Published : 16 Apr 2025 06:49 AM
Last Updated : 16 Apr 2025 06:49 AM

நீதித் துறையில் அரசு தலையிட்டால் என்னவாகும்? - வக்பு திருத்த சட்ட விவகாரத்தில் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு கேள்வி

புதுடெல்லி: நீதித் துறையும் நாடாளுமன்றமும் பரஸ்பரம் மதிப்பளிக்க வேண்டும். ஒருவேளை நீதித் துறையில் அரசு தலையிட்டால் என்னவாகும்? இரு தரப்புகளுக்கான அதிகாரங்கள் தெளிவாக வரையறுக்கப்பட்டிருக்கிறது என்று மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.

வக்பு திருத்த சட்டத்துக்கு எதிரான மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகின்றன. இதுதொடர்பாக தனியார் தொலைக்காட்சிக்கு மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

பல்வேறு ஆய்வுகள், பல்வேறு தரப்பினரின் கருத்துகளை கேட்டறிந்த பிறகே வக்பு திருத்த மசோதா வரையறுக்கப்பட்டது. சுமார் ஒரு கோடி கருத்துகள் கேட்டறியப்பட்டன. நாடாளுமன்ற நிலைக் குழு விரிவான ஆய்வுகளை நடத்தி திருத்தங்களை செய்தது. வேறு எந்த மசோதாவும் இவ்வளவு படிகளை தாண்டியது கிடையாது.

வக்பு சட்ட திருத்த மசோதா, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் சட்டப்பூர்வமாக நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிடாது என்று உறுதியாக நம்புகிறேன். நீதித் துறையும் நாடாளுமன்றமும் பரஸ்பரம் மதிப்பளிக்க வேண்டும். ஒருவேளை நீதித் துறையில் அரசு தலையிட்டால் என்னவாகும்? அது அவ்வளவு நன்றாக இருக்காது. இரு தரப்புகளுக்கான அதிகாரங்கள் தெளிவாக வரையறுக்கப்பட்டிருக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மோடிக்கு நன்றி: கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டம், முனம்பம் பகுதியில் கத்தோலிக்க கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த சுமார் 610 மீனவ குடும்பங்கள் வசிக்கின்றன. இங்கு வசிக்கும் மக்கள், பரூக் கல்லூரி நிர்வாகத்திடம் இருந்து முறைப்படி நிலத்தை வாங்கி வீடுகளை கட்டி உள்ளனர்.

ஆனால் திடீரென வக்பு வாரியம் 610 குடும்பங்களின் நிலங்களை உரிமை கொண்டாடுகிறது. நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வக்பு சட்டத் திருத்தம் மூலம் முனம்பம் பகுதி மக்களின் நிலங்களை, வக்பு வாரியம் இனிமேல் உரிமை கொண்டாட முடியாது என்று கூறப்படுகிறது.

இந்த சூழலில் முனம்பம் பகுதி மக்கள் சார்பில் நேற்று 'மோடிக்கு நன்றி' என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, கேரள பாஜக தலைவர் ராஜீவ் சந்திரசேகர் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் பங்கேற்றனர். இதன்பிறகு கொச்சியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறியதாவது:

மத்திய அரசு முஸ்லிம்களுக்கு எதிராக செயல்படுகிறது என்று பொய் பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. இதில் துளியும் உண்மை கிடையாது. முஸ்லிம் சமுதாயத்துக்கு எதிராக வக்பு திருத்த சட்டம் கொண்டு வரப்படவில்லை. கடந்த கால தவறுகளை களையவே இந்த சட்டம் அமல் செய்யப்பட்டிருக்கிறது. இதன்மூலம் யாருடைய சொத்தையும் வக்பு வாரியத்தால் வலுக்கட்டாயமாக பறிக்க முடியாது.

காங்கிரஸும், கம்யூனிஸ்ட் கட்சிகளும் முஸ்லிம்களை வாக்கு வங்கியாக மட்டுமே பயன்படுத்துகின்றன. அந்த கட்சிகள் முஸ்லிம்களை, வர்த்தக பொருளாக கருதுகின்றன. அவர்களின் முன்னேற்றத்தில் காங்கிரஸுக்கு அக்கறை கிடையாது. வக்பு திருத்த சட்டத்தால் முனம்பம் பகுதி மக்களுக்கு இப்போது நிவாரணம் கிடைத்திருக்கிறது. இதேபோல நாடு முழுவதும் ஏராளமானோர் பயன் அடைந்துள்ளனர். புதிய சட்டத்தால் மக்களின் நில உரிமை பாதுகாக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x