Published : 17 Apr 2025 12:18 PM
Last Updated : 17 Apr 2025 12:18 PM

“வக்பு சட்டம் அரசியலமைப்புக்கு விரோதமானது” - கேரள முதல்வர் பினராயி விஜயன் சாடல்

பினராயி விஜயன் | கோப்புப்படம்

திருவனந்தபுரம்: வக்பு (திருத்தம்) சட்டத்தின் மூலம் ராஷ்ட்ரீய ஸ்வயம் சங் (ஆர்எஸ்எஸ்) மற்றும் பாரதிய ஜனதா கட்சி (பாஜக) அரசியல் ஆதாயம் பெற முயற்சிக்கிறது என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், புதிய சட்டம் அரசியலமைப்புக்கு எதிரானது, பாரபட்சமானது என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

முதல்வர் பினராயி விஜயன் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய போது கூறியாதவது: முனம்பம் மக்களின் பிரச்சினை என்னவென்றால், அவர்கள் மிக நீண்ட காலமாக அங்கே வசித்து வருகிறார்கள். அங்குள்ள முக்கியமான பிரச்சினை அம்மக்கள் அங்கிருந்து வெளியேற விரும்பவில்லை. நீண்டகாலமாக அங்கே வசித்து வருவதால் அவர்களின் உரிமைகளை பாதுகாக்க அரசு முன்னுரிமை அளித்தது. அவர்களின் பிரச்சினைகளை ஆராயவும், அதனை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பதை ஆய்வு செய்யவும் குழு அமைக்கப்பட்டுள்ளது.

சிலர் அவர்களிடம் சென்று பேசிய பின்பு இந்தப் பிரச்சினை எழுந்துள்ளது. இதில் முக்கியமாக பார்க்க வேண்டிய விஷயம் என்னவென்றால் இந்த விவகாரம் வக்புடன் தொடர்புடையது. சிலர் இதில் எவ்வாறு குழப்பத்தை உண்டாக்கி, ஆதயம் பெறலாம் என்று நினைக்கின்றனர். அதாவது குட்டையைக் குழப்பி மீன்பிடிப்பது எனச் சொல்வது போல ஆர்எஸ்எஸின் மிக முக்கியமான செயல்திட்டம் பாஜகவிடம் உள்ளது. முனம்பம் பிரச்சினைக்கு வக்பு திருத்த சட்டத்தில் தீர்வு இருக்கிறது என்று சிலர் சொல்கிறார்கள். இது பொய் என்பது இப்போது அம்பலமாகியுள்ளது. புதியச் சட்டம் அரசியலமைப்பின் பிரிவு 26- ஐ மீறுகிறது.

சட்டத்தின் எந்தப் பிரிவு முனம்பம் பிரச்சினைக்கு தீர்வு காண்கிறது என்று அவர்கள் தெளிவுபடுத்தவில்லை. இறுதியாக, மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜுவை இங்கே அழைத்துவந்து பேச வைத்தது அதை அரசியல் ரீதியாக பயன்படுத்திக்கொள்வதற்கான முயற்சி. ஆனால் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் தற்செயலாக உண்மையை உடைத்து விட்டார். வக்பு திருத்தச் சட்டதாலும் முனம்பம் மக்களுக்கு நீதி கிடைக்காது என்று அவர் ஒப்புக்கொண்டுள்ளார். பிரச்சினையைத் தீர்க்க உச்ச நீதிமன்றத்தில் போராட்டம் நடத்த வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

வக்பு சட்டம் நம் நாட்டின் மத நம்பிக்கை மற்றும் கூட்டாட்சி தத்துவத்தை மீறுகிறது. முஸ்லிம்களை ஓரங்கட்டுவதற்கான வாய்ப்பாகவும் அதன் மூலம் அரசியல் ஆதாயம் பெறுவதற்கான வாய்ப்பாகவும் ஆர்எஸ்எஸ் இதைப் பார்க்கிறது. இது முஸ்லிம்களுக்கு மட்டும் எதிரானது என்று நான் முன்பே கூறியிருந்தேன். அதையேதான் அவர்களின் ஆர்கனைஸர் கட்டுரையும் இப்போது உறுதிப்படுத்தியுள்ளது. ஒன்றை மறந்து விடாதீர்கள், ஆர்எஸ்எஸ் சிறுபான்மையினரை உள்நாட்டு எதிரிகளாக கருதுகிறது. முஸ்லிம்கள், கிறிஸ்தவர்களை மட்டுமே அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இதுதான் அவர்களின் அணுகுமுறை.

மத்திய அரசு சிறுபான்மையினருக்கு எதிரான, பெரும்பான்மையினரைத் திருப்திப்படுத்தும் ஒரு சட்டத்தைக் கொண்டுவந்துள்ளது. அதனால்தான் கேரள சட்டப்பேரவை அச்சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இடதுசாரிக் கட்சிகளும் அச்சட்டத்தை நாடாளுமன்றத்தில் எதிர்த்தனர்" என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x