Published : 24 Apr 2025 02:03 PM
Last Updated : 24 Apr 2025 02:03 PM
மதுபானி(பிஹார்): பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குக் காரணமானவர்கள் கற்பனைக்கும் எட்டாத அளவுக்கு தண்டிக்கப்படுவார்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதிபட தெரிவித்துள்ளார்.
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினத்தைக் குறிக்கும் நிகழ்வு பிகாரின் மதுபானி நகரில் நடைபெற்றது. பிரதமர் மோடி, முதல்வர் நிதிஷ் குமார் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில், உரையாற்றும் முன் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அனைவரும் மவுன அஞ்சலி செலுத்துமாறு பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.
மவுன அஞ்சலி செலுத்தப்பட்டதை அடுத்துப் பேசிய பிரதமர் மோடி, "பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமானவர்கள் மற்றும் சதிகாரர்கள் கற்பனைக்கும் எட்டாத அளவுக்கு தண்டிக்கப்படுவார்கள். ஒவ்வொரு பயங்கரவாதியையும் அவர்களை ஆதரிப்பவர்களையும் இந்தியா அடையாளம் கண்டு, கண்காணித்து, தண்டிக்கும் என்று நான் முழு உலகிற்கும் கூறுகிறேன். பூமியின் கடைசி வரை அவர்களைத் துரத்துவோம்.
அவர்களுடைய (பயங்கரவாதிகளின்) மீதமுள்ள மண்ணைப் பறிக்கும் நேரம் வந்துவிட்டது. கார்கில் முதல் கன்னியாகுமரி வரை முழு நாடும் இந்த பயங்கரவாதத் தாக்குதலால் வருத்தமாகவும் கவலையாகவும் உள்ளது. இந்த சம்பவத்தால் முழு நாடும் கோபமாக உள்ளது. இந்த சம்பவத்திற்கு காரணமானவர்கள் தப்பவிடப்பட மாட்டார்கள்.
மனிதநேயத்தில் நம்பிக்கை கொண்ட அனைவரும் எங்களுடன் உள்ளனர். இந்த நேரத்தில் எங்களுடன் நின்ற பல்வேறு நாடுகளின் மக்களுக்கும் தலைவர்களுக்கும் நான் நன்றி கூறுகிறேன்" என தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் நிதிஷ் குமார், “பஹல்காமில் நடந்த தாக்குதல் முழு நாட்டையும் பேரழிவிற்கு உள்ளாக்கியது. இது ஒரு கொடூரமான செயல். நாங்கள் அனைவரும் அதைக் கண்டிக்கிறோம். பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் முழு நாடும் ஒன்றுபட்டுள்ளது” என தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT