Published : 16 Apr 2025 05:13 PM
Last Updated : 16 Apr 2025 05:13 PM

இந்து அறக்கட்டளையில் முஸ்லிம்களை அனுமதிப்பீர்களா? - வக்பு சட்ட வழக்கில் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி

புதுடெல்லி: ‘இந்து அறநிலையத் துறை சட்டப்படி இந்துக்கள் மட்டுமே அதன் நிர்வாகிகளாக நியமிக்கப்படுகிறார்கள். இந்நிலையில், வக்பு சட்டத்தில் மட்டும் ஏன் புதிய நடைமுறை பின்பற்றப்படுகிறது? அப்படியெனில், இனிமேல் இஸ்லாமியர்களை இந்து அறக்கட்டளைகளில் உறுப்பினர்களாக அனுமதிப்பீர்களா?’ என வக்பு சட்டத்துக்கு எதிரான வழக்குகளில் மத்திய அரசிடம் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

மக்களவையில் கடந்த ஏப்.2-ம் தேதி வக்பு திருத்த மசோதா (ஒருங்கிணைந்த வக்பு மேலாண்மை, அதிகாரமளித்தல், திறன் மற்றும் மேம்பாடு) நிறைவேற்றப்பட்டது. அடுத்த நாளில் மாநிலங்களவையில் மசோதா நிறைவேற்றப்பட்டது. கடந்த 5-ம் தேதி குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கினார். கடந்த 8-ம் தேதி வக்பு திருத்த சட்டம் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வந்தது.

இந்தச் சட்டத்தை எதிர்த்து காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி, சமாஜ்வாதி, ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் மற்றும் முஸ்லிம் அமைப்புகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்தன. மத்திய அரசு சார்பில் கடந்த 8-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், வக்பு திருத்த சட்டத்துக்கு எதிரான வழக்கில் தங்களை கலந்தாலோசிக்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என்று மத்திய அரசு கோரியிருந்தது.

இந்நிலையில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையில், நீதிபதிகள் சஞ்சய் குமார் மற்றும் கே.வி. விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வில், வக்பு சட்டத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட 73 மனுக்களும் இன்று விசாரணைக்கு வந்தன. விசாரணையின் தொடக்கத்தில், மனுதாரர்களிடம் தலைமை நீதிபதி, ‘இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரிக்க வேண்டுமா? அல்லது உயர் நீதிமன்றத்துக்கு அனுப்ப வேண்டுமா? வழக்கை உச்ச நீதிமன்றமே விசாரிக்க வேண்டுமெனில், இந்த சட்டத் திருத்தம் அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்று கூறுவதற்கான காரணங்கள் என்னென்ன?’ என்று கேள்வி எழுப்பினார்.

அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், ‘புதிய சட்டத்தின் பல விதிகள், மத சுதந்திரத்துக்கு உத்தரவாதம் அளிக்கும் அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 26-ஐ கேள்விக்குள்ளாக்குகிறது. அதேபோல், புதிய சட்டம் மாவட்ட ஆட்சியருக்கு அதிகாரங்களை அளிக்கிறது. மாவட்ட ஆட்சியர் அரசின் ஓர் அங்கம் தான் என்றபோதிலும், அவர் ஒரு நீதிபதியைப் போல செயல்பட்டுவது அரசியலமைப்புக்கு எதிரானது.

ஒரு சொத்து, அதற்கான முறையான ஆவணங்கள் இல்லாத போதும், மதம் மற்றும் அறக்கட்டளை நோக்கங்களுக்காக நீண்ட காலமாக பயன்படுத்தப்பட்டிருந்தால், அது வக்பு சொத்தாக கருதப்படும். ஆனால், இது அரசு மற்றும் சர்ச்சைக்குரிய நிலமாக இருக்கும் பட்சத்தில் இந்த விதி பொருந்தாது என்று புதிய சட்டத்தில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. வக்பு சொத்துகள் இஸ்லாத்தின் ஒரு பகுதி. இப்போது சிக்கல் என்னவென்றால், வக்பு 3000 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்டிருந்தால், அதற்கு இவர்கள் பத்திரம் கேட்பார்கள்’ என்று கூறினார்.

மற்றொரு மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி, ‘மொத்தமுள்ள 8 லட்சம் வக்பு சொத்துகளில் 4 லட்சம் செத்துகள் பயன்பாடு மூலம் வக்பு என அறிவிக்கப்பட்ட சொத்துகள்’ என்றார். அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, ‘டெல்லி உயர்நீதிமன்றம் வக்பு இடத்தில் கட்டப்பட்டுள்ளது என்று சொல்லப்பட்டுள்ளது. பயன்பாடு மூலம் வக்பு என அறிவிக்கப்படும் அனைத்தும் தவறு என்று நாங்கள் சொல்லவில்லை. ஆனால், அதில் நியாயமான கவலை உள்ளது’ என்றார். பின்னர் தொடர்ந்த வாதிட்ட சிங்வி, ‘ஒட்டுமொத்த சட்டத்துக்கும் இல்லாமல் சில விதிகளுக்கு தடை உத்தரவு அளிக்க வேண்டும்’ என்று கோரினார்.

மத்திய அரசு சார்பில் ஆஜரான செலிசிடர் ஜெனரல் துஷார் மேத்தா, ‘இந்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் விரிவான விவாதங்கள் நடத்தப்பட்ட பின்னரே நிறைவேற்றப்பட்டது. நாடாளுமன்ற கூட்டுக்குழுவும் சட்டத்தை ஆராய்ந்தது. அதன் பின்பு இரண்டு அவைகளிலும் சட்டம் நிறைவேற்றப்பட்டது’ என்று தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து துஷார் மேத்தாவிடம், ‘புதிய சட்டத்தின் பயன்பாடு மூலம் வக்பு என அறிவிக்கப்பட்டுள்ள சொத்துகள் எது என்பதில் கவனம் செலுத்துங்கள். மேலும், பயன்பாடு மூலம் அறிவிக்கப்பட்டுள்ள வக்பு சொத்து என்பது நீதிமன்ற தீர்ப்பு அல்லது வேறு வழிகளில் நிறுவப்பட்டிருந்தால் அது இன்று செல்லாது என்று கூறுகிறீர்களா? வக்பின் ஒரு பகுதியாக இருக்கும் பல மசூதிகள் 13 முதல் 15-ம் நூற்றாண்டுகளில் கட்டப்பட்டவை. அவற்றுக்கு இப்போது ஆவணங்களைத் தருவது சாத்தியமில்லாதது.

நீண்ட காலமாக இருந்து வரும் அந்தப் பயன்பாடு மூலமாக அறிவிக்கப்பட்டுள்ள வக்பு சொத்துகளை நீங்கள் எவ்வாறு பதிவு செய்வீர்கள்? அவர்களிடம் என்ன ஆவணங்கள் இருக்கும்? இது எதையாவது ரத்து செய்ய வழிவகுக்கும். சில தவறான தகவல்களும் அதேநேரம் உண்மையான தகவல்களும் இருக்கின்றன. நான் சில தீர்ப்புகளை ஆய்வு செய்துள்ளேன். பயன்பாடு மூலமாக அறிவிக்கப்பட்டுள்ள வக்பு சொத்துகள் அங்கிகரிக்கப்பட்டுள்ளது. எனவே, அதை நீங்கள் நீக்கினால், அது பிரச்சினைக்கு வழிவகுக்கும்’ என்று தெரிவித்தார்.

மேலும், சொலிசிடர் ஜெனரல் துஷார் மேத்தாவிடம் தலைமை நீதிபதி, ‘இந்து அறநிலையத் துறை சட்டப்படி இந்துகள் மட்டுமே அதன் நிர்வாகிகளாக நியமிக்கப்படுகிறார்கள். இந்நிலையில், வக்பு சட்டத்தில் மட்டும் ஏன் புதிய நடைமுறை பின்பற்றப்படுகிறது? அப்படியெனில், இனிமேல் இஸ்லாமியர்களை இந்து அறக்கட்டளை வாரியங்களில் உறுப்பினர்களாக அனுமதிப்பீர்களா? வக்பு சொத்துகள் எது என்பதை ஆட்சியாளர்கள் முடிவு செய்வது நியாயமா?’ என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை எழுப்பினார்.

மேலும், ‘புதிய சட்டத்தால் பல இடங்களில் வன்முறை நடப்பது மிகவும் வருத்தமாக உள்ளது’ என்று தலைமை நீதிபதி தெரிவித்தார் . அப்போது துஷார் மேத்தா , ‘அவர்கள் அரசுக்கு அழுத்தம் கொடுக்க முடியும் என்று நினைக்கிறார்கள்’ என்றார். அதற்கு கபில் சிபல், ‘யார் அழுத்தம் கொடுக்கிறார்கள் என்று தெரியாது’ என்று பதில் அளித்தார்.

இதையடுத்து, இந்த மனுக்கள் தொடர்பாக மத்திய அரசு பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை நாளை (ஏப்.17) பிற்பகல் 2 மணிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x