Published : 24 Apr 2025 09:30 AM
Last Updated : 24 Apr 2025 09:30 AM

காஷ்மீரை விட்டு 6 மணி நேரத்தில் 3,337 பேர் விமானம் மூலம் வெளியேற்றம்

பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து காஷ்மீருக்கு சுற்றுலா சென்றுள்ள பலர் தங்களின் சொந்த ஊருக்கு திரும்ப விரும்புகின்றனர். ஸ்ரீநகரில் இருந்து கூடுதல் விமானங்களை இயக்குமாறு விமான நிறுவ னங்களை சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) கேட்டுக்கொண்டது.

மேலும் ஸ்ரீநகர் விமானங்களுக்கான ரத்துசெய்தல் மற்றும் மறு முன்பதிவுக்கான கட்டணங்களை தள்ளுபடி செய்யுமாறு அறிவுறுத்தியது. இதையடுத்து ஏர் இந்தியா, இண்டிகோ ஆகிய நிறுவனங்கள் ஸ்ரீநகரில் இருந்து டெல்லி மற்றும் மும்பைக்கு நேற்று 4 கூடுதல் விமானங்களை இயக்கின.

இந்நிலையில் தேவை அதிகரிப்பு அடிப்படையில் விமான கட்டணங்களை உயர்த்தக் கூடாது என விமான நிறுவனங்களை சிவில் விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு எச்சரித்துள்ளார். இறந்தவர்களின் உடல்களை சொந்த ஊருக்கு கொண்டு வரும் பணியில் மாநில அரசுகள் மற்றும் உள்ளூர் அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதற்கிடையில் `எக்ஸ்' தளத்தில் ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா வெளியிட்ட பதிவில், “பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு பள்ளத்தாக்கிலிருந்து எங்கள் விருந்தினர்கள் வெளியேறுவது மனவேதனை அளிக்கிறது. அதே நேரத்தில் அவர்கள் ஏன் வெளியேற விரும்புகின்றனர் என்பதை நாங்கள் முழுமையாகப் புரிந்துகொள்கிறோம்.

ஸ்ரீநகர் - ஜம்மு இடையிலான தேசிய நெடுஞ்சாலை, ஒரே திசை போக்குவரத்துக்காக மீண்டும் இணைக்கப்பட்டுள்ளது. சுற்றுலா வாகனங்களை வெளியேற அனுமதிக்கும் வகையில் ஸ்ரீநகர்- ஜம்மு இடையே போக்குவரத்தை எளிதாக்குமாறு அதிகாரிகளுக்கு நான் உத்தரவிட்டுள்ளேன்” என்று கூறியுள்ளார்.

மத்திய சிவில் விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு கூறியுள்ளதாவது: ஸ்ரீ நகரிலிருந்து சுற்றுலா பயணிகள் பத்திரமாக வெளியேறுவதற்கு இந்த இக்கட்டான சூழலை பயன்படுத்தி கட்டணங்களை உயர்த்தக் கூடாது என விமான சேவை நிறுவனங்களை அறிவுறுத்தியுள்ளோம். நியாயமான கட்டணங்கள் வசூலிக்கப்படுகிறதா என்பதையும் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.

ஸ்ரீநகர் விமான நிலையத்திலிருந்து புதன்கிழமை காலை 6 மணியிலிருந்து நண்பகல் 12 மணி வரை இடைப்பட்ட 6 மணி நேரத்தில் மட்டும் 20 புறப்பாடுகள் மூலம் 3,337 சுற்றுலா பயணிகள் காஷ்மீரை விட்டு வெளியேறி உள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் வழங்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x