Published : 24 Apr 2025 09:37 AM
Last Updated : 24 Apr 2025 09:37 AM

பஹல்காம் தாக்குதல்: உமர், மெகபூபா ரியாக்‌ஷன் முதல் நிவாரண நிதி அறிவிப்பு வரை

காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் காட்டுமிராண்டித்தனமானது என்று கூறி கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார் ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “ பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் காட்டுமிராண்டித்தனமான, முட்டாள்தனமான, கொடூரமான செயல். இது கடும் கண்டனத்துக்குரியது. நமது பகுதியை நம்பி சுற்றுலா வந்த பயணிகள் கூட்டம் கூட்டமாக வெளியேறுவதை பார்க்கும்போது இதயம் நொறுங்குகிறது.

சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள் சிரமமின்றி வெளியேற வசதியாக ஸ்ரீநகர் மற்றும் ஜம்மு இடையே போக்குவரத்தை ஒழுங்குபடுத்த நிர்வாகத்தினருக்கு உத்தரவிட்டுள்ளேன். அவர்களின் நிலையை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஒவ்வொருவரும் எங்களுடன் ஒத்துழைப்புடன் செயல்படுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது" என்றார்.

உயிரிழந்த குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரணம்: பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு ஜம்மு-காஷ்மீர் அரசு சார்பில் ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.2 லட்சமும், சிறிய காயம் ஏற்பட்டவர்களுக்கு ரூ.1 லட்சமும் இழப்பீடு வழங்க ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா உத்தரவிட்டுள்ளார்.

இழந்த உயிர்களை இந்த நிதி உதவியால் ஈடுசெய்ய முடியாது. அதேநேரம், பாதிக்கப்பட்ட குடும்பங்களின் பக்கம் ஜம்மு காஷ்மீர் அரசு உறுதியாக நிற்கிறது என்பதற்கு அடையாளமாகவே இந்த இழப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது என்று உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

மெகபூபா முப்தி - “இது அப்பாவி பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மட்டுமல்ல. காஷ்மீர் பள்ளத்தாக்கின் வகுப்புவாத நல்லிணக்கம், மத சகிப்புத்தன்மை மற்றும் கலாச்சார பன்முகத்தன்மை ஆகியவற்றை வலியுறுத்தும் “காஷ்மீரியத்” மீது நடத்தப்பட்ட தாக்குதல்.

இது வன்மையான கண்டனத்துக்குரியது. சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்காக காஷ்மீர் வெட்கி தலைகுனிகிறது. இந்த நெருக்கடியான நேரத்தில் நாங்கள் உங்களுடன் இருப்போம். அவர்களிடம் மன்னிப்பும் கேட்கிறோம்” என்று மக்கள் ஜனநாயக கட்சி (பிடிபி) தலைவர் மெகபூபா முப்தி கூறியுள்ளார்.

நடந்தது என்ன? - ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் மலைப் பகுதியில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கு பகுதி ‘மினி சுவிட்சர்லாந்து’ என அழைக்கப்படுகிறது. இங்கு செவ்வாய்க்கிழமை சுற்றுலாப் பயணிகள் குதிரை சவாரி செய்தும், ரோட்டோர கடைகளில் சாப்பிட்ட படியும், பைசரன் பள்ளத்தாக்கின் அழகை ரசித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது வனப்பகுதியில் இருந்து உள்ளூர் போலீஸாரின் சீருடையில் வந்த தீவிரவாதிகள் திடீரென துப்பாக்கி சூடு நடத்தினர். குறிப்பாக ஆண்களிடம் பெயர் மற்றும் மதத்தை கேட்டு தாக்குதல் நடத்தினர். இதில் இந்திய கடற்படை அதிகாரி, உளவுத்துறை அதிகாரி, நேபாளம் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் இருவர் உட்பட 26 பேர் கொல்லப்பட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x