Published : 19 Apr 2025 06:22 AM
Last Updated : 19 Apr 2025 06:22 AM
பிரதமர் நரேந்திர மோடியுடன் அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க் தொலைபேசியில் நேற்று முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினார்.
கடந்த ஜனவரியில் அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்றார். அவரின் மூத்த ஆலோசகராக தொழிலதிபர் எலான் மஸ்க் செயல்படுகிறார். ட்ரம்புக்கு பதிலாக எலான் மஸ்கே ஆட்சியை நடத்தி வருகிறார் என்று அமெரிக்க ஊடகங்கள் தொடர்ச்சியாக செய்திகளை வெளியிட்டு வருகின்றன.
அமெரிக்காவில் ஸ்பேஸ்எக்ஸ் விண்வெளி நிறுவனம், டெஸ்லா கார் தயாரிப்பு நிறுவனம் என பல்வேறு முன்னணி நிறுவனங்களை மஸ்க் நடத்தி வருகிறார். இந்தியாவில் டெல்லி, மும்பை நகரங்களில் டெஸ்லா கார் நிறுவனத்தின் விற்பனையகங்கள் விரைவில் திறக்கப்பட உள்ளன. மேலும் இந்தியாவில் டெஸ்லா கார் உற்பத்தி ஆலையை தொடங்கவும் மஸ்க் முடிவு செய்துள்ளார். ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் ஸ்டார்லிங்க் தொலைத்தொடர்பு சேவையை வழங்கவும் அவர் திட்டமிட்டு உள்ளார்.
இந்த சூழலில் பிரதமர் நரேந்திர மோடியுடன் அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க் நேற்று தொலைபேசியில் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினார். இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
இந்த ஆண்டின் தொடக்கத்தில் வாஷிங்டனில் நாங்கள் சந்தித்துப் பேசினோம். அப்போது பேசிய விஷயங்கள் உட்பட பல்வேறு அம்சங்கள் குறித்து இருவரும் ஆலோசித்தோம். தொழில்நுட்பம், புத்தாக்கக் கண்டுபிடிப்பு ஆகிய துறைகளில் இணைந்து செயல்படுவதற்கான வாய்ப்புகள் குறித்து விரிவாக விவாதித்தோம். இந்தத் துறைகளில் அமெரிக்காவுடனான ஒத்துழைப்பை மேம்படுத்த இந்தியா உறுதிபூண்டிருக்கிறது. இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது: அமெரிக்கா, சீனா இடையே வர்த்தக போர் நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் பெரும்பாலான அமெரிக்க நிறுவனங்கள், ஐரோப்பிய நிறுவனங்கள் இந்தியாவில் புதிய ஆலைகளை தொடங்கி வருகின்றன. இந்த வரிசையில் அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்கின் டெஸ்லா கார் உற்பத்தி ஆலை இந்தியாவில் தொடங்கப்பட உள்ளது. இந்திய நிறுவனங்களுடன் இணைந்து ஸ்டார்லிங்க் தொலைத்தொடர்பு சேவையை வழங்கவும் மஸ்க் திட்டமிட்டு உள்ளார்.
கடந்த ஆண்டு ஆண்டு டாடா குழுமத்தின் டிஏஎஸ்எல் நிறுவனம் தயாரித்த உளவு செயற்கைக்கோள், எலான் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் பெல்கான் 9 ராக்கெட் மூலம் அமெரிக்காவில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
மேலும் டாடா குழுமத்துடன் இணைந்து உளவு செயற்கைக்கோள்களை தயாரிக்கவும் எலான் மஸ்க் முன்வந்திருக்கிறார். இந்த கூட்டு முயற்சி, சீனாவின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள உதவிகரமாக இருக்கும்.
டாடா குழுமம், மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்க உள்ள உளவு செயற்கைக்கோள்கள் மூலம் சீன படைகளின் நடமாட்டத்தை மித் துல்லியமாக கண்காணிக்க முடியும். மேலும் உளவு செயற்கைக்கோள்கள் மூலம் பூமியில் ஆளில்லாத கனரக வாகனங்கள், ட்ரோன்களை இயக்க முடியும். இந்த திட்டங்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோடியுடன் அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க் விரிவாக ஆலோசனை நடத்தியிருக்கிறார். இவ்வாறு மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT