Published : 20 Apr 2025 06:24 AM
Last Updated : 20 Apr 2025 06:24 AM
யாத்திரிகள், சுற்றுலா பயணிகளை குறிவைத்து ஆன்லைன் மோசடிகள் நடைபெறுது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
புனித பயணம் மற்றும் சுற்றுலா செல்வோர் அதன் விவரங்களை ஆன்லைனில் தேடுகின்றனர். இதைப் பயன்படுத்தி ஆன்லைன் மோசடி கும்பல்கள் போலி இணையதளங்களை தொடங்கியுள்ளனர். சிலர் சமூக ஊடகங்கள் மூலம் போலி விளம்பரங்கள் வெளியிடுகின்றனர்.
கேதார்நாத் போன்ற இடங்களுக்கு ஹெலிகாப்டர் பயணம், சார் தாம் யாத்திரைக்கான தங்கும் விடுதி, டாக்ஸி போன்றவற்றுக்கு ஏற்பாடு செய்து தருவதாக போலி விளம்பரங்கள் அதிகளவில் வெளியாகின்றன. கூகுள் சியர்ச் மூலம் சுற்றுலா விவரங்களை தேடினால், போலி விளம்பரங்கள் மற்றும் இணையதளங்கள் குறுக்கிடுகின்றன.
இதன் மூலம் பலர் பணம் செலுத்தி ஏமாற்றம் அடைகின்றனர். அதனால் அதிகாரப்பூர்வ இணையதளமா என்பதை உறுதிசெய்தபின் பணம் செலுத்தும்படி யாத்திரிகள் மற்றும் சுற்றுலா பயணிகளை மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. கேதார்நாத் ஹெலிகாப்டர் பயணத்துக்கு heliyatra.irctc.co.in, தங்கும் இடங்களை முன்பதிவு செய்ய சோம்நாத் அறக்கட்டளையின் அதிகாரப்பூர்வமான இணையதளம் somnath.org போன்றவற்றை யாத்திரிகள் பயன்படுத்தலாம்.
யாத்திரிகள், சுற்றுலா பயணிகளை குறிவைத்து நடைபெறும் மோசடிகளை தடுக்க சைபர்கிரைம் ஒருங்கிணைப்பு மையம் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. போலி இணையதளங்கள், சமூக ஊடகங்களில் வெளியாகும் போலி விளம்பரங்கள் கண்டறியப்பட்டு முடக்கப்படுகின்றன. மோசடிகள் பற்றி தேசிய சைபர்கிரைம் இணையதளத்தில் தெரிவிக்கும்படியும் மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT