெருமிதம். அவர் ஒரு சிறந்த தலைவர், அவர் என் குடும்பத்தினரிடம் மிகவும் அன்பாக இருந்தார். அதிபர் ட்ரம்பின் தலைமையின் கீழ், இந்திய மக்களுடனான அமெரிக்காவின் நட்பையும் ஒத்துழைப்பையும் வலுப்படுத்த பணியாற்றுவதை நான் எதிர்நோக்குகிறேன் என ஜே.டி. வான்ஸ் பதிவிட்டிருந்தார்.
இந்தச் சந்திப்பு குறித்து “டெல்லியில் ஜே.டி. வான்ஸ் மற்றும் அவரது குடும்பத்தினரை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். அமெரிக்காவில் அதிபர் ட்ரம்ப் உடனான எனது சந்திப்பைத் தொடர்ந்து ஏற்பட்ட வேகமான முன்னேற்றத்தை நாங்கள் இருவரும் மதிப்பாய்வு செய்தோம். வர்த்தகம், தொழில்நுட்பம், பாதுகாப்பு, எரிசக்தி உள்ளிட்ட பரஸ்பர ஒத்துழைப்புக்கு நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்.
நமது மக்கள் மற்றும் உலகின் சிறந்த எதிர்காலத்திற்காக இந்தியா - அமெரிக்க விரிவான உலகளாவிய மூலோபாய கூட்டாண்மை 21-ம் நூற்றாண்டின் வரையறுக்கும் கூட்டாண்மையாக இருக்கும்” என்று பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இரு தரப்பு பேச்சுவார்த்தையை அடுத்து, ஜே.டி. வான்ஸ் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரவு விருந்தளித்தார்.
நேற்று முன்தினம் (ஏப். 22) ஜெய்ப்பூர் சென்ற ஜே.டி.வான்ஸ், அங்கு நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இந்தியா - அமெரிக்கா முன் உள்ள வாய்ப்புகள் குறித்துப் பேசினார். நேற்று (ஏப்.23) குடும்பத்துடன் ஆக்ரா சென்ற ஜே.டி.வான்ஸ், தாஜ்மஹாலை பார்வையிட்டார். ஷில்ப்கிராம் பகுதியில் உள்ள இந்திய கைவினைப் பொருட்கள் விற்கப்படும் திறந்தவெளி சந்தையையும் அவர்கள் பார்வையிட்டனர். மீண்டும் ஜெய்ப்பூர் சென்ற ஜே.டி.வான்ஸ் மற்றும் குடும்பத்தினர் இன்று அங்கிருந்து தனி விமானத்தில் வாஷிங்டனுக்குப் புறப்பட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT