Published : 19 Apr 2025 08:36 AM
Last Updated : 19 Apr 2025 08:36 AM
புதுடெல்லி: மகாராஷ்டிராவில் 1 முதல் 5 வகுப்புகளுக்கு இந்தி கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இதற்கு சிவசேனா (உத்தவ்), எம்என்எஸ் ஆகிய கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மகாராஷ்டிராவில் சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே), தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார்) ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் பாஜக ஆட்சி நிலவுகிறது.
இந்நிலையில் இம்மாநில அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5 வகுப்புகளுக்கு மூன்றாவது மொழியாக, இந்தி கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய கல்விக் கொள்கை 2020-ன்படி வெளியான இந்த அறிவிப்புக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
முக்கிய எதிர்க்கட்சியான சிவசேனா (உத்தவ்) செய்தித் தொடர்பாளர் சஞ்சய் ராவத் கூறும்போது, "அரசு அலுவல் மொழியாக மராத்தி இருக்கையில் இந்தி போதிக்கத் தேவையில்லை. முதலில் மராத்தியை முழுமையாக கட்டாயமாக்குங்கள்.
பணி, தொழில் மற்றும் வியாபாரங்களில் முதலில் மராத்திக்கு மதிப்பு கிடைப்பது அவசியம். இந்தி மொழியின் பாலிவுட் பட உலகம் இங்குதான் உள்ளது. இந்தி மொழிப் பாடல்களை நாம் ஏற்கெனவே பாடுகிறோம். இதன் பிறகுமா எங்களுக்கு இந்தி போதிக்கிறீர்கள்?
தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, வடகிழக்கு என தேவைப்படும் மாநிலங்களில் இந்தியை போதியுங்கள். மகாராஷ்டிராவில் மராத்திதான் முதல் தேவை. இந்தி மீதான காதல் நாடு முழுவதிலும் உள்ளபோது அதை பள்ளிப் பாடங்களில் திணிக்க வேண்டிய அவசியமில்லை" என்றார்.
மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா (எம்என்எஸ்) தலைவர் ராஜ் தாக்கரே கூறும்போது, "என்டிஏ அரசின் இந்தி கட்டாயத்தை எங்கள் கட்சி ஏற்காது. நாடு முழுவதிலும் இந்திமயமாக்கும் மத்திய அரசின் முயற்சியை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். நாங்கள் இந்துக்கள்தானே தவிர இந்திக்காரர்கள் அல்ல" என்றார்.
இப்புகார்கள் குறித்து துணை முதல்வர் அஜித் பவார் கூறுகையில் “நமது தாய்மொழியான மராத்திக்கு எப்போதும் முதல் முன்னுரிமை உண்டு. வேறு எதுவும் செய்ய முடியவில்லை என்பதால் சிலர் இந்தியை பிரச்சினையாக்குகிறார்கள். நாட்டில் ஆங்கிலம் போல இந்தியும் பரவலாக பயன்பாட்டில் உள்ளது” என்றார்.
இதற்கிடையில் மத்திய அரசின் என்சிஇஆர்டி நூல்களின் பெயர்களும் சர்ச்சைக்கு உள்ளாகிவிட்டது. ஆங்கில வழி புத்தகங்களுக்கு சந்தூர், மிருதங், பூர்வி என இந்தியில் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதற்கும் பல மாநிலங்களில் எதிர்ப்பு கிளம்பி வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT