Last Updated : 23 Apr, 2025 06:01 PM

3  

Published : 23 Apr 2025 06:01 PM
Last Updated : 23 Apr 2025 06:01 PM

பஹல்காம் சம்பவ இடத்தில் அமித் ஷா ஆய்வு - பயங்கரவாத தாக்குதல் குறித்து என்ஐஏ துணையுடன் விசாரணை

பஹல்காம் சம்பவம் நடந்த இடத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாத தாக்குதல் நடந்த இடத்தை ஆய்வு செய்த உள்துறை அமைச்சர் அமித் ஷா, தாக்குதலில் காயமடைந்து அனந்த்நாக் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். இதனிடையே, இந்த பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக என்ஐஏ துணையுடன் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த 2019-ம் ஆண்டு புல்வாமா தாக்குதலுக்கு பின்பு நடந்த மிக மோசமான தாக்குதலாக இந்த பஹல்காம் தாக்குதல் கருதப்படுகிறது. பஹல்காமின் பைசரன் புல்வெளியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் செவ்வாய்க்கிழமை கொடூரத் தாக்குதல் நடத்தினர். இதில் இரண்டு வெளிநாட்டினர் உட்பட 26 பேர் கொல்லப்பட்டனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் சுற்றுலா பயணிகள். இந்தத் தாக்குதலில் பலர் காயமடைந்தனர். அனந்த்நாக் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை உள்துறை அமைச்சர் அமித் ஷா புதன்கிழமை சந்தித்து ஆறுதல் கூறினார்.

முன்னதாக, பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய பைசரன் புல்வெளிப்பகுதிக்கு சென்ற உள்துறை அமைச்சர் ஆய்வு செய்தார். அந்தப் பகுதிக்கு ஹெலிகாப்டர் மூலம் சென்ற அமித் ஷா வான்வெளியில் இருந்து தாக்குதல் நடந்த பகுதிகளை பார்வையிட்டார். பின்பு அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தார். பஹல்காம் வருவதற்கு முன்பாக ஸ்ரீநகர் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு வெளியே அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த பங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த 26 பேரின் உடல்களுக்கும் இறுதி அஞ்சலி செலுத்தினார். பின்பு பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை சந்தித்தார்.

இதுகுறித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்த உள்துறை அமைச்சர், “மிகவும் கனத்த மனதுடன் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு அஞ்சலி செலுத்தினேன். பயங்கரவாதத்துக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது. இந்தக் கொடூரமான பயங்கரவாத தாக்குதலின் குற்றவாளிகள் தப்பிக்க முடியாது” என்று தெரிவித்திருந்தார்.

இதனிடையே, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், விமானப்படை தலைமை ஏர் மார்ஷல் ஏ.பி. சிங் மற்றும் பிற அதிகாரிகளுடன் நடந்த கூட்டத்துக்கு தலைமை தாங்கி பிராந்திய பாதுகாப்பு நிலைமைகள் குறித்து ஆலோசனை நடத்தினார். இந்தச் சூழ்நிலையில், கடந்த இருபது ஆண்டுகளில் குடிமக்கள் மீது நடத்தப்பட்ட மிகவும் மோசமான தாக்குதல் சம்பவமாக கருத்தப்படும் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் ஜம்மு காஷ்மீர் காவல்துறைக்கு உதவுவதற்காக தேசிய புலனாய்வு முகமை (NIA) குழு, தாக்குதல் நடந்த இடத்துக்கு வந்துள்ளது.

துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் அந்தஸ்து அதிகாரி தலைமையிலான என்ஐஏ குழு, சம்பவம் நிகழ்ந்த இடத்தை முழுமையாக மதிப்பீடு செய்தது. இதன்மூலம், தடயவியல் ஆதாரங்களை சேகரித்து, படுகொலைக்கு காரணமானவர்களை அடையாளம் காண காவல் துறைக்கு என்ஐஏ உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x