Published : 24 Apr 2025 01:41 PM
Last Updated : 24 Apr 2025 01:41 PM
கான்பூர்(உத்தரப்பிரதேசம்): “பயங்கரவாதம் அதன் இறுதி மூச்சை விட்டுக்கொண்டிருக்கிறது; அது விரைவில் முடிவுக்கு வரும்; பிரதமர் மோடியின் தலைமையை நாடு நம்ப வேண்டும்.” என்று உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் கொல்லப்பட்ட கான்பூரைச் சேர்ந்த 31 வயது சுபம் திவேதியின் வீட்டுக்குச் சென்ற முதல்வர் யோகி ஆதித்யநாத், அவரது உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். சுபம் திவேதியின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய யோகி ஆதித்யநாத், "பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் ஒரு கொடூரமான செயல். அப்பாவி மக்களை அவர்களின் மத அடையாளத்தின் அடிப்படையில், அவர்களின் குடும்பங்கள் முன்னிலையில் சுட்டுக்கொன்றது சகிக்க முடியாதது.
கொலை செய்வதற்கு முன் அவர்களின் மதத்தைக் கேட்பது, பெண்களை விதவைகளாக்குவது ஏற்றுக்கொள்ள முடியாதது. பிரதமர் மோடி தலைமையில் கூடிய பாதுகாப்பு அமைச்சரவைக் குழு (CCS) கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் பயங்கரவாதத்திற்கு சவப்பெட்டியில் அடிக்கப்பட்ட கடைசி ஆணியாக இருக்கும்.
துக்ககரமான இந்த நேரத்தில், நாடு பிரதமர் மோடியின் தலைமையை நம்ப வேண்டும். இது பயங்கரவாதிகள் மீதான வழக்குகளை வாபஸ் பெறும் அரசு அல்ல; வாக்கு வங்கியைப் பார்க்கும் அரசும் அல்ல. பயங்கரவாதிகளின் கொடிய, விஷப் பற்களை நசுக்க நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்.
பயங்கரவாதிகளும் அவர்களை ஆதரித்தவர்களும் இப்போது பூஜ்ஜிய சகிப்புத்தன்மை அணுகுமுறையின் விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும், இப்போது அடுத்து என்ன நடக்கும் என்பதை அனைவரும் கவனிப்பார்கள். சுபம் திவேதிக்கு திருமணமாகி இரண்டு மாதங்களே ஆகிறது. அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.” என தெரிவித்தார்.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் அருகேயுள்ள பைசரன் பள்ளத்தாக்கில், தடை செய்யப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா எனும் பயங்கரவாத அமைப்பின் நிழல் அமைப்பான ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF) கடந்த 22-ம் தேதி நடத்திய பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயமடைந்தனர். இந்த தாக்குதலை அடுத்து ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது. 2019 ஆம் ஆண்டு புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு காஷ்மீரில் நடந்த மிக மோசமான தாக்குதல் இதுவாகும், இதில் 40 CRPF வீரர்கள் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT