Last Updated : 23 Apr, 2025 08:36 AM

2  

Published : 23 Apr 2025 08:36 AM
Last Updated : 23 Apr 2025 08:36 AM

Pahalgam Terror Attack: அவசரமாக நாடு திரும்பிய பிரதமர் மோடி விமான நிலையத்திலேயே ஆலோசனை!

டெல்லி விமான நிலையத்தில் பிரதமர் மோடி ஆலோசனை

புதுடெல்லி: ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 28 பேர் உயிரிழந்த நிலையில், சவுதி அரேபியாவுக்கு இரண்டு நாள் பயணமாக சென்றிருந்த பிரதமர் நரேந்திர மோடி தனது பயணத்தை பாதியிலேயே முடித்துக் கொண்டு நாடு திரும்பினார்.

இன்று (ஏப்.23) காலை சவுதியில் இருந்து புதுடெல்லி விமான நிலையம் வந்தடைந்த பிரதமர் மோடி, விமான நிலைய வளாகத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோருடன் முக்கிய ஆலோசனை மேற்கொண்டார். பின்னர் அங்கிருந்து இல்லத்துக்கு புறப்பட்டார் பிரதமர் மோடி.

இன்று மத்திய அமைச்சரவை மற்றும் முக்கிய பாதுகாப்புத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார் பிரதமர் மோடி. அமைச்சரவை கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அமித் ஷா, காஷ்மீர் சென்றுள்ளார். அங்கிருந்து அவர் டெல்லி திரும்புகிறார். அமெரிக்கா சென்றுள்ள நிர்மலா சீதாராமனும் நாடு திரும்புகிறார்.

பயங்கரவாதிகளை தேடும் பணி தீவிரம்: இந்த நிலையில், பஹல்காம் பகுதியில் அப்பா மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய பயங்கரவாதிகளை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தரை வழியாக ராணுவ வீரர்கள் தேடுதல் பணியை மேற்கொண்டுள்ளனர். அடர்ந்த மரங்கள் நிறைந்த பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருக்கலாம் என்ற காரணத்தால் ஹெலிகாப்டர் மற்றும் ட்ரோன் மூலம் தேடுதல் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

உலக தலைவர்கள் கண்டனம்: காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ரஷ்ய அதிபர் புதின், இத்தாலி பிரதமர் மெலோனி உள்ளிட்ட உலகத் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். தாங்கள் இந்தியாவின் பக்கம் துணை நிற்பதாக அவர்கள் கூறியுள்ளனர்.

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்தது என்ன? - ஜம்மு காஷ்மீரின் அனந்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காம் மலைப் பகுதியில், சுற்றுலாப் பயணிகள் சிலரை ராணுவ உடையில் வந்த பயங்கரவாதிகள் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணியளவில் சுற்றி வளைத்தனர். அவர்களிடம் பெயர் மற்றும் மதத்தை பயங்கரவாதிகள் கேட்டு துப்பாக்கிச் சூடு நடத்தினர். துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதும், சுற்றுலாப் பயணிகள் இங்கும், அங்கும் ஓடினர். திறந்தவெளி என்பதால், சுற்றுலாப் பயணிகளால் துப்பாக்கி சூடு தாக்குதலில் இருந்து தப்பிக்க முடியவில்லை.

இந்தத் தாக்குதலில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உட்பட 28 பேர் உயிரிழந்தனர், பலர் காயம் அடைந்தனர். இது பயங்கரவாதிகள் திட்டமிட்டு நடத்திய தாக்குதல் போல் தெரிகிறது. பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்திய இடத்துக்கு பாதுகாப்பு படையினர் விரைந்து சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். காயம் அடைந்தவர்களை உள்ளூர் மக்கள் குதிரைகள் உதவியுடன் மீட்டு அழைத்துவந்தனர். அதன்பின் அங்கு ராணுவ ஹெலிகாப்டர்கள் அனுப்பி வைக்கப்பட்டு காயம் அடைந்தோர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

முன்னதாக, காஷ்மீரின் புல்வாமா பகுதியில் சிஆர்பிஎப் வீரர்கள் மீது பயங்கரவாதிகள் 2019-ல் நடத்திய தாக்குதலில் 47 வீரர்கள் உயிரிழந்தனர். அதன்பின் பயங்கரவாதிகள் நடத்திய மிகப் பெரிய தாக்குதல் இது. அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், இந்த தீவிரவாத தாக்குதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது கவனிக்கத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x