Published : 17 Apr 2025 08:22 AM
Last Updated : 17 Apr 2025 08:22 AM
நாசிக்: நாசிக் நகரிலுள்ள தர்கா இடிக்கப்பட்டபோது நடந்த வன்முறைச் சம்பவத்தில் 21 போலீஸார் காயமடைந்தனர். மகாராஷ்டிர மாநிலம் நாசிக் நகரின் காத்தேகள்ளி பகுதியில் சட்டவிரோதமான முறையில் சத்பீர் தர்கா என்ற பெயரில் தர்கா உள்ளது. இதையடுத்து அந்த தர்காவை இடித்து அகற்ற நாசிக் நகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டது. இதற்கு எதிராக மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. ஆனால், தர்காவை இடித்து அகற்றலாம் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு தர்காவை இடிக்க நாசிக் நகராட்சி அதிகாரிகளும், ஊழியர்களும் வந்தனர். இதையடுத்து அங்கு திரண்ட ஒரு கும்பலைச் சேர்ந்தவர்கள், தர்காவை இடிக்க எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து போலீஸார் அங்கு குவிக்கப்பட்டனர். இதனால் ஆத்திரமடைந்த கும்பல் போலீஸார் மீது கல்வீசி தாக்குதல் நடத்த முயன்றனர்.
போலீஸ் அதிகாரிகள் மீதும், சமாதானம் செய்யச் சென்ற முஸ்லிம்கள் தலைவர்கள் மீதும் சரமாரியாக கற்கள் வீசப்பட்டன. இதனால் போலீஸார் தடியடி நடத்தி கூட்டத்தினரை கலைத்தனர். மேலும் கண்ணீர் புகைக்குண்டுகளையும் வீசினர். இதைத் தொடர்ந்து அந்த கும்பல் கலைந்து ஓடியது.
இந்த வன்முறை சம்பவம் தொடர்பாக 15 பேரை போலீஸார் பிடித்து விசாரித்து வருகின்றனர். கல்வீச்சுத் தாக்குதலில் 21 போலீஸார் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். அப்பகுதியில் கூடுதல் போலீஸார் குவிக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
இதுகுறித்து நாசிக் நகர போலீஸ் கமிஷனர் சந்தீப் கார்னிக் கூறும்போது, “உயர் நீதிமன்ற உத்தரின் பேரில் சத்பீர் தர்கா இடித்து அகற்றப்பட்டது. இதற்கு தர்கா நிர்வாகிகளும் ஒத்துழைப்பு அளித்தனர். ஆனால், திடீரென ஒரு கும்பல் உள்ளே புகுந்து கல்வீசி, வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டது. இதில் 3 போலீஸ் வாகனங்கள் சேதமடைந்தன” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT