Last Updated : 23 Apr, 2025 10:06 AM

13  

Published : 23 Apr 2025 10:06 AM
Last Updated : 23 Apr 2025 10:06 AM

“என் அப்பாவை சுடும் முன்பு இஸ்லாமிய வாசகத்தை ஓதச் சொன்னார்கள்” - பஹல்காம் பயங்கரம் பகிர்ந்த மகள்

சம்பவ இடத்தில் பாதுகாப்பு படையினர்.

ஸ்ரீநகர்: “துப்பாக்கிச் சூட்டுக்கு முன்பாக இஸ்லாமிய வாசகத்தை ஓதுமாறு எனது தந்தையை பயங்கரவாதிகள் வற்புறுத்தினர். அவர் மறுத்த காரணத்தால் துப்பாக்கியால் சுட்டனர்” என்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் தாக்குதல் பயங்கரத்தை இளம்பெண் ஒருவர் விவரித்துள்ளார்.

காஷ்மீருக்கு சுற்றுலா நிமித்தமாக சென்றுள்ளனர் புனேவை சேர்ந்த சந்தோஷின் குடும்பம். அவர்கள் பஹல்காம் பகுதியில் உள்ள பைசரன் பள்ளத்தாக்குக்கு செவ்வாய்க்கிழமை சென்றபோது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி உள்ளனர். அப்போது அவர்கள் அந்தப் பகுதியில் இருந்த கூடாரம் ஒன்றில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

அங்கு வந்த பயங்கரவாதிகள், பெண்கள் மற்றும் குழந்தைகளை விடுத்து சந்தோஷை வெளிவருமாறு அழைத்துள்ளனர். அவரிடம் இஸ்லாமிய வாசகத்தை ஓதுமாறு தீவிரவாதிகள் வற்புறுத்தி உள்ளனர். அதற்கு அவர் மறுப்பு தெரிவிக்க தலை, காது மற்றும் முதுகு பகுதியில் மூன்று முறை துப்பாக்கியால் சுட்டுள்ளனர். சந்தோஷின் உறவினர் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடந்துள்ளதாக கொல்லப்பட்டவரின் மகள் கூறியுள்ளார்.

“எனது பெற்றோருடன் சேர்ந்து நாங்கள் மொத்தம் ஐந்து பேர் காஷ்மீர் வந்திருந்தோம். செவ்வாய்க்கிழமை அன்று நாங்கள் பஹல்காம் பகுதிக்கு அருகே உள்ள பைசரன் பள்ளத்தாக்குக்கு வந்தபோது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். தாக்குதல் நடத்தியவர்கள் உள்ளூரை சேர்ந்த காவல் அதிகாரிகளை போல சீருடை அணிந்திருந்தனர்.

துப்பாக்கி குண்டுகளின் சப்தம் கேட்டதும் நாங்கள் அருகில் இருந்த கூடாரம் ஒன்றில் தஞ்சம் அடைந்தோம். எங்களுடன் வேறு சில சுற்றுலா பயணிகளும் வந்திருந்தனர். முதலில் பயங்கரவாதிகள் மற்றும் பாதுகாப்பு படையினருக்கு இடையில் தாக்குதல் நடக்கிறது என நினைத்தோம். ஆனால், எங்களுக்கு அருகில் இருந்த கூடாரத்துக்கு வந்த தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.

தொடர்ந்து எங்கள் கூடாரத்துக்கு வந்தனர். என் அப்பாவை வெளியில் வருமாறு அழைத்தனர். பிரதமர் மோடிக்கு ஏன் ஆதரவு தருகிறீர்கள் என பழித்தனர். அதன் பின்னர் அப்பாவி மக்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளை காஷ்மீர் தீவிரவாதிகள் கொல்ல மாட்டோம் என கூறினர்.

பின்னர் இஸ்லாமிய வாசகத்தை ஓதுமாறு என் அப்பாவிடம் கூறினர். அவர் மறுத்த காரணத்தால் மூன்று முறை அவரை துப்பாக்கியால் சுட்டனர். அவர் அப்படியே சரிந்து விழுந்தார். என் அருகே இருந்த உறவினரையும் பலமுறை சுட்டனர். இந்த தாக்குதல் பிற்பகல் 3.30 மணி அளவில் நடைபெற்றது. பின்னர் அங்கிருந்து நாங்கள் மீட்கப்பட்டோம். எங்களுக்கு மருத்துவ சோதனை நடத்தப்பட்டது” என வேதனையுடன் சந்தோஷின் மகள் அசவரி தெரிவித்துள்ளார். இந்தத் தகவலை தொலைபேசி வழியாக தனியார் செய்தி நிறுவனத்துக்கு அவர் பகிர்ந்தார்.

பஹல்காமில் நடந்தது என்ன? - ஜம்மு காஷ்மீரின் அனந்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காம் மலைப் பகுதியில், சுற்றுலாப் பயணிகள் சிலரை ராணுவ உடையில் வந்த பயங்கரவாதிகள் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணியளவில் சுற்றி வளைத்தனர். அவர்களிடம் பெயர் மற்றும் மதத்தை பயங்கரவாதிகள் கேட்டு துப்பாக்கிச் சூடு நடத்தினர். துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதும், சுற்றுலாப் பயணிகள் இங்கும், அங்கும் ஓடினர். திறந்தவெளி என்பதால், சுற்றுலாப் பயணிகளால் துப்பாக்கி சூடு தாக்குதலில் இருந்து தப்பிக்க முடியவில்லை.

இந்தத் தாக்குதலில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உட்பட 28 பேர் உயிரிழந்தனர், பலர் காயம் அடைந்தனர். இது பயங்கரவாதிகள் திட்டமிட்டு நடத்திய தாக்குதல் போல் தெரிகிறது. பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்திய இடத்துக்கு பாதுகாப்பு படையினர் விரைந்து சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். காயம் அடைந்தவர்களை உள்ளூர் மக்கள் குதிரைகள் உதவியுடன் மீட்டு அழைத்துவந்தனர். அதன்பின் அங்கு ராணுவ ஹெலிகாப்டர்கள் அனுப்பி வைக்கப்பட்டு காயம் அடைந்தோர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

முன்னதாக, காஷ்மீரின் புல்வாமா பகுதியில் சிஆர்பிஎப் வீரர்கள் மீது பயங்கரவாதிகள் 2019-ல் நடத்திய தாக்குதலில் 47 வீரர்கள் உயிரிழந்தனர். அதன்பின் பயங்கரவாதிகள் நடத்திய மிகப் பெரிய தாக்குதல் இது. அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், இந்த தீவிரவாத தாக்குதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது கவனிக்கத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x