Published : 23 Apr 2025 12:34 PM
Last Updated : 23 Apr 2025 12:34 PM

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு கண்டனம் - 35 ஆண்டுகளில் முதல்முறையாக காஷ்மீரில் முழு அடைப்பு

இடம்: ஸ்ரீநகர்

ஸ்ரீநகர்: காஷ்மீர் பள்ளத்தாக்கின் பஹல்காம் சுற்றுலாத்தலத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலைக் கண்டித்து ஜம்மு காஷ்மீரில் 35 ஆண்டுகளுக்கு பின்பு முதல் முறையாக முழு கடையடைப்பு போராட்டம் இன்று நடப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தெற்கு காஷ்மீரின் சுற்றுலாத்தலமான பஹல்காமில் பயங்கரவாதிகள் செவ்வாய்க்கிழமை நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் சுற்றுலா பயணிகள் என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து பள்ளத்தாக்கு முழுவதும், குறிப்பாக சுற்றுலா தலங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பயங்கரவாத தாக்குதலைக் கண்டித்து காஷ்மீரில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: தலைநகர் ஸ்ரீநகரில் பெரும்பாலான கடைகளும், பெட்ரோல் பங்குகளும் மூடப்பட்டிருந்தன. நகர்முழுவதும் அத்தியாவசிய பொருள்களுக்கான கடைகள் மட்டுமே திறந்திருந்தன.

பொதுப்போக்குவரத்து இயக்கப்படவில்லை. காஷ்மீர் முழுவதும் தனியார் பள்ளிகளும் இயங்கவில்லை. பிற மாவட்டத் தலைநகரங்களிலும் கடையடைப்புப் போராட்டம் நடந்தது. அதேபோல் பல்வேறு இடங்களில் மக்கள் அமைதியான முறையில் போராட்டத்திலும் ஈடுபட்டனர். அப்போது பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து, அப்பாவி பொதுமக்கள் கொல்லப்படுவது நிறுத்தப்படவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

தெற்கு காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டத்தின் பஹல்காம் புல்வெளியில் நடந்த தாக்குதலைக் கண்டித்து பல்வேறு அரசியல் கட்சிகள், சமூக - மத அமைப்புகள், வணிக அமைப்புகள் மற்றும் சிவில் சமூகக் குழுக்கள் காஷ்மீரில் முழு கடையடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளன.

ஜம்மு காஷ்மீரில் ஆளும் தேசிய மாநாடு கட்சி, மக்கள் ஜனநாயக கட்சி, மக்கள் மாநாட்டு கட்சி மற்றும் அப்னி கட்சி போன்ற கட்சிகள் முழு அடைப்பு போராட்டத்துக்கு ஆதரவளித்துள்ளன. அதேபோல், ஹூரியத் மாநாட்டின் தலைவரான உமர் ஃபரூக் தலைமையிலான பல்வேறு மத அமைப்புகளின் கூட்டமைப்பான முதாஹிதா மஜ்லிஸ் உலேமா, "காஷ்மீர் மக்கள் முழு அடைப்பு போராட்டத்தில் பங்கேற்று பயங்கரவாத தாக்குதலுக்கான தங்களின் எதிர்ப்பை பதிவு செய்யவேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் வர்த்தகம் மற்றும் தொழில் சபை, காஷ்மீர் வர்த்தகர் மற்றும் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு உள்ளிட்ட வர்த்தம் மற்றும் சுற்றுலா அமைப்புகளும் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளன.

அதேபோல் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு மரியாதை மற்றும் ஒற்றுமையைத் தெரிவிக்கும் விதமாக ஜம்மு காஷ்மீரில் புதன்கிழமை அனைத்து தனியார் பள்ளிகளும் மூடப்பட்டிருக்கும் என்று ஜம்மு காஷ்மீர் தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

காஷ்மீர் பல்கலையும் புதன்கிழமை நடைபெறும் அனைத்துத் தேர்வுகளையும் ஒத்திவைத்துள்ளது. பயங்கரவாத தாக்குதலை முன்னிட்டு காஷ்மீர் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x