Last Updated : 23 Apr, 2025 09:13 AM

1  

Published : 23 Apr 2025 09:13 AM
Last Updated : 23 Apr 2025 09:13 AM

“மன்னிக்கவே முடியாது...” - பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பிரபலங்கள் கண்டனம்

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதி பைசரன் பள்ளத்தாக்கில் சுற்றுலாப் பயணிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு பிரபலங்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இது குறித்து பிரபலங்கள் தங்கள் சமூக வலைதளங்களில் பகிந்தவை:

கமல்ஹாசன்: “பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறேன். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு என்னுடைய அனுதாபங்கள். காயமடைந்தவர்களுக்கு வலிமையும் மீட்சியும் கிடைக்க வாழ்த்துகிறேன். துக்கத்திலும், உறுதியிலும், சட்டம், ஒழுங்கு மற்றும் தேசிய பாதுகாப்பை நிலைநிறுத்துவதற்கான நமது உறுதிப்பாட்டிலும் இந்தியா ஒற்றுமையாக நிற்கிறது.”

அக்‌ஷய் குமார்: “பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலை அறிந்து அதிர்ச்சியடைந்தேன். இதுபோன்ற அப்பாவி மக்களைக் கொல்வது மிகப் பெரிய கொடுமை. அவர்களது குடும்பங்களுக்கு என்னுடைய பிரார்த்தனைகள்.”

இயக்குநர் மதுர் பண்டார்கர்: “பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதலால் நான் மிகவும் வருத்தமடைந்தேன். அப்பாவி உயிர்களைக் குறிவைப்பது மிகவும் துயரமானது மற்றும் வருந்தத்தக்கது. குடும்பத்தினருக்கும் அன்புக்குரியவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.”

சஞ்சய் தத்: “அவர்கள் நம் மக்களை இரக்கமற்ற முறையில் கொன்றுள்ளனர். இதை மன்னிக்கவே முடியாது. நாம் அமைதியாக இருக்கமாட்டோம் என்பதை இந்த பயங்கரவாதிகள் அறிந்து கொள்ள வேண்டும். நாம் பதிலடி கொடுக்க வேண்டும். பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் அவர்களுக்கு தகுதியானதை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.”

சோனு சூட்: “நாகரிக உலகில் பயங்கரவாதத்துக்கு எந்த இடமும் இருக்கக் கூடாது. இந்தக் கொடூரமான செயலை ஏற்றுக்கொள்ள முடியாது. தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனைகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.”

இந்திய கிரிக்கெட் அணி பயிற்சியாளர் கவுதம் கம்பீர்: “இறந்தவர்களின் குடும்பங்களுக்காக பிரார்த்தனை செய்கிறேன். இதற்கு காரணமானவர்கள் விலை கொடுப்பார்கள். இந்தியா திருப்பி அடிக்கும்.”

ரவீனா டாண்டன்: “ஓம் சாந்தி. ஆழ்ந்த இரங்கல்கள். வேதனையை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை. பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரார்த்தனைகளும் பலமும் கிடைக்கட்டும். நாம் அனைவரும் நம் வீட்டிற்குள் நடக்கும் அற்ப சண்டைகளை விட்டுவிட்டு, ஒன்றுபட்டு உண்மையான எதிரியை தெரிந்துகொள்ளும் நேரம் இது.”

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்தது என்ன? - ஜம்மு காஷ்மீரின் அனந்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காம் மலைப் பகுதியில், சுற்றுலாப் பயணிகள் சிலரை ராணுவ உடையில் வந்த பயங்கரவாதிகள் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணியளவில் சுற்றி வளைத்தனர். அவர்களிடம் பெயர் மற்றும் மதத்தை பயங்கரவாதிகள் கேட்டு துப்பாக்கிச் சூடு நடத்தினர். துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதும், சுற்றுலாப் பயணிகள் இங்கும், அங்கும் ஓடினர். திறந்தவெளி என்பதால், சுற்றுலாப் பயணிகளால் துப்பாக்கி சூடு தாக்குதலில் இருந்து தப்பிக்க முடியவில்லை.

இந்தத் தாக்குதலில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உட்பட 28 பேர் உயிரிழந்தனர், பலர் காயம் அடைந்தனர். இது பயங்கரவாதிகள் திட்டமிட்டு நடத்திய தாக்குதல் போல் தெரிகிறது. பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்திய இடத்துக்கு பாதுகாப்பு படையினர் விரைந்து சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். காயம் அடைந்தவர்களை உள்ளூர் மக்கள் குதிரைகள் உதவியுடன் மீட்டு அழைத்துவந்தனர். அதன்பின் அங்கு ராணுவ ஹெலிகாப்டர்கள் அனுப்பி வைக்கப்பட்டு காயம் அடைந்தோர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

முன்னதாக, காஷ்மீரின் புல்வாமா பகுதியில் சிஆர்பிஎப் வீரர்கள் மீது பயங்கரவாதிகள் 2019-ல் நடத்திய தாக்குதலில் 47 வீரர்கள் உயிரிழந்தனர். அதன்பின் பயங்கரவாதிகள் நடத்திய மிகப் பெரிய தாக்குதல் இது. அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், இந்த தீவிரவாத தாக்குதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது கவனிக்கத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x